Wednesday, October 25, 2006

நாட்டில் மாலை நேரங்களில் கடும் மழை பெய்து வருகிறது

நாட்டில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக பல பாகங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கி சேமடைந்துள்ளன. கடந்த சில தினங்களாக நாட்டில் மாலை நேரங்களில் கடும் மழை பெய்து வருகிறது. இதனால் பல பிரதேசங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் அதிகமான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. நேற்றைய தினம் இரத்தினபுரி பிரதேசத்திலேயே அதிகளவு மழை பெய்துள்ளது. களனி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் அதனை சூழவுள்ள பிரதேசங்கள் வெள்ள அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன. பேலியகொடை பகுதியில் சுமார் 400க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வத்தளை பிரதேசத்திலும் சில வீடுகள் பாதிப்படையும் நிலை காணப்படுகின்றது. பேருவளை பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் சுமார் பத்து வீடுகள் பாதிக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை, தற்போதைய சீரற்ற காலநிலை இன்னும் சில தினங்களுக்கு தொடருமென வானிலை அவதானநிலையம் தெரிவித்துள்ளது. மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் அவதான நிலையம் தெரிவித்துள்ளது.