Monday, October 23, 2006

புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தானது.

சிறிலங்காவின் ஆளும் சுதந்திரக் கட்சி மற்றும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இடையே இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தானது. அலரி மாளிகையில் மகிந்த மற்றும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் முன்னிலையில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 12.13 மணிக்கு சுதந்திரக்கட்சி சார்பில் பொதுச்செயலாளர் மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்கிரம ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். செப்ரெம்பர் 15 ஆம் நாள் முதல் இரு கட்சிகளிடையேயான பேச்சுக்கள் தொடங்கின. அமைதி முயற்சிகள், தேர்தல் சீர்திருத்தம், நல்லரசு, தேசக் கட்டமைப்பு, கல்வி மற்றும் பொருளாதார அபிவிருத்தி ஆகிய விடயங்களில் இரு கட்சிகளும் இணைந்து செயற்பட 4 சுற்றுப் பேச்சுக்களின் முடிவில் தீர்மானிக்கப்பட்டது. முன்னதாக இன்று காலை 10 மணியளவில் அமைச்சரவையைக் கூட்டி இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மகிந்த ஒப்புதல் பெற்றார்.பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடுவது குறித்து பரிந்துரையை முன்மொழிந்தார். அதனையடுத்து மங்கள சமரவீர இதனை அமைச்சரவைக்குத் தெரிவித்தார்.