சிறீலங்கா விமானப்படையில் சில விமானங்களை உக்கிரேன் விமானிகள் ஓட்டுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ஆய்வுக் கட்டுரையை எழுதியிருக்கும் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சின் மேலதிகச் செயலர் வி.ராமன் சிறீலங்கா வான்படை விமானங்களை சிங்களவர்கள் இயக்குகின்றபோதும் சில விமானங்கள் உக்கிரேன் விமானிகளால் இயக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக கொழும்பில் தங்கியிருக்கும் பாகிஸ்தான் வான்படை அதிகாரிகள் சிறீலங்கா விமானப்படையினருக்கான நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இம்மாத முடிவில் ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் பேச்சுக்களால் யுத்த சூழலைத் தணிக்க முடியாது எனத் தெரிவித்த ராமன் இந்த விடயத்தில் இந்தியா உடனடியாகத் தலையிட்டு சிறீலங்கா அரசாங்கத்தின் வலிந்த வான்படைத் தாக்குதல்களையும் விடுதலைப் புலிகளின் பதில் தாக்குதல்களையும் நிறுத்தி புதிய பேச்சுவார்த்தையை தோற்றுவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.





