எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற்றுக்கொள்ள ஜே.வி.பி. தீவிர முயற்சி; சட்டநிபுணர்களுடன் ஆலோசனை அரசாங்கமும் - ஐ.தே.கட்சியும் இணக்கப்பாட்டுடன் செயற்படுவது தொடர்பாக உடன்படிக்கை கைச்சாத்திடவுள்ள தருணத்தில், பாராளுமன்றத்திற்குள் எதிர்க்கட்சித் தலைமையை தாம் எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது தொடர்பாக ஜே.வி.பி. சட்ட வல்லுனர்களின் ஆலோசனைகளை பெற்றுவருவதாக தெரியவருகிறது. இவ் ஆலோசனைகளின் பிரகாரம் இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைக்குமானால் ஜே.வி.பி.க்கு எதிர்க்கட்சித் தலைமையை பெற்றுக் கொள்ள முடியுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜே.வி.பி.யினர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டாலும் தடையிருக்காதென கூறப்படுகிறது. இதற்கு முன்பு கூட்டணி அமைத்து ஆட்சிகளை உருவாக்கிய வேறு கட்சிகள் சில சந்தர்ப்பங்களில் எதிர்க்கட்சிகளில் இணைந்த சந்தர்ப்பங்கள் உண்டு. அதற்கு சபாநாயகர் வழங்கியுள்ள தீர்ப்புகள் ஜே.வி.பி.க்கு சாதகமாகவுள்ளது. எனவே, எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெறுவதற்கு தடையேற்படாதென்று நீதித்துறையின் முக்கியஸ்தரொருவர் கருத்து தெரிவித்துள்ளார். ஐ.தே.கட்சி அரசுடன் இணைந்து செயற்பட்டாலும் எதிர்க்கட்சியென்ற அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்ள முடிவெடுத்திருப்பது தொடர்பாக பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் பேராசிரியர் விஷ்வ வர்ணபால தெரிவித்துள்ள கருத்தில். இவ்வாறானதொரு நிலைமையில் ஜே.வி.பி.க்கு எதிர்க்கட்சித் தலைமைப்பதவியை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை. அரசாங்கம் - ஐ.தே.கட்சியுடன் உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடும் பட்சத்தில் எதிர்க்கட்சியின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு தீர்மானம் எடுக்கப்படும். இச் சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சித் தலைவர், சபை முதல்வர் மற்றும் பதவிகள் தொடர்பிலும் பாராளுமன்றத்தில் ஆசனங்கள் வழங்கப்படுவதையும் கருத்தில் கொண்டு சபாநாயகர் தீர்மானம் எடுக்க வேண்டிய நிலைமை உருவாகுமென்றும் அமைச்சர் விஷ்வ வர்ணபால தெரிவித்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எல். குணசேகர, அரசும் - ஐ.தே.கட்சியும் கூட்டணி ஆட்சி அமைத்தால் எதிர்க்கட்சித் தலைமைப் பொறுப்பு ஜே.வி.பி.க்கே உரித்தாகுமென்றும் தெரிவித்தார்.





