Monday, October 23, 2006

இரண்டு மாதங்களில் குடாநாட்டில் 134 பேர் சுட்டுக்கொலை;

கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் யாழ். குடாநாட்டில் 134 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் 75 பேர் காணாமல் போயிருப்பதாக அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி முதல் அக்டோபர் முதல் வாரம் வரை யாழ். குடாநாட்டில் 134 பேர் இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 75 பேர் காணாமல் போயுள்ளனர். இதில் 19 பேர் கடத்தப்பட்டுள்ளனர் என்று யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: குடாநாட்டில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக இடம்பெற்று வரும் யுத்த சூழ்நிலை காரணமாக 41 ஆயிரத்து 50 பேர் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்கள் மற்றும் உறவினர் நண்பர்களின் வீடுகளில் சொல்லொணா வேதனையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 3585 குடும்பங்களைச் சேர்ந்த 14 ஆயிரத்து 624 பேர் 53 நலன்புரி நிலையங்களில் அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர். இதில் யாழ். பிரதேச செயலக பிரிவில் 13, சாவகச்சேரியில் 11, நல்லூரில் 7, பருத்தித்துறை, கரவெட்டியில் தலா 8 நலன்புரி நிலையங்கள் இயங்குவதுடன் சகல பிரதேச செயலகங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட நலன்புரி நிலையங்கள் இயங்கி வருகின்றன. குடாநாட்டில் இயங்குகின்ற பெரும்பாலான நலன்புரி நிலையங்கள் பாடசாலை கட்டிடங்களில் இயங்குவதால் பாடசாலைகளை சரிவர நடத்த முடியாமல் அதிபர்கள், ஆசிரியர்கள் பெரும் சிரமப்படுகின்றனர்.