Friday, April 01, 2011

இலங்கைத் தமிழர் விவகாரத்தில் கருணாநிதியின் கையாலாகத் தனத்தால் தமிழகத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை நோக்கிச் செல்லும் ஜெயலலிதா

இலங்கை தமிழர் விடயத்தின் அடிப்படையில், தமிழ்நாடு சட்டப் பேரவை தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அனைத்து இந்திய அண்ணா திராவிட கழகத்தின் கூட்டணி அமோக வெற்றி பெறும் என புதிய கருத்து கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

இந்தியா ருடே, ஹெட்லைன்ஸ் ருடே, மெயில் ருடே ஆகிய பத்திரிகைகள் நடத்திய கருத்துக் கணிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் தேர்தலில் தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கூட்டணியும், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமூல் காங்கிரஸ் கூட்டணியும் ஆட்சியைப் பிடிக்கும் என இந்தியா டுடே கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 13ம் தேதி தொடங்கி மே 10ம் தேதி வரை பல கட்டங்களாக நடக்கவிருக்கும் 5 மாநிலத் தேர்தல்கள் குறித்து பல்வேறு பத்திரிகை, தொலைக்காட்சி மற்றும் கள ஆய்வு நிறுவனங்கள் கருத்துக் கணிப்புகளை நடத்தி வருகின்றன.

இவற்றில் கடந்த வாரம் வெளியான நக்கீரன் கருத்துக் கணிப்பில், தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு 146 இடங்கள் கிடைக்கும் என்றும், அதிமுகவுக்கு 80 இடங்கள் கிடைக்கும் என்றும் 8 இடங்களில் இழுபறி நிலவும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந் நிலையில் இந்தியா டுடே-ஓஆர்ஜி நிறுவனங்கள் இணைந்து மேற்கொண்ட கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதில் தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கூட்டணி 164 தொகுதிகளையும், கருணாநிதி தலைமையிலான திமுக கூட்டணி 68 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. 2 தொகுதிகளில் இழுபறி நிலை நீடிக்கும் என்கிறது இந்தக் கருத்துக் கணிப்பு.

சதவீத அடிப்படையில் பார்த்தால், அதிமுக கூட்டணிக்கு 50 சதவீதத்தினரும், திமுக கூட்டணிக்கு 45 சதவீதத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், இலங்கை தமிழர்கள் தொடர்பில் போதிய செயற்பாட்டை முன்னெடுக்காமை, தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் சந்தித்த அசாதாரண நிலைகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் முன்னெடுக்காமை, போன்ற காரணங்களுக்காக தமிழக மக்கள் கருணாநிதியை இந்த முறை எதிர்ப்பர் என சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் தமிழர்களின் பிரச்சினையை முறையாக கையாள தமிழக அரசாங்கம் தவறிவிட்டது என, இந்த கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட 41 சதவீதமான மக்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இலங்கை தமிழர்களுக்காக போதிய அளவில் கருணாநிதி செயற்பட்டுள்ளார் என 25 சதவீதமானவர்கள் வாக்களித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இலங்கை தமிழர் விவகாரம் தமிழக அரசியலில் செல்வாக்கு செலுத்தாது என அண்மையில் த ரைம்ஸ் ஒப் இந்தியா சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.