Friday, April 01, 2011

முன்னாள் போராளிகள் 206 பேர் இன்று விடுவிக்கப்பட்டனர்!

ஒரு பெண் உட்பட 206 முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் வவுனியாவில் வைத்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் டபிள்யு.பி.கொடிப்பிள்ளை விடுதலை செய்யப்பட்டவர்களை வைபவரீதியாக அவர்களின் பெற்றோர்களிடம் கையளித்தார்.இங்கு உரையாற்றிய அமைச்சின் மேலதிக செயலாளர் கொடிப்பிள்ளை இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களை புனர்வாழ்வு நிலையங்களில் வைத்துப் பாதுகாத்து பராமரித்தது போலவே சமூகத்தில் இணைக்கப்பட்ட பின்னரும், அவர்களுக்கு அரசாங்கம் பாதுகாப்பளித்து, தொழில் வாய்ப்புக்கள், சுயதொழிலுக்கான வங்கிக்கடன் என்பவற்றை வழங்கி உதவுவவதுடன், அவர்களின் பாதகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இவற்றை நல்ல முறையில் பயன்படுத்தி சமூகத்தில் இணைந்துள்ளவர்கள் தமது வாழ்க்கை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

இந்த விடுதலைபற்றி கருத்து வெளியிட்ட புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க, புனர்வாழ்வு நிலையங்களில் இவர்கள் வாழ்வாதாரப் பயிற்சிகள், வாழ்க்கைப் பயிற்சிகள் என்பவற்றைப் பெற்றுள்ளதுடன், உளவளத்துணை ஆற்றுப்படுத்தலுக்கும் உள்ளாகியிருக்கின்றார்கள். இதன் மூலம் சமூகத்தில் இணைந்து வாழ்க்கையை நடத்துவதற்குத் தயாராகியுள்ளளார்கள். இவர்கள் சமூகத்தில் இணைந்த பின்பும் இவர்களை நாங்கள் பராமரித்து பாதுகாப்போம். இதுவரையில் 6000த்துக்கும் மேற்பட்டவர்கள் சமூகத்தில் இணைக்கப்பட்டுள்ளார்கள். இன்னும் 4600 பேர் வரையில் புனர்வாழ்வுப் பயிற்சி பெற்று வருகின்றார்கள் என்றார்.

இந்த வைபத்திற்கு வருகை தந்திருந்த பல பெற்றோர்கள் இன்னும் விடுதலை செய்யப்படாத தமது பிள்ளைகளை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி அமைச்சின் செயலாளரிடமும், அமைச்சின் ஆலோசகர் எம்.எஸ்.சதீஸ்குமாரிடமும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்கவிடமும் விண்ணப்பங்களைக் கையளித்தனர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.