Friday, April 01, 2011

புலிகளுக்கு எதிராக, அமெரிக்கா – இலங்கை இணைந்த செயற்பாட்டு விபரங்கள் வெளியாகின!

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி மற்றும் ஆயுத பரம்பலை கட்டுப்படுத்தும் சர்வதேச நடவடிக்கைகள், கடந்த 2006ம் ஆண்டே ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாக த ஹிந்து பத்திரிகை தெரிவித்துள்ளது.

சமாதான உடன்படிக்கை மீறப்பட்டு, ஏறத்தாழ யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலப்பகுதியில், அமெரிக்காவுடன் இலங்கை கூட்டிணைந்து, விடுதலைப் புலிகளின் நிதி சேகரிப்பு மற்றும் ஆயுதக் கொள்வனவுகளை இடைநிறுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

த ஹிந்து பத்திரிகையின் ஊடாக விக்கிலீக்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதற்காக அமெரிக்க சர்வதேச தொடர்பு குழுக்கள் இரண்டை நியமித்திருந்ததாகவும், அந்த குழுக்கள் இரண்டு நோக்கங்களின் பொருட்டு செயற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஒன்று விடுதலைப் புலிகளின் நிதி சேகரிப்பை முழுமையாக கட்டுப்படுத்துவது, மற்றொன்று விடுதலைப் புலிகள் ஆயுதக் கொள்வனவில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது என்பதே அந்த நோக்கங்களாகும்.

இந்த யோசனையை வரவேற்ற இலங்கை அரசாங்கம், இதன் செயற்படுத்துனராக இந்தியா செயல்படுவதை விரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் இந்த யோசனையில் இணைந்துக் கொள்ள இந்தியாவுக்கு அமெரிக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் என மகிந்த ராஜபக்ஷ் அரசாங்கம் அமெரிக்காவை கோரியிருந்தது

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை இலக்கு வைத்து விடுதலைப் புலிகள் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்க தூதுவர் லன்ஸ்டீட், அமெரிக்க ராஜாங்க திணைக்களத்துக்கு அனுப்பிய ரகசிய தகவல் தந்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தந்தி 2006ம் ஆண்டு மே மாதம் 3ம் திகதி அனுப்பப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக த ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.