தேசிய சமாதானப்பேரவையின் நடவடிக்கைகள் மற்றும் நிதி மூலங்கள் பற்றி சிறிலங்கா இரகசிய குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர் என தேசிய சமாதான பேரவை தெரிவித்துள்ளது. மனித உரிமை விடயங்கள் மற்றும் ஊடக சுதந்திரம் பற்றி கவனம் செலுத்தி வந்த சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களை நாட்டை விட்டு வெளியேற்றிய சிறிலங்கா அரசாங்கம் இவ்விடயங்கள் குறித்து கவனம் செலுத்தி வந்த உள்ளுர் அரசசார்பற்ற நிறுவனமான தேசிய சமாதான பேரவையையும் முடக்குவதற்கு மேற்கொண்டிருக்கும் சதி நடவடிக்கையே இந்த விசாரணை என அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
ஊடகத்துறை மற்றும் மனித உரிமை விவகாரங்களில் தேசிய சமாதானப்பேரவை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும் தேசிய சமாதானப்பேரவையின் செயற்பாடுகளை குழப்புவதற்காக சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் அடக்குமுறை நடவடிக்கையாகும் என தேசிய சமாதானப்பேரவை தெரிவித்துள்ளது.
தங்கள் நடவடிக்கைகள் செலவு விபரங்கள் அனைத்தும் தங்களது இணையத்தளத்தில் விபரமாக வெளியிட்டு வருவதாகவும் அது ஒளிவு மறைவின்றியே இந்த விடயத்தை தாம் கையாள்வதாகவும் தேசிய சமாதான பேரவை தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் பொது அமைப்புக்கள் மற்றும் தனிமனிதர்கள் மீது சிறிலங்கா அரசு ஆதரவு ஆயுதக்குழுக்கள் மேற்கொண்டு வந்த படுகொலைகள் ஆட்கடத்தல்கள் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தி வந்த தேசிய சமாதானப்பேரவையை பழிவாங்குவதற்காகவும் அதன் செயற்பாடுகளை முடக்குவதற்காகவுமே இந்த விசாரணை மேற்கொள்ளப்படுவதாக என்.எவ்.ஆர். (Exile network for media and human rights in srilanka) என்ற மனித உரிமைகளுக்கான ஊடக அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
எந்த முறைப்பாடுகள் குற்றச்சாட்டுக்கள் சாட்சிகள் இல்லாத நிலையில் சிறிலங்கா இரகசிய குற்றப்புலனாய்வு காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் தேசிய சமாதானப்பேரவை மீது விசாரணை நடத்தப்பட வேண்டுமாக இருந்தால் அரசாங்க கணக்காய்வு பிரிவு போன்ற சிவில் அமைப்புகளிடமே விசாரணைகளை கையளிக்க வேண்டும் என்றும் என்.எவ்.ஆர். என்ற மனித உரிமைகளுக்கான ஊடக அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த பலவருடங்களாக ஊடகத்துறை மீதும் மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் அமைப்புக்கள் மற்றும் தனிமனிதர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வந்த போதிலும் அது தொடர்பாக எந்த வித விசாரணைகளையும் மேற்கொள்ளாத சிறிலங்கா அரசாங்கம் மனித உரிமைகளுக்காக செயற்படும் உள்ளுர் அமைப்புக்களை முடக்குவதற்கு முனைத்துள்ளதாக என்.எவ்.ஆர். குற்றம் சாட்டியுள்ளது.
அரசசார்பற்ற நிறுவனங்களை வேட்டையாடும் வேலைகளை அரசாங்கம் தொடர்ந்த வண்ணமே இருப்பதாகவும் இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு சர்வதேச அமைப்புக்கள் சிறிலங்கா அரசாங்கம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் என்.எவ்.ஆர்.அமைப்பு தெரிவித்துள்ளது.
0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.