Sunday, March 13, 2011

அனைத்துலக விசாரணைக்குக் கொண்டு செல்ல விடமாட்டேன் – சிறிலங்கா அதிபர் அமெரிக்காவுக்குப் பதிலடி

எந்தவொரு அரசாங்க அதிகாரியையும் அனைத்துலக நீதிமன்ற விசாரணைகளுக்குக் கொண்டு செல்வதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச.
சிறிலங்காவின் தேசிய தொலைக்காட்சிகளில் நேற்றிரவு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“ என் மீதும் அரசாங்கத்தின் மீதும் குற்றச்சாட்டுகளைச் சுமத்தும் தனிநபர்களும் குழுக்களும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியம் அளிக்க வேண்டும்.

வெள்ளைக்கொடி விவகாரத்தில் இருந்து தான் பெரும்பாலான குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

ஆனால் வெள்ளைக்கொடி விவகாரம் முற்றிலும் பொய்யானது.

அரசாங்கத்துக்கு எதிராகவோ அல்லது எந்தவொரு அரச அதிகாரிக்கு எதிராகவோ எவரேனும் சாட்சியங்களை வைத்திருந்தால் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் அதைச் சமர்ப்பிக்க முடியும்.

ஐ.நா நிபுணர்கள் குழு, அனைத்துலக மன்னிப்புச் சபை, மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் ஆகியவற்றை நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்க அழைத்திருந்தோம்.

ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர்.

என் மீது போர்க்குற்றச்சாட்டுகளைச் சுமத்த சில குழுக்கள் முயற்சிக்கின்றன.

எந்தவொரு அரசாங்க அதிகாரியையும் அனைத்துலக நீதிமன்ற விசாரணைகளுக்குக் கொண்டு செல்வதற்கு நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்.

சிறிலங்காவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவது இதுதான் முதல் முறையல்ல.

இப்போது ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் கூட இரண்டு பெண் மனிதஉரிமை காப்பாளர்கள் சிறிலங்கா அரசுக்கு எதிராக உரையாற்றியுள்ளனர்.

சில வெளிநாடுகளும், அனைத்துலக உதவி நிறுவனங்களும் விரும்புவது போன்று சிறிலங்கா இராணுவத்தைக் கலைத்து விட முடியாது“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் முறைப்படியான விசாரணைகளை நடத்தத் தவறினால்- அனைத்துலக விசாரணைகளுக்கு இழுத்துச் செல்லப்படும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் றொபேட் ஓ பிளேக் எச்சரித்திருந்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே சிறிலங்கா அதிபர், எந்தவொரு அரசாங்க அதிகாரியையும் அனைத்துலக நீதிமன்ற விசாரணைகளுக்குக் கொண்டு செல்வதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார் எனக் கருதப்படுகிறது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.