Thursday, March 17, 2011

போர்க் குற்றங்கள் தொடர்பில் ஆராய நவிப்பிள்ளை விரைவில் வருகிறார்.

இலங்கையில் நடந்த போர்க் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கைக்கு வந்து நேரில் ஆராய்வதற்கு ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் சபையின் தலைவர் நவிப்பிள்ளையை அனுமதிப்பது என்று இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. விரைவில் அவர் கொழும்பு வரவுள்ளார்.

இறுதிப் போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் அனைத்துலக விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்து வலுத்து வரும் நிலையில் இலங்கை அரசு இந்த முடிவுக்கு வந்துள்ளது. நெருக்கடிகளைச் சமாளிக்கும் நோக்குடன் அது இந்த நகர்வை மேற்கொண்டுள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

போர்க் குற்றங்கள் குறித்து அனைத்துலக விசாரணையை வலியுறுத்துவதற்குப் பதிலாக உள்நாட்டில் இடம் பெற்று வரும் விசாரணைகள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் சபை அக்கறை செலுத்த வேண்டும் என்றும் இலங்கை கேட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 16ஆவது கூட்டத் தொடர் சுவிஸ் நாட்டின் தலைநகர் ஜெனீவாவில் நடைபெற்று வருகின்றது. அந்தக் கூட்டத் தொடரில் உரையாற்றிய இலங்கைப் பிரதிநிதி ஷேனுகா செனவிரத்ன, போர்க் குற்றச்சாட்டுக்கள் குறித்தும் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு விசாரிக்கும் என்று தெரிவித்தார்.

விசாரணை ஆணைக்குழுக்கள் சட்டத்தின் கீழேயே நல்லிணக்க ஆணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது என்பதால் போர்க் குற்றச்சாட்டுக்கள் குறித்தும் அது விசாரிக்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.

எனினும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கான கால அவகாசத்தை ஐ.நா. மனித உரிமைகள் சபை வழங்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். அதேசமயம், ஐ.நா மனித உரிமைகள் சபையின் உயர் ஆணையர் நவிப்பிள்ளை இலங்கைக்கு விரைவில் செல்ல இருக்கிறார் என்ற தகவலையும் அவர் அங்கு தெரிவித்தார்.
அவரை இலங்கைக்கு அழைப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

1 comment:

  1. வருவது உண்மையான நோக்கத்திற்கா அல்லது கொலைவெறியரிடம் சந்தோஷம் வாங்கவா? வரும் காரணத்தை பாதிகக்கபட்டவர்களுக்கு தெரிவித்தால் நலம்.

    ReplyDelete

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.