Thursday, February 24, 2011

ஈழமும் உலக மனிதாபிமானத்தின் ஆழமும்

கடைசியில் உலகின் கழிவிரக்கதிற்காக, காத்துக்கிடக்கும் நிலை ஈழ மக்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடாது. உலக வரைபடத்தில் புள்ளியளவிலான சின்னஞ்சிறிய பரப்பும், சுமார் 30 இலட்சம் மக்களும் கொண்ட ஈழம், ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தம் மக்களை இழந்துவிட்டது. இவ்விபரம் இந்திய விடுதலைப் போரில் ஒரு கோடி பேர் கொல்லப்படுவதற்கு சமமானது.

2ம் உலகப்போரில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கும், அன்றைய உலக மக்கள் தொகைக்கும் இடையிலான விகிதாசாரத்தை, விட அதிகமானது. மிகச் சிறிய நிலப்பரப்பிற்குள், பெரும் எண்ணிக்கையில் மக்கள் கொல்லப்பட்ட வரிசையில் ஹிரோஷிமா, நாகசாகியை அடுத்து தமிழீழம் வந்துள்ளது.

முதலிடத்தை ஈழத்துடன் பகிர்ந்து கொள்ளவோ, ஜப்பான் இலங்கைக்கு ஆயுதம் வழங்கிக் கொண்டிருக்கிறது. கொத்துக்கொத்தாய் மக்கள் கொல்லப்படுவதற்கு, அணுஆயுதங்களோடு மட்டும் தான் அதற்கு உடன்பாடில்லை போலிருக்கிறது. எனவே அணுஅல்லாத ஆயுதங்களாக பார்த்து இலங்கைக்கு அனுப்பிக்கொண்டிருக்கலாம்.

உலகில் பூர்வீக நிலப்பரப்பு இல்லாத ஒரே தேசிய இனம் யூத இனம். அன்று உலகம் முழுவதும் சிதறிக்கிடந்து போராடி, அதற்கென ஒரு இஸ்ரேலிய நாட்டைபெற்றது. இன்று 2000 ஆண்டு பூர்வீக நிலப்பரப்புக்குச் சொந்தமான ஈழத்தமிழ் இனம், உலகம் முழுவதும் சிதறடிக்கப்பட்டிருக்கிறது.

நாடற்ற நிலையின் வேதனை அறிய முழுத்தகுதியும் கொண்ட யூத தேசிய இனம் இன்னொரு தேசிய இனத்தை நாடற்றவர்களாக்குவதற்கு இலங்கைக்கு ஆயுதம் வழங்கிவருவது ஓர் விந்தை. உலகப்பெரும் படுகொலைகளில், யூதப்பங்களிப்பு தவறாமல் இருப்பது இன்னொரு விந்தை. அன்று ஹிரோஷிமா, நாகசாகிப் படுகொலைகளில், ஒரு யூதரான இயற்பியல் மேதை ஜன்ஸ்டீன் ஒரு அறிவியல் காரணியாக இருந்துவிட்டார். மனிதநேயப்பற்றாளரான அவர், தான் எதிர்பாராத இந்நிகழ்ச்சிக்காக நரக வேதனை அடைந்தார். ஆனால் இன்றைய இஸ்ரேல் இலங்கைக்கு நீண்ட காலமாக ஆயுதம் கொடுத்து, ஐன்ஸ்டைன் காட்டிய குற்ற உணர்ச்சியை, யூதமாண்பை இழிவு படுத்திக்கொண்டிருக்கிறது.

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் எதிரெதிராய் நிற்கும் இந்திய-பாகிஸ்தானிய ஆயுதங்கள் அங்கே அன்போடு ஆரத்தழுவிக் கட்டிக்கொள்கின்றன. ரசிய, சீன "கம்யூனிச நாடுகளும்" ஆயுதம் அளிக்கின்றன. இந்நாடுகள் அனுப்பும் ஆயுதங்கள் பல தடை செய்யப்பட்ட வகையைச் சேர்ந்த குற்றச்சாட்டும் உள்ளது.

இலங்கைக்கு பக்கத்தில் எந்த பகை நாடு உள்ளது? எப்பகுதியில் எல்லைப் பிரச்சனை உள்ளது, என்று இவ்வாயுதங்களை அனுப்புகிறார்கள். சொந்தநாட்டு மக்களை கொல்வதை தவிர எந்த அந்நிய நாட்டிற்கெதிராகவும் பயன்படுத்தப் போவதில்லை என்பது மிகத்தெளிவாக தெரிந்தே, ஆயுதங்களோடு, தங்கள் மனிதாபிமானத்தையும், மனசாட்சியையும் இலவச சலுகையாக இணைத்து விற்கிறார்கள்.

ஈழ மக்களின் இன்றைய நிலைக்கு யார் பொறுப்பு? 1977 வரை சிங்கள அரசு பொறுப்பு 77க்குப்பிறகு சிங்களப்பேரினம் முழுவதும், சர்வதேசிய சமூகமும் பொறுப்பு. ஏனெனில் 77ல்தான் 90 சதவீதற்கும் மேற்பட்ட மக்கள் தேர்தல் மூலம் வாக்களித்து தமிழ்ஈழப்பிரிவினை வேண்டுவதை உலகிற்கு பகிரங்க பறைசாற்றினார்கள். 'உலகில் ஓர் இனம் விருப்பதிற்கு மாறாக ஆளப்படுகிறது' என்ற செய்தியை அறிந்ததிலிருந்தே அதைக் கண்காணிக்கவும் காப்பாற்றவும், பிரிவினையை அங்கீகரிக்கவுமான பொறுப்பு சர்வதேச சமூகத்திற்கு தொடங்குகிறது.

முழுத்தமிழ் தேசிய இனமும் 'தாம் இலங்கையர்' என்ற இறையாண்மையை இழந்துவிட்ட உடனேயே, தமிழினத்தோடு சேர்ந்து வாழவோ, அதை ஆளவோ, முழுச்சிங்கள பேரினமும் தனது தார்மீக தகுதியை இழந்துவிட்டது. சிங்களதேசிய இனம், சனநாயகப் பண்புடைய இனமாக இருந்திருந்தால், நார்வே - ஸ்வீடன் அமைதிவழி போன்று பிரிந்திருக்க வேண்டும். கூடவே பரஸ்பர புரிதலை இழந்தமைக்காக வெட்கப்பட்டிருக்க வேண்டும். அத்தகைய தனது இயலாமைக்காக வேதனைப் பட்டிருக்க வேண்டும். ஒன்றுபட்ட இலங்கையின் இறையாண்மையே இரண்டுபட்டு போன பிறகும், சட்டம், இராணுவம் மூலம் ஒன்றுபடுத்திக் காட்ட முயற்சித்தது. 32 ஆண்டுகளாய் இன்றுவரை இம்முயற்சியில் வெற்றிபெற முடியவில்லை.

77ன் தேர்தல் முடிவை மீறி, விருப்பமில்லாத மக்களை ஆளத் தொடராமல், சனநாயகப் பிரிவினையை அது ஏற்றிருந்தால்... பல பத்தாயிரம் தமிழ் மக்களும், சில பத்தாயிரம் சிங்கள இளைஞர்களும் (இராணுவம்) பலஆயிரம் இந்திய இராணுவ வீரர்களும் (ஈள்க்ஷ்C) இன்று நம்முடன் உயிரோடிருந்திருப்பர். பல்லாயிரம் மக்கள் உடலுறுப்புக்களை இழக்காமல், மனிதவடிவம் மாறாதிருந்திருப்பர். பல்லாயிரம் தமிழ் -சிங்கள -இந்திய விதவைகளும், ஒரே ஒரு இத்தாலிய விதவையும் வாழ்க்கைத் துணைவருடன் வாழ்ந்து கொண்டிருப்பர். ராஜீவும் பல இலங்கை அமைச்சர்களும், நடுநிலையான இலங்கை ஊடகவியலாளர்களும் தங்கள் முழு ஆயுளை கழித்துக் கொண்டிருப்பர்.

யுத்தங்களுக்கு செலவிட்ட தொகை, 20 இலட்சம் சிங்கள குடும்பங்களை செழிப்பாக்கியிருக்கும். இதையெல்லாம் விடுத்து வன்முறையில் ஒற்றுமைபடுத்த 32 ஆண்டுகளாய் எத்தனை பேரழிவுகள்? இப்பேரழிவுகளையெல்லாம் விட கொடியது இதை இன்னமும் நியாயப்படுத்தும் நயவஞ்சகவாதங்கள்.

இன்னமும் சர்வதேச சமூகம் இலட்சோப இலட்சம் மக்களின் ஈழவிருப்பத்தை, அதற்கான தியாகத்தை மதிக்கவில்லை. அதன் அவசரத்தை உணரவில்லை. 'ஒன்றுபட்ட இலங்கை' என்ற சிங்கள அரசு வாசகத்தையே அது மதிக்கிறது. அதுவே நியாயம் என்றும் கூறுகிறது.

ஈழம் ஒரு தெளிவான காட்சி. இதில் புரியக் கடினமான காட்சிக்குழப்பம் எதுவுமில்லை. இதை உள்ளபடி பார்ப்பதற்கு, இயற்கை கொடுத்த மனிதாபிமானமும், மனசாட்சியும் போதும், இதைப் புரிந்துகொள்ள மயிர் பிளக்கும் வாதங்கள் எவையும் அவசியமில்லை. மனிதாபிமான பார்வையிலும், மனசாட்சியிலும், சர்வதேச சமூகத்தின் மட்டம் அதலபாதாளத்தில் தென்படுவதால் ஈழப்பிறப்பு தள்ளிப்போகிறது. எனவே சர்வதேச சமூக மனசாட்சியின் முன் சிலகேள்விகள், சிலதர்க்கங்கள்,

சர்வதேச சமூகமே,

1. தே.இ.பிரச்சனைகள் உள்நாட்டுப் பிரச்சனைகளாக மட்டுமே கருதப்பட்டு வந்திருக்கிறதா? ஓர் எல்லைக்கு மேல் சர்வதேச பிரச்சனையாக்கப்பட்டு தீர்க்கப்பட்டிருக்கவில்லையா? ஈழம் அவற்றில் ஒன்றாக இல்லையா? அயர்லாந்து, நார்வே-ஸ்வீடன், சோவியத்யூனியன், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் பிரிவினை அவற்றுக்கு அமைதித்தீர்வை தரவில்லையா? அது என்ன ஐரோப்பியத் தேசிய இனங்களுக்கு பிரிவினை நிரந்தரத்தீர்வு! ஆசியத் தேசிய இனங்களுக்கு மட்டும் இறையாண்மைக்குட்பட்ட தீர்வு அப்படியும் சிங்கள - தமிழ் இனப்பகை என்பது இதுவரை உலகம் கண்டவற்றில் குருரமானது, அரை நூற்றாண்டைத்தாண்டி போய்க்கொண்டிருப்பது. ஐரோப்பிய உயிர் அழிவு என்றால் சில ஆண்டுகளில் நடவடிக்கை,ஆசிய உயிர் அழிவு என்றால் அரை நூற்றாண்டுக்கும் மேல் வேடிக்கையா?

2. இன்று உலகம் ஒத்துக்கொண்டிருக்கும் 'இறையாண்மைக்கோட்பாடு' அவசியமற்ற பிரிவினைகளை ஒற்றுமை உணர்வோடு தவிர்க்கும் எல்லைகளை எட்டும் வரைதான் அது சனநாயகக் கோட்பாடு. ஆனால் இதுவே, மிகவும் அவசியமான அவசரமான பிரிவினைகளையும் கூட தவிர்ப்பதற்கு கருத்து ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு பேரழிவுகளையும் நியாயப்படுத்துமேயானால், அது பாசிசக் கோட்பாடாகி விடுகிறது. இலங்கையில் இறையாண்மைக் கோட்பாடு பாசிசக் கோட்பாடாக நடைமுறைப் படுத்தப்படுகிறதா? இல்லையா?

3. சிங்கள தேசிய இனத்தினரின் சராசரி ஆயுள் காலம் சுமார் 60 ஆக இருக்கலாம். ஈழப் போராட்டத்தின் வயதும் 60தான். இக்காலங்கள் முழுவதும் சிங்கள - தமிழ் இனப்பகை மேலும், மேலும் உச்ச நிலையை அடைந்து கொண்டிருக்கிறது. இன்றைய சிங்கள ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும், இராணுவ இளைஞர்களும் ஊடகவியலாளர்களும், 95 சதவீதத்திற்கு மேற்பட்ட பொதுமக்களும் இப்பகைமைக் காலத்திற்குள்ளேயே பிறந்தவர்கள். அறியாக்குழந்தை நிலையிலிருந்தே தமிழர்கள் மீதான முரண்பாட்டு சூழலிலேயே வளர்க்கப்பட்டவர்கள். அரசியல், பொருளாதார, பண்பாட்டு வாழ்வில் தமிழர்களோடு பரஸ்பரபுரிதலுடையவர்களாக இவர்கள் இன்று எப்படி இருக்க முடியும்? 'மனித சிந்தனையின் சூழலியல் பங்கு' குறித்த அறிவியலுக்கு இது முரணானதாக இல்லையா?

4. ஈழப் பிரிவினையை ஏற்பதால், சர்வதேச இழப்புகள் தான் என்ன? உள்நாட்டு இழப்புகள் தான் என்ன? எதுவும் இல்லை என்றால் இப்போர் எதற்கு? இதற்கான உளவியல்காரணி மிக முக்கியமானது. சுமார் 1கோடி மக்களைக் கொண்ட சின்னஞ்சிறிய சிங்கள தேசிய இனம், அதனினும் சிறிய தேசிய இனத்தை அடக்கி ஆளநினைக்கிறது. எல்லாபெருந்தேசிய இனங்களையும் போல தானும் ஆள ஆசைப்படுவது நியாயம் என்று கருதுகிறது. ஆனால் தன்னைவிட 3 மடங்கு சிறிய தேசிய இனம் இவ்வளவு பெரிய எதிர்ப்பைக் காட்டும் என்று எதிர்பார்க்கவில்லை.

அந்த எதிர்ப்பின் நியாயங்களை புரிந்து தீர்த்துவைப்பதை அது தனது தோல்வியாக கருதி விட்டது. எவ்வளவு இழந்தாலும் சின்ன தேசிய இனத்திடம் தோல்வியை மட்டும் அடைந்து விடக்கூடாது என்ற பெருந்தேசிய வெறிக்குள் ஆட்பட்டுவிட்டது. 60 ஆண்டுகளாக தமிழ் மக்களை பகைத்தேவைக்காக பயன்படுத்தி வருகிறது. நீண்ட காலமாய் அமைதியற்று இருக்கும் இந்த இனம், இன்னமும் அமைதியை விரும்பாமல் தொடர்வதிலிருந்து, ஓர் உளவியல் நோய்க்கூறு இந்த இனத்திடம் இருப்பதை சர்வதேச இன உளவியலாளர்கள் அறிவியல் பூர்வமாக மறுக்கமுடியுமா? இப்படி இனவயப்பட்ட மக்களால் ஏற்படுத்தப்படும் ஓர் அரசு 21ம் நூற்றாண்டின் சனநாயக தகுதியும், பக்குவமும் கொண்ட அரசாக இருக்கமுடியுமா?

5. ஆயுதம் ஏந்துபவர்களை பொதுமக்கள் அல்லர் என்றும், அவர்கள் எத்தனை ஆயிரம் பேராக இருந்தாலும், எத்தனை தலைமுறைக்கு தொடர்ந்தாலும், அவர்களைக் கொன்றுகுவிக்கும் உரிமைதனக்கு இருப்பதாக சிங்கள அரசு செயல்பட்டு வருகிறது. பிறரின் உயிரை, உடமைகளை ஆயுதம் கொண்டு அபகரிக்கும் சில தனிநபர் குற்ற ஒழுங்கு மீறல்களையும், அரசியல், விடுதலைக் கோரிக்கைகளுக்காக ஆயுதம் ஏந்தும் முழுச்சமூகத்தின் ஒழுங்கு மீறல்களையும் அது சமப்படுத்துகிறது. ஆயுதம் ஏந்துபவர் பொதுமக்கள் அல்லர் என்றால், இது நேதாஜியின் ஆயுதப்படையில் இருந்த இந்திய மக்களை இழிவுபடுத்துவதாகும்.

போரிடும் சமூகத்தில் 100 சதவீதம் மக்களும் ஆயுதம் தாங்கினால் அல்லது ஆயுத அமைப்போடு தொடர்பில் இருந்தால், அம்முழுச்சமூகமுமே, மக்கள் சமூகம் இல்லையா? அல்லது எத்தனை சதவீதம் பேர் வரை ஆயுதம் தாங்கினால் அவர்களை பொதுமக்கள்தான் என ஏற்பீர்கள்? 90%, 80%, 70% .......... 1 கோடிப்பேர் கொண்ட சமூகத்தில் 1% பேர் ஆயுதம் தாங்கினாலும் நீங்கள் 1 இலட்சம் பேரை மக்கள் இல்லை என்று சொல்ல வேண்டிவரும். 1 இலட்சம் மனிதபடுகொலைகளை செய்ய வேண்டிவரும் உலகம் அதை அனுமதிக்க வேண்டிவரும். ஈழத்தில் இது நடந்து கொண்டிருக்க வில்லையா? ஆயுதம் தாங்கியதற்காய் ஈழத்தில் கொல்லப்பட்டோர் 2 சதவீதம்! ஆயுதம் தாங்காமலேயே கொல்லப்பட்டோர் 3 லிருந்து 4 சதவீதம் இது இன்னும் தொடர்வது உங்களுக்கு ஏற்புடையதா?

6. ஆயுதம் ஏந்துபவர்கள் மக்கள் அல்லர், அவர்கள் ஆயுதமேந்தா பிரிவினரை பிரதிபலிக்கவில்லை என்றால் எந்தநாட்டு இராணுவமும் அந்நாட்டின் மக்கள் பகுதி இல்லை. அவர்கள் நலனை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களும் இல்லை என்ற ஒரு கருது கோளை ஏற்க முடியுமா?

இராணுவம் -சட்டங்களை காக்க போராடும் ஆயுத அமைப்பு.
ஆயுத இயக்கம் -சட்டங்களை மாற்றபோராடும் ஆயுத அமைப்பு

வித்தியாசம் இவ்வளவுதான். இருவருமே மக்கள்தான். ஆயுதமேந்தா சமூகபிரிவின் பிரதிநிதிகள்தான். குறிப்பிட்ட சட்டங்களுக்கு அப்பாற்பட்ட அணுகுமுறைகளுக்காக போராடும் பொழுது அந்தச் சட்டங்களையே அவர்கள் மீது பயன்படுத்துவது என்ன நீதியியல் கூறு?

எல்லா வன்முறை அம்புகளும் ஒரு வில்லிருந்துதான் புறப்படுகின்றன. ஏதோ ஒரு கருத்து வில்லாக இருக்கிறது. போராளிகளையும், மக்களையும் வேறுவேறு என்போர், வில்லையும், அம்புகளையும் வேறுவேறு என்போரே! நீங்கள் அம்புகளை ஆராய்பவர்களா? வில்லை ஆராய்பவர்களா?

7. பல்லாயிரக்கணக்கில் தன்னால் கொல்லப்படுகிறவர்களை எந்த அரசு பொதுமக்கள் என்று ஒத்துக்கொள்ளும். அத்தகைய கோட்பாட்டை கொண்டிருக்கும். ட்லர் அரசு கூட இப்படி இருந்திருக்காது. உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் ஒரு மக்கள் கூறு.

1 மனிதன் = 1 ,700 கோடி உலகமக்கள் எனலாம். ஒரு மனிதனின் பிறப்பிலிருந்து இறப்புவரை இது பொருந்தும். அவனை மக்கள் கூறு இல்லை என்று சொல்ல உலகில் எந்தக் கருத்துக்கும் உரிமையில்லை. அப்படியே கருத்துரிமை இருந்தாலும் அக்கருத்துப்படி அவனை அழிக்கும் செயல்உரிமை நிச்சயமாக இல்லை. 'என் கருத்துப்படி நீங்கள் மக்கள் இல்லை என்ற காரணத்தினால் உங்களை நான் அழிக்கலாம்' என்பது சர்வதிகாரக் கோட்பாடு இல்லையா?

8. "ஒரு நேரம் நாங்கள் 30,000 விடுதலைப் புலிகள் இருந்தோம்" என கருணா தினமலர் பேட்டியில் கூறியிருந்தார். அம்மா, அப்பா, அக்கா, தங்கை அண்ணன், தம்பி அத்தை, சித்தி நண்பர்கள், உடன் படித்தவர்கள், சக ஊழியர்கள் என்ற வகையில், 1.விடுதலைப்புலி 100 பேருக்காவது அறியப்பட்டவனாக இருக்கமாட்டானா?

30,000 * 100 = 30 இலட்சம்

அப்படியானால், 30 இலட்சம் ஈழ மக்களும், 30,000 விடுதலைப் புலிகளுடன் நிகழ்காலத்திலோ, கடந்த காலத்திலோ தொடர்புடையவர்களே! இம் மக்களில் எவரையும் சிங்கள அரசு நம்பவே முடியாது. யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு அழைக்கலாம், குற்றங்களை சுமத்தலாம். அரசின் சந்தேக, குற்றப்பார்வையிலேயே எந்நேரமும் அச்சத்திலேயே வாழும் ஓர் முழு இனமாக யூதஇனத்திற்கு பிறகு ஈழத்தமிழ் இனம் இருக்கிறது.

அத்தகைய ஆட்சி ஹிட்லருக்கு பிறகு சிங்களவருக்கு வாய்த்திருக்கிறது. ஒரே ஒரு வித்தியாசம் தான். ஹிட்லர் உலகம் முழுவதும் கண்டனம் செய்யப்பட்டார். சிங்களவர் உலகம் முழுவதும் ஆதரிக்கப்படுகின்றனர். சிங்கள அரசு கண்டிக்கப்பட வேண்டியதா ஆதரிக்கப்பட வேண்டியதா?

9.தன் வாழ்வின் அமைதி கலைபடுவதை, எந்த மனிதனும் விரும்புவதில்லை. எனவே அமைதியை இழக்க நேரும் அவசியமற்ற போராட்டங்களில் அவன் ஈடுபடுவதில்லை. இதுவே உலகின் ஒரு குறைந்த பட்ச அமைதிக்கு காரணமாயிருக்கிறது.

மனிதர்கள் எவ்வளவு தீவிரமாய் போராடுகிறார்கள் என்பதும், எவ்வளவு காலம் போராடுகிறார்கள் என்பதும், அவர்கள் தங்கள் வாழ்வில் எவ்வளவு இழந்திருப்பதாய்க் கருதுகிறார்கள் என்பதற்கான வெளிக்குறியீடு.

அரசுகள் எவ்வளவு விரைவாக தீர்க்கிறார்கள் என்பதும், எந்த முறையில் தீர்க்கிறார்கள் என்பதும் அவ்வரசுகளின் பொறுப்புணர்வின் வெளிக்குறியீடு.

சாதாரண அரசியல் கோரிக்கைகளை, பிரிவினை கோரிக்கைகளாக வளரவிட்டு, 35 ஆண்டு கால அரசியல் போராட்டத்தை, 25 ஆண்டு கால ஆயுத போராட்டமாக சிதைத்து ஒரு இனத்தின் 60 ஆண்டு கால வாழ்க்கையை நாசப்படுத்திவிட்ட பிறகு இன்னமும் தன் கொள்கையில் தளர்வுகாட்டாத சிங்கள அரசின் செயல்பாடு என்ன வெளிக்குறியீடு?

10.இறையாண்மை குறித்து சில கேள்விகள்:

இறையாண்மை என்பது கருத்தா? என்றுமே மாறாத விதியா? அது எதுவாக இருந்தாலும் எதற்காக இவ்வளவு பேரிழப்புகள், கருத்து என்றால் மாற்றிக்கொள்ள முடியாததா? விதி என்றால் எல்லோரும் சேர்ந்து மாற்றிக் காட்ட முடியாததா?

இறையாண்மை இருவருக்குமே பொதுவானதாய்த் தான் இருக்கிறதென்றால், ஈழத்தமிழர்கள் ஏன் இறையாண்மை பேசவில்லை?

"யார் ஆள்கிறார்களோ அவர்களே இறையாண்மை பேசுகிறார்கள் யார் இறையாண்மை பேசுகிறார்களோ அவர்களே ஆள்கிறார்கள்"

இறையாண்மை தாங்கள் ஒன்றே என உணரும் பிரிக்கமுடியாத பொதுவான பிணைப்புணர்வாக இருக்க வேண்டியது அவசியமா? இல்லையா?

இறையாண்மை-அரசின் ஆயுத எல்லைகள் சம்பந்தபட்டதா? மக்களின் உணர்வெல்லைகள் சம்பந்தப்பட்டதா?

அரசு சமூகத்திற்கு மட்டும் தான் இறையாண்மை இருக்கமுடியுமா? தேசிய இன சமூகத்திற்கு இறையாண்மை இருக்க முடியாதா?

அரசு சமூக இறையாண்மை, பரஸ்பர புரிதலுடன் ஏற்படுத்தப்பட வேண்டிய, வளர்க்கப்பட வேண்டிய இறையாண்மையா இல்லையா? தேசிய சமூக இறையாண்மை பலநூறு ஆயிரம் ஆண்டுகள் இயற்கையாகவே அமைந்த இறையாண்மையா?இல்லையா?

இறையாண்மை என்பதை, நியாயமான, அவசர, அவசிய பிரிவினைகளையும் கூட ஒரே முடிவில் இரத்து செய்யும் வீட்டோ பவராக சிங்கள அரசு பயன்படுத்துவதை உலகம் அங்கீகரிக்கிறதா?

11. புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் என்ற கருத்து, அவ்வமைப்பின் சில தனிநபர் அழிப்புச் செயல்களை மட்டுமே உள்ளடக்கி வரப்பெற்ற கருத்தாகும். இது நடுநிலையான மதிப்பீடு அல்ல, நீதி முள் கிடைமட்டமாகி விடுமளவிற்கு பாரபட்ச மதிப்பீடு ஆகும். இம்மதிப்பீடு அவ்வியக்கம் கொள்கை தாங்கிய இயக்கம் என்பதையும், படை, நிர்வாகம், நீதி என ஒரு முழு சமூகத்தின் தேவைகளையும் நிர்வகிக்கும் ஒழுங்கும், கட்டுப்பாடும், தியாகங்களும், பொறுப்புணர்வும் கொண்ட அமைப்பு என்பதையும் சேர்த்து உள்ளடக்கி இருக்கவில்லை. தவறுகளை கண்டிப்பதில் உள்ள நேர்மை, அதை மிகைப்படுத்தும் போது நேர்மையின்மை ஆகிவிடும் அல்லவா? தவறுகளைத்தவிர மற்றவற்றையும் உள்ளடக்காத மதிப்பீடு பாரபட்சம் இல்லையா? முழுச்செயல்களையும் கணக்கில் கொள்வது தான் நடுநிலைமதிப்பீடு மற்றதெல்லாம் அவரவர் விருப்பு, வெறுப்பு, நீங்கள் மறுக்கமுடியுமா?

சர்வதேச சமூகமே,

1.படுகொலைகளை எதிர்ப்போம், ஆனால் அதைச் செய்யும் சிங்கள அரசை ஆதரிப்போம் என்ற முரண்பாட்டை கைவிடுங்கள்

2.மக்களுக்குள் போராளிகளும், போராளிகளுக்குள் மக்களும் இயல்பாக இருப்பதை,புலிகள் வேறு, மக்கள் வேறு என்று திரிக்காதீர்கள்.

3.புலிகளை உரிமையுடன் விமர்சியுங்கள். அதே நேரம் அவர்களின் ஈழ நியாயத்தை ஆதரியுங்கள்.

இதற்கு உங்கள் இராஜதந்திர இடைஞ்சல்களை உங்களுக்கு வழிவிடச் செய்யுங்கள். அதில் நீங்கள் ஓரடி நடந்தால், ஈழம் தன் வாழ்வில் ஒளியாண்டு தூரம் கடந்துவிடும்.

-பிரபாகரன், தமிழ்நாடு

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.