Friday, February 11, 2011

மக்கள் தயார் என்றால் எகிப்தில் நடைபெறுவதனைப் போன்று போராட்டம் நடத்த முடியும் – ஜே.வி.பி.

இலங்கை மக்கள் தயார் என்றால் எகிப்தில் நடைபெறுவதனைப் போன்று போராட்டம் நடத்துவதற்கு முடியும் என ஜே.வி.பி கட்சி அறிவித்துள்ளது. எகிப்து மற்றும் டியூனிசீயா போன்ற நாடுகளின் போராட்டங்களுக்கு நிகரான போராட்டங்களை நடாத்த மக்கள் தயார் என்றால் அதற்கான தலைமைத்துவத்தை வழங்க ஜே.வி.பி தயார் என கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி கட்சியின் ஆறாவது தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயகம் மற்றும் சமவுரிமைகளை வென்றெடுப்பதற்கான முனைப்பு உலகம் முழுவதிலும் அதிகரித்துள்ளதாகவும், அதற்கான ஆதரவினை வழங்கத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுத் திட்டங்களை முன்வைப்பதற்கு அரசாங்கமோ ஐக்கிய தேசியக் கட்சியோ பொருத்தமற்றது என்பது தெளிவாக அம்பலமாகியுள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற இந்த மாநாட்டில் சீனா,இந்தியா, சைப்ரஸ், கியூபா மற்றும் சுவீடன் உள்ளிட்ட நாடுகளின் சோசலிச கட்சிப் பிரதிநிதிகளும், ஜே.வி.பி.யினர் வெளிநாட்டு கிளைப் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் இணைந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மக்கள் போராட்டங்களை நடாத்துவதற்கு முன்வந்தால் அதற்கு தலைமை தாங்க ஜே.வி.பி தயார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குடும்ப ஆட்சி, சர்வாதிகாரம், ஜனநாயக விரோத ஆட்சியாளர்கள், ஏகாதிபத்தியவாதிகளுக்கு இந்த உலகில் இடமில்லை. முதலாளித்துவ ஆட்சி முறை தொடர்ந்தும் முன்னோக்கி செல்ல முடியாது. சமதர்மத்தை ஸ்தாபிக்கும் முக்கியமான இடத்திற்கு முழு உலகம் தற்போது வந்துள்ளது என ஜே.வி.பியின் தமலைவர் சோமவங்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.

உலக முழுவதும் கடந்து செல்லும் புதிய அரசியல் அலையில் இருந்து தற்போதைய மகிந்த ராஜபக்ஷ நிர்வாகம் தப்பிக்க முடியாது. இந்த புதிய அரசியல் அலையில் இருந்து தற்போதைய ஆட்சியாளர்கள் தப்பிக்க நினைத்தால், அது வெறும் பகல் கனவாகவே இருக்க போகிறது எனவும் சோமவங்ச குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் உருவாக்கிய சிரேஷ்ட புரட்சியாளரான ரோஹண விஜேவீரவினால் ஆரம்பிக்கப்பட்ட ஜே.வி.பி தற்போது 46 வருடங்களை பூர்த்தி செய்துள்ளது. இந்த காலத்தில் வெற்றி, தோல்விகளை கட்சி எதிர்நோக்கியது. நாடு முழுவதும் செங்கொடியை ஏற்ற முடிந்த கட்சி ஒன்று இருக்கும் என்றால் அது ஜே.வி.பி மாத்திரமே. நாட்டில் ஏனைய சமதர்ம கட்சிகள் இருந்தாலும் இதுவே ஜே.வி.பியின் வெற்றியாகும்.

மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு நாட்டை அபிவிருத்தி நோக்கி இட்டுச் செல்லவோ, நாட்டிற்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவோ முடியாது. ஏனைய பிரதான கட்சிகளாலும் இதனை செய்ய முடியாது. ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் பிரச்சினைகளை அவர்களால் இன்னும் தீர்த்து கொள்ள முடியாமல் உள்ளது. வாக்குகள் குறைவாக பெற்றிருந்தாலும் நாட்டில்; உள்ள சிறந்த அமைப்பு ஜே.வி.பி மாத்திரமே. மக்களுக்கு தேவையான ஜனநாயகத்தை நாட்டில் உள்ள இரண்டு பிரதான கட்சிகளாலும் பெற்றுக்கொடுக்க முடியாது. நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் தொடர்பில் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

இந்த நிலையில் மக்கள் விரும்பும் தீர்மானங்களை எடுக்க கூடாது என ஜனாதிபதி கூறுகிறார். ஊடகவியலாளர்கள், எதிராளிகள் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர். நாட்டின் நீதிமன்ற கட்டமைப்பில் உருவாக்கி வரும் நிலைமைகள் புத்திசாலித்தனமாக மக்கள் மத்தியில் விசனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.

நாட்டில் இடம்பெறும் அனைத்து எதிர்ப்பு நடவடிக்கைகளின் பின்னணியிலும் ஜே.வி.பி இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது. மாணவர் அமைப்புகளை ஜே.வி.பியே வழிநடத்துவதாகவும் குற்றம்சுமத்துகிறது. ஜே.வி.பி பின்னணியில் இருந்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாது என்பதை அரசாங்கத்திற்கு கூறிக்கொள்கிறோம். ஜே.வி.பி எப்போதும் மக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் சென்று அவர்களை வழிநடத்தும் எனவும் ஜே.வி.பியின் தலைவர் சோமவங்ச அமரசிங்க மேலும் கூறியுள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.