Friday, February 11, 2011

தந்திரம் மிக்க தமிழ்நாட்டு முதல்வரும் கொல்லப்படும் மீனவர்களும்

ஒரு தேசத்தை ஆளும் மிகப்பழைய தந்திரங்களில் ‘bred and circuses’ என்ற தந்திரம் ஒன்றாகும்.

ஏதாவது பதவியிலிருக்கும் அரசாங்மொன்று, அடிப்படை தேவையான உணவையோ அல்லது ஏதாவது வேறு நுகர்பொருளையோ, இலகுவாக தனது ஆளுகைக்கு உடபட்ட மக்களுக்கு பரவலாக எட்ட கூடியவாறு செய்துகொண்டு, கூடவே கேளிக்கைகளிலும் களியாட்டங்களிலும் அவர்கள் கவனத்தை திசை திருப்புவதன் மூலம், ஆளும் தரப்பிற்கும் பாமர மக்களுக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வை கவனத்தில் கொள்ளாதவகையில் வைத்திருத்தல் என்பதே இந்த தந்திரத்தின் விளக்கமாகும்.

இந்த தந்திரம் ரோமானிய அரசர்களால் கடைப்பிடிக்கப்பட்ட மிகப்பழையதாக இருந்தாலும் இன்னும் புத்தம் புதுசாக தமிழ்நாட்டு அரசாங்கத்தால் நடைமுறைபடுத்தபட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் அடிப்படை உணவான சோற்றுக்கான அரிசி வெறும் ஒரு ரூபாவுக்கு கிடைக்கிறது. அதேவேளை சினிமாவும், தெலைக்காட்சியும், பெருவிழாக்களும், துடுப்பாட்டமும் களைகட்டி பறக்கின்றன.

இதன் மத்தியில் உலகமயமாதலின் உற்பத்தி பொருளாதாரத்தின் உப்பிப்பெருப்பால் வேலை வாய்ப்புகள் அதிகரித்து உள்ளன.

திட்டமிடலில் சற்றும் கவனம் செலுத்தாது கிராமங்கள் நகரங்களாகின்றன நகரங்கள் மாநகரங்களாகின்றன.

உள்ளுர் ஆட்சியமைப்பின் சேவைகளால் (local Government) கவனித்து கொள்ளகூடிய அடிப்படை கட்டுமானங்களான சுற்றுப்புற சுகாதாரம், மின்சார வசதி, தொலைத்தொடர்பு வசதிகள் அனைத்தும் அரைகுறை வேலைகளுடன் கிடக்கின்றன. வீதியோர கம்பங்களிலே குறுக்கும் நெடுக்குமாக மின்சார கம்பிகளும், தெலைபேசி இணைப்புகளும், தெலைகாட்சி இணைப்புகளுமாக பல்வேறு விளம்பர பதாதைகளுடன் தொங்குகின்றன.

தெருதிருத்த வேலைகள் என எல்லாமே நாலா புறமும் சிதறிப்போய் கிடக்கின்றன.

கட்டுப்பாடற்ற அரசியல் சுவரொட்டிகளும் திரைநடிகர் பதாதைகளும் காணுமிடமெல்லாம் காட்சி அளிக்கிறது.

நகரங்களிலே ஆங்காங்கே ஒழுங்குவிதிகளை மீறும் குற்ற செயல்கள் மலிந்து கிடக்கிறன.

சட்டமும், ஒழுங்கமைக்கப்பட்ட சுத்தமான வாழ்வும் நிலை நாட்டகூடிய அரச அங்கங்களிடையே இலஞ்சமும் தொழில் முறைகேடும் பரவலாக இடம்பெறுவதான செய்திகளையே தமிழ்நாட்டு ஊடகங்களின் மத்தியிலே காணக் கூடியதாக இருக்கிறது.

மேலும் மேலை நாட்டு நாகரீக மோகம் காட்டப்பட்ட நடுத்தர மக்கள் நிலைமறந்த அவசர வாழ்வில் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

மேற்குறிப்பிட்ட விடயங்கள் ஒரு சமுதாயத்தையும் அதன் வாழ்கைத்தரத்தையும் அளவிடும் காட்சிமானிகளாக சமூகவியலாளர்களால் கையாளப்படுகிறது.

ஒரு ஆரோக்கியமான ஆட்சி அமைப்பை கொண்ட சமுதாயத்திலே இத்தகைய காட்சிகள் மிக அரிதாகவே காணப்படும்.

அதேவேளை இந்த நிலையையே தமிழ்நாடு முன்னேறிவிட்டது என்று கொள்ளப்படுகிறது.

ஆட்சியில் உள்ளவர்கள் தம்மையும் தமது அதிகாரத்தையும் அதனால் பெறக்கூடிய வருவாய்களையும் பாமரமக்கள் தெரிந்து அளவிடும் சக்தியற்றவர்களாக வைத்திருக்க இத்தகைய முன்னேற்றம் வசதியாய் அமைந்துள்ளது போலும்.

இங்கே மக்கள் மீது குறை கூறுவதோ குற்றம் சுமத்துவதோ ஏற்று கொள்ள முடியாதது. அரசு ஒன்றிற்கு பின்னால் எத்தனையோ திணைக்களங்களும் திட்டமிடலாளர்களும் சட்டமும் கைவசமிருப்பதால் அதனை பயன்படுத்துபவர்களே இத்தகைய ஆட்சி நிலைக்கு பொறுப்பு.

வெளிவரும் செய்திகள் கட்டுரைகளை ஆதாரமாக கொணடு பார்க்குமிடத்து ஆட்சியில் எத்தனை குறைபாடுகள் இருந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் மீது காணக்கூடிய இயல்பான பண்பாக தமது இனம் குறித்த கரிசனை அண்மைய ஆண்டுகளில் என்றுமில்லாதவாறு அதிகரித்து காணப்படுகிறது.

அத்துடன் இதே தமிழ்நாடும் அதன் மக்களும்தான் ஈழத்தில் போராட்டம் ஆரம்பித்ததிலிருந்து பாரிய பின்புலமாக இருந்து வந்திருக்கின்றனர். அதேவேளை அரசியல் கட்சிகள் தமது இலாபங்கருதியே ஈழப்போராட்டத்தை கையாண்டு வந்திருக்கின்றனர்.

இயற்கையாக தமிழ்நாட்டு மக்களிடையே இருக்ககூடிய தமிழினப்பற்றை தமது இலாபத்திற்கு ஏற்றவாறு திசைதிருப்புவதிலும், கட்சி வாரியாக இனப்பற்றை பிரிப்பதிலும் அரசியல் கட்சிகள் வெற்றிகண்டமையால் ஈழப்போராட்டம் பலம் கொண்ட பின்புலத்தை இழந்து நின்றதற்கு காரணமாகியது.

கடந்த பொது தேர்தல் காலங்களில் இனம் அழிகிறது என்று தெரிந்து கொண்டும் தமிழர் என்று ஒரு ஒற்றுமைப்படாது உண்ணாவிரதம் இருக்கிறேன் பாருங்கள் எனக்கு வாக்கு போடுங்கள் என்று ஒருவரும் இந்திய இராணுவத்தை அனுப்புவேன் எனக்கு வாக்கு போடுங்கள் என்று அடுத்தவருமாக கோமாளித்தனமாக போட்டி போட்டனரே தவிர
எனது இனம் அழிகிறது யுத்தத்தை உடனடியாக நிறுத்து என்று எவரும் கூறவில்லை.

இன்னமும் சிறிலங்கா அரசின் தமிழினத்திற்கு எதிரான இனரீதியான அடக்குமுறை எந்த வகையிலும் குறைந்ததாக தெரியவில்லை.

தேர்தல் என்று வரும் போது தான் தமிழ்நாட்டின் பிரதான கட்சிகள் தமிழினம் மீதான அடக்கு முறையை பற்றியும் சிந்திக்கின்றன.

ஆக மீண்டும் தற்பொழுது தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் பற்றிய பேச்சுகள் பரவலாக அடிபடுகிறது. இந்த நிலையிலே கட்சிகள் கூட்டுகள் போடுவதிலும் இட ஒதுக்கீடு செய்வதிலும் மும்முரமாக ஈடுபட்டு வருவது தெரிகிறன.

இவ்வளவு காலமும் தமது சொந்த பிரச்சனைகள் குறித்து ஒருவரை ஒருவர் சாடி விளையாடிக்கொணடிருந்த கட்சிகாரர்கள், தேர்தல் என்றதுமே நடைமுறையில் நாட்டில் என்னன்ன பிரச்சனைகள் கொழுந்து விட்டெரிகின்றன என்பது குறித்து கவனிக்கத் தலைப்படுவர்.

அதிலே எதை அணைப்பது எதை கையாள்வது என்பது குறித்து ஆராய்வதே வழமை.

இதனை பழைய தேர்தலுக்கு முந்திய செயற்பாடுகள் குறித்த செய்திகளில் பலமுறை படித்த ஞாபகம் எம்மில் பலருக்கு வரலாம்.

இணையத்தள செய்தி ஊடகங்களின் ஊடாக பார்க்குமிடத்து தமிழ்நாட்டு மக்கள் மத்தியிலே தற்போது தமிழ்மீனவர்கள் படுகொலை குறித்த செய்திகள் பரவலாக வெளிவந்த வண்ணமுள்ளன.

பலகாலமாக தென்கரையோரத்தில் இருந்து மீன்பிடிதொழில் செய்பவர்கள் இலங்கை கடல் எல்லைகளில் வைத்து சிறிலங்கா அரச படைகளால் கொல்லப்படுவதும் துன்புறுத்தப்படுவதும் இடம் பெற்று வந்துள்ளன.

இந்தியாவின் தென் கடலோர பகுதியை கண்காணிப்பதற்கு என்று இந்திய மத்திய அரசு இலங்கை கடற்படைக்கு ரடார் உபகரணங்களும் செய்மதி தகவல் படபிடிப்பு கருவிகளும் கொடுத்து பயிற்சியும் கொடுத்திருந்தது.

இந்த கருவிகளை கொண்டு தற்போது மீனவர்களை பரந்த இந்திய இலங்கை கடல் எல்லைகளில் தேடிப்பிடித்து சாகடிக்கும் வேலையில் சிறிலங்கா கடற்படை முனைப்புடன் ஈடுபட்டு வருகிறது.

பலகாலமாக இடம்பெற்று வரும் இந்தப்பிரச்சனையை தமிழ்த் தேசியம் சார்ந்து உழைக்கவல்ல சில கட்சிகளும் சில இளைஞர் அமைப்புகளும் கிராமம் கிராமமாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் பொருட்டு பல கடினங்களின் மத்தியில் மீன்பிடி தொழிலாளர் பிரச்சனையை மக்கள் முன் நிறுத்தியதால் தமிழ் நாட்டில் மீனவர் பிரச்சனை தற்போது முன்னிலைக்கு வந்துள்ளது.

திரைப்படத்துறை, பத்திரிகைகள் தொலைக்கட்சி நிறுவனங்கள் என பெரும் பலத்துடன் இயங்கி வரும் தற்போதய தமிழ் நாடு அரசாங்கம் இந்த பிரச்சனையை சந்தர்ப்பங்களில் மூடிமறைத்தோ திரிபு படுத்தியோ அல்லது தனக்கு சாதகமான வகையிலோ வெளியிட்டு வந்த போதிலும் வெறும் மீனவர் பிரச்சனை என பார்க்க முயன்ற தமிழ் நாட்டு மற்றும் இந்திய மத்திய அரசாங்கங்களின் தந்திரங்களின் மத்தியில் இந்த பிரச்சனை தமிழினம் என்றவகையில் முனைப்பு பெறத்தொடங்கி விட்டது.

மகாபோதி சங்கம் தமிழ்நாட்டிலே இருக்கிறது என்பதே ஆத்திரம் கொண்ட சில இளைஞர்கள் அங்கே புகுந்ததாலேயே வெளிநாடுகளில் வாழும் எம்மில் பலருக்கு தெரிய வந்திருக்கிறது.

அது மட்டுமல்லாது பிரச்சனையின் முக்கியத்துவமும் இந்திய வெளியுறவுச்செயலர் சிறிலங்கா தலைவரை சந்திக்க பறந்து சென்ற பிரத்தியேக தன்மையிலிருந்து தெரிய வந்திருக்கிறது.

சென்னையிலிருந்து வெளிவரக்கூடிய இந்திய மத்திய அரசையும் அதன் செயற்பாடுகளையும் காத்து நிற்கக்கூடிய சிந்தனையாளர்கள் குழுமக் கட்டுரைகளில் இது இரண்டு மீனவர்கள் கொல்லப்பட்ட ஓர் பிரச்சனையே, அங்கு கடற்பரப்பிலே சிங்கள கடற்படையினர் நிற்கவில்லை என சிறிலங்கா தூதரக அதிகாரி கூறுகிறார், இது இந்திய இலங்கை உறவை முறிக்க முயலும் சக்திகளின் சதியாக இருக்கலாம்.

இந்திய மீனவர்கள் கடலிலே எல்லைமீறி நகர்வதை கடடம் கட்டமாக சிறிலங்கா கடற்படை செய்கோள்மூலம் அவதானித்திருக்கிறது. இனிமேல் இவ்வாறு இனிமேல் நடைபெறாதவாறு கூட்டு குழுக்கள் உருவாக்க இருதரப்பாலும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

என சிறிலங்கா கடற்படையில் குற்றமில்லை மீனவர்கள் மீதுதான் தப்பு இருக்கிறது என்பதுபோல நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பெரும் பிரயத்தனங்கள் செய்து வருகின்றனர்.

அதேவேளை மாநில அரசாங்கத்தின் பாணியில் பார்ப்போமானால் அண்மைக்காலமாக ஒவ்வொரு மீனவர் படுகொலைக்கும் தமிழ் தேசியவாதிகளால் குரல் கொடுக்கப்பட்டு இன்று தமிழ்நாட்டில் உள்ள சிங்கள அமைப்புகளுடன் மோதுமளவுக்கு வளர்ந்து விட்டது.

இந்நிலையில் பிரச்சனையை இலகுவாக எவ்வாறு தம்பக்கம் எடுத்து கொண்டு வெற்றி கொள்வது என்பதே ஆட்சியில் இருப்பவரது தந்திரமாக இருக்கலாம்.

டெல்லியில் இடம்பெற்ற முதல்வர்கள் மகாநாட்டிற்கு சென்ற முதல்வர் கலைஞர் ஐயா அவர்கள் தமிழ்நாட்டு மீனவர்களுக்காக குரல் கொடுத்தார்.

மேலும் சிறிலங்கா அதிபர் ராஜபக்சவை சந்தித்து விட்டு வந்த இந்திய வெளியுறவு செயலர் நிருபமா ராவையும் கண்டு பேசினார்.

அத்துடன் சேதுக்கடலிலே மீனவர் கொலை பற்றிய செய்திகள் எதுவும் வரவுமில்லை.

இத்தனை பெரிய பிரச்சனையை அதாவது தமிழ்நாட்டின் சட்டமொழுங்கையே அச்சுறுத்த கூடிய பிரச்சனையை ஏற்கனவே திட்டமிட்டாற்போல் எவ்வளவு லாவகமாக தீர்த்து வைத்தார் கலைஞர்.

இப்பொழுது வெற்றி கலைஞருக்கே.

இத்தனை கடின உழைப்பின் மூலம் கிராமம் கிராமமாக வேலைகள் செய்து பிரச்சனையை வெளிக்கொண்டு வந்த தமிழின பற்று கொண்ட கட்சிகள் வெறும் சட்ட ஒழுங்கை மீறும் சக்திகளாகவே சித்தரிக்கப்படுவர்.

அதேவேளை தமிழ் திரைப்படங்களில் இடைவேளை வருவது போல தேர்தல் முடியும் வரை சேதுக்கடலிலே தமிழின அழிப்பிற்கு ஓர் இடைவேளை விடும்படிதான் சிறிலங்கா கடற்படையிடம் கேட்கப்பட்டுள்ளதா?

ஏனெனில் கடந்த கால அனுபவங்களிலிருந்து பார்க்கும் போது சிங்கள அரசின் தமிழின எதிர்ப்பு போக்கு என்றும் குறையாது. கோடி கோடியாய் தன் குடும்பத்திற்கு பணம் சேர்க்கும் கலைஞர் “மீனவ நண்பன்” ஆகவும் முடியாது.

[இக்கட்டுரை நேரடியான பயணம், பத்திரிகை செய்திகள், இணையத்தள செய்திகள், பேட்டிகள், என்பவற்றை ஆதாரமாக கொண்டு எழுதப்பட்டுள்ளது]

இலண்டனில் வசித்துவரும் லோகன் பரமசாமி அரசறிவியல் துறைசார் மாணவராவர். கட்டுரை பற்றியதான கருத்து எழுதுவதற்கு:
loganparamasamy@yahoo.co.uk

- நன்றி: புதினப்பலகை

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.