Friday, February 25, 2011

சட்டசபைத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தமிழ்நாட்டில் சுற்றித் திரியும் பிரபாகரனின் ஆவி

கருணாநிதியும் அவரது மகள் கனிமொழியும் சிறிலங்காவினது அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் கொண்டிருக்கும் உறவு தற்போதுதான் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இந்த நிலையில் விடுதலைப் புலிகளின் ஆதரவு நிலைப்பாட்டை இன்னொருமுறை எடுத்து கருணாநிதியினால் இனியும் ஒருமுறை மக்களை ஏமாற்ற முடியாது.

இவ்வாறு கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில ஊடகமான டெயிலிமிரரில் அதன் பத்தி எழுத்தாளர் Upul Joseph Fernando குறிப்பிட்டுள்ளார். அப்பத்தியின் முழுவிபரமாவது,

தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மிக முக்கிய பிரமுகர்கள் மீது தாக்குதலை நடாத்துவதற்காகச் சதித்திட்டம் தீட்டுவதாக இந்திய உள்துறை அமைச்சு அந்த நாட்டினது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது என அண்மையில் இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

பிரதமர் மன்மோகன் சிங் தமிழ்நாட்டிற்கு வருகை தரும்போது விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் அவர்மீது தாக்குதல் நடாத்தக் கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் இந்து பத்திரிகை குறிப்பிட்டிருந்தது. இந்தியாவின் தமிழ்நாட்டில் மறைந்திருக்கும் விடுதலைப் புலிகள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கினைப் படுகொலை செய்வதற்குத் திட்டமிடுகிறார்கள் என 2010ம் ஆண்டு டிசம்பரில் இதே இந்துப் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. தென்னிந்தியாவில் மறைந்திருக்கும் விடுதலைப் புலிகளின் இன்னொரு இலக்கு தமிழ்நாட்டு முதல்வர் கருணாநிதிதான் என இந்த ஆண்டு பெப்பிரவரி மாதம் இந்து செய்தி வெளியிட்டிருந்தது.

இருப்பினும் தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மறைந்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டினை தமிழ்நாட்டு காவல்துறை ஆணையாளர் லத்திகா சரண் மறுத்திருந்தார். தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல்கள் இடம்பெறும் வேளையில் அரசியல் தலைவர்களை இலக்குவைத்து விடுதலைப் புலிகள் தாக்குதல்களை நடாத்துவார்கள் என்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்றார் அவர்.

அது இவ்வாறிருக்க தமிழ்நாட்டில் கருணாநிதிக்கும் அவரது காங்கிரஸ் கூட்டணிக்குமான ஆதரவு தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் குறைவடைந்துவரும் நிலையில் தமிழ்நாட்டு வாக்காளர்களின் அனுதாபத்தினைப் பெறும் வகையில் ஊடகங்களைப் பயன்படுத்தி இது போன்ற உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடுகின்றன என தமிழ்நாட்டு எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. அதேநேரம் 2009ம் ஆண்டு சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிப்போரில் கருணாநிதியும் அவரது காங்கிரஸ் கூட்டணியும்தான் விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு கொழும்பு அரசாங்கத்திற்கான உதவிகளை வழங்கி நின்றதாக இந்த எதிர்க் கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன.

இது இவ்வாறிருக்க மே 2009ம் ஆண்டு இந்தியாவில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் விடுதலைப் புலிகளை ஆதரித்துக் கருத்துக்களை வெளியிட்டமையினாலேயே கருணாநிதி தமிழ்நாட்டில் வெற்றி பெற்றிருந்தார். அப்போது காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கருணாநிதி சிறிலங்கா அரசாங்கத்தினை எதிர்த்துப் போராட்டங்களை நடாத்தியிருப்பினும் கருணாநிதியோ அன்றி அவரது காங்கிரஸ் கூட்டணியோ போரை நிறுத்தும் வகையிலான உருப்படியான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை.

தேர்தல் இடம்பெற்ற காலப்பகுதியில் ஜெயலலிதா விடுதலைப் புலிகளை எதிர்த்துக் கருத்துக்களைத் தெரிவித்த அதேநேரம் கருணாநிதியோ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக போராட்டங்களைக்கூட தமிழ்நாட்டில் நடாத்தியிருந்தார். இதனைத் தொடர்ந்து தேர்தலுக்காகத் தனது நிலைப்பாட்டினைத் திடீரென மாற்றிக்கொண்ட ஜெயலலிதா கருணாநிதியினை விட விடுதலைப் புலிகளை ஆதரிக்கத் தொடங்கினார்.

ஆனால் தமிழ்நாட்டு மக்களோ சிறிலங்காவில் போரை நிறுத்துவதற்கு உண்மையான முனைப்புக்களை மேற்கொண்டவர் கருணாநிதிதான் எனக் கூறி அவருக்கே வாக்களித்தனர். காங்கிரசினது கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட கருணாநிதி தமிழ்நாட்டில் அதிக ஆசனங்களை வென்றெடுத்தார். ஆனால் கருணாநிதி தங்களை ஏமாற்றிவிட்டார் என்பதை இன்றுதான் தமிழ்நாட்டு மக்கள் உணர்கிறார்கள்.

கருணாநிதியும் அவரது மகள் கனிமொழியும் சிறிலங்காவினது அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் கொண்டிருக்கும் உறவு தற்போதுதான் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. இந்த நிலையில் விடுதலைப் புலிகளின் ஆதரவு நிலைப்பாட்டை இன்னொருமுறை எடுத்து கருணாநிதியினால் இனியும் ஒருமுறை மக்களை ஏமாற்ற முடியாது.

தமிழ்நாட்டில் மறைந்திருக்கும் விடுதலைப் புலிகள் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களை இலக்குவைக்கப் போகிறார்கள் எனக்கூறி தமிழ்நாட்டு மக்களின் அனுதாபத்தினைப் பெறுவதுதான் கருணாநிதிக்கும் அவரது காங்கிரஸ் கூட்டணியும் இடம்பெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெறுவதற்கான ஒரேயொரு தீர்வு

இது இவ்வாறிருக்க தற்போது அமெரிக்காவில் வசித்துவருகின்ற விடுதலைப் புலிகளின் புலம்பெயர் தலைவரான உருத்திரகுமாரனுடன் இந்தியாவினது புலனாய்வுக் கட்டமைப்புக்கள் தொடர்புகளை வைத்திருப்பதாகத் தெரிகிறது. அதேபோல பிரித்தானியாவில் புலம்பெயர் தமிழர்களைப் பிரதிநித்துவப்படுத்தும் உலகத் தமிழர் பேரவையுடனும் இந்தியப் புலனாய்வாளர்கள் தொடர்புகளைக் கொண்டிருக்கிறார்கள்.

இது தவிர நோர்வேயினைத் தளமாகக் கொண்டு செயற்பட்டுவரும் நெடியவனது செயற்பாடுகளும் நோர்வே நாட்டினது புலனாய்வுகள் கட்டமைப்பின் ஊடாக இந்தியா கண்காணித்து வருகிறது. பிரித்தானியாவினைத் தளமாகக் கொண்டு செயற்படும் உலகத் தமிழர் பேரவை ராகுல்காந்தியுடன் தொடர்புகளை மேற்கொள்ள முயல்வதாகச் செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

தமிழ்நாட்டிலோ அன்றி இந்தியாவிலோ எந்தவிதமான பயங்கரவாதத் தாக்குதல்களும் நடக்காது என்ற உறுதிமொழியினை புலம்பெயர் நாடுகளில் செயற்படும் புலிகளின் கட்டமைப்புக்களிடமிருந்து இந்திய உளவுத்துறை பெற்றிருப்பதாகவும் தெரிகிறது. மேலும், புலம்பெயர் நாடுகளில் செயற்பட்டுவரும் தமிழ்ப் புலிகளின் கட்டமைப்பினைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டிலோ அன்றி இந்தியாவிலோ இதுபோன்ற தாக்குதல்களை நடாத்துமித்து இது அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் புலிகளின் ஆதரவுக் கட்டமைப்பினைப் பெரிதும் பாதித்துவிடும்.

இந்தியா மீது தாக்குதலை நடாத்துவதற்கான தளமாக விடுதலைப் புலிகளின் ஆதரவுச் சக்திகள் புலம்பெயர் நாடுகளைப் பயன்படுத்துவதற்கு அவை ஒருபோதும் அனுமதிக்காது. தாங்கள் பயங்கரவாதம்சார் செயற்பாடுகளில் ஈடுபடுமிடத்து அதுபோன்றதொரு சூழமைவினைச் சிறிலங்கா நிச்சயமாக முறைகேடாக பயன்படுத்தும் என புலம்பெயர் நாடுகளிலுள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவுச் சக்திகளும் உருத்திரகுமாரனும் இந்திய உளவுத்துறையினருக்கு எடுத்துக்கூறியிருக்கக் கூடும்.

மே 2009ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலானது பிரபாகரன் உயிருடன் இருக்கும்போது இடம்பெற்றது. இந்த ஆண்டு மே மாதம் இடம்பெறவிருக்கும் தமிழ்நாட்டு சட்டசபைத் தேர்தல் பிரபாகரன் இல்லாததொரு சூழமைவில் இடம்பெறவுள்ளது. எது எவ்வாறிருப்பினும் இடம்பெறவுள்ள இந்தத் தேர்தலுக்கான பரப்புரைகளின் போது சிறிலங்காவினது தமிழர்களது பிரச்சினை மிகவும் முக்கியமானதொரு அம்சமாக விளங்கும்.

தமிழ்நாட்டு மீனவர் பிரச்சினை மாத்திரமின்றி, பிரபாகரனது தாயார் மறைந்த சம்பவம் கூட தமிழ்நாட்டு சட்டசபைத் தேர்தல் பரப்புரைகளில் இடம்பெற்றிருக்கும்.

கருணாநிதியினது கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற ஒருவர் பிரபகாரனது தாயாரின் மறைவுக்குத் தனது அனுதாபத்தினைத் தெரிவித்திருக்கிறார். கருணாநிதியுடன் கூட்டணி அமைத்திருக்கும் திருமாவளவன் பிரபாகரனது தாயாரின் இறுதி நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக சிறிலங்காவிற்குப் பயணமாகவிருந்தார். பார்வதியம்மாவின் இறுதி நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து கொழும்பு சென்ற திருமாவளவன் கொழும்பு வானூர்தி நிலையத்தில் வைத்துத் திருப்பி அனுப்பப்பட்டிருந்தார்.

மே 2009ல் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் பிரபாகரனது நிழல் தமிழ்நாட்டு அரசியல் வாதிகளை எவ்வாறு பாடாய்ப் படுத்தியதோ அதேபோல இடம்பெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் அவரது ஆவி தமிழ்நாட்டு அரசியல் வாதிகளுக்குப் பின்னால் அலைந்து திரிகிறது. இவ்வாறு கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில ஊடகமான டெயிலிமிரரில் அதன் பத்தி எழுத்தாளர் Upul Joseph Fernando குறிப்பிட்டுள்ளார்.

தி.தமிழரசன்,

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.