Sunday, February 13, 2011

விடுதலைப்புலிகளின் தலைவர் ஏன் தோற்றார்? - விளக்கம் தருகிறார் இந்திய அசாம் மாநில கிளர்ச்சித் தலைவர்

2009 ஆம் ஆண்டு மே மாதம் புலிகள் அமைப்பு போராட்டத்தில் தோல்வியைத் தழுவியபோது இந்திய அசாம் மாநில ஐக்கிய கிளர்ச்சி முன்னணியின் தலைவர் பாரேஷ் பாருவா கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அது “புலிகளின் தலைவர் ஏன் தோற்றார்“ என்ற தலைப்பில் அமைந்திருந்தது.

அதாவது புலிகளின் தலைவர் தோற்றமைக்குக் காரணம் அவர் மறைவிடங்களைப் புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்தமையே என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் அசாம் மாநிலத்தில் “பாரேஷ் பாருவா“ என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். விடுதலைப் புலிகளுக்கு நிகரான ஒரு போராட்ட அமைப்பு என்று பலராலும் வர்ணிக்கப்படும் அசாம் ஐக்கிய கிளர்ச்சி முன்னணியின் தலைவர் இவர்.

இந்த அமைப்பு சுமார் 30 வருடங்களாக ஒடுக்கப்பட்ட அசாம் மக்களுக்காகப் போராடி வருகிறது. புலிகள் போல இந்த அமைப்பையும் இந்தியா தடைசெய்துள்ளது. இவ்வமைப்பு பாரிய ஆயுதப் போராட்டம் ஒன்றை கடந்த மூன்று தசாப்த காலமாக நடத்திவருகிறது.

உலகில் அமெரிக்காவால் தேடப்படும் பின் லேடன் இருப்பிடம் கூட அமெரிக்காவுக்குத் தெரியும்.

ஆனால், தன் இருப்பிடத்தை எவராலும் கண்டு பிடிக்க முடியாது என்றும் பாரேஷ் பாருவா தெவித்திருந்தார். அது ஒருவகையில் உண்மையும் கூட.

பாரேஷ் பாருவா போராட்ட இயக்கத்தின் தலைவராக இருக்கும் நிலையில் அவர் அவ்வியக்கத்தின் மூத்த தளபதிகள், மற்றும் அடிமட்ட (ஆரம்பப்) போராளிகளிடம் இருந்து தன்னைப் பிரித்து, பிறிதொரு இடத்திலேயே வாழ்ந்துவந்தார் என்பதே உண்மையாகும்.

அதனால் அவர் எங்கு இருக்கிறார் அல்லது எத் திசையில் இருக்கிறார் என்பதைக் கூட அறிய இந்திய அரசால் முடியவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்திய அரசானது ஒரு புலனாய்வு அதிகாரியை அவர் இயக்கத்தில் சேர்த்து வேவுபார்க்க விட்டது. அவரும் நீண்ட நாள் இயக்கத்தில் இருந்து இறுதியில் காட்டுப் பகுதிக்குச் சென்றார். அங்கே இன்னும் சில தினங்களில் பாரேஷ் பாருவா இருக்கும் இடத்தை அவர் கண்டுபிடிப்பார் என முழுமையாக இந்தியா நம்பியது. ஆனால் கிடைத்ததோ ஏமாற்றம் தான். ஏனெனில் அவர் போராளிகளோடு இல்லை.

இதனை பாரேஷ் பாருவா ஒரு பெரிய சாதனையாக் கூறி சுயசரிதை போல கட்டுரை எழுதியிருந்தார். ஆனால் பாரேஷ் பாருவா ஒரு ஒளிந்திருக்கும் போராளி பேசுவதற்குச் சமானமானதாகவே கருத முடியும். ஏனெனில் போராளிகளையும் மூத்த தளபதிகளையும், நம்பாது பிரிந்து வேறு ஒரு இடத்தில் இருந்து உத்தரவுகளை வழங்கி, தனது இருப்பை உறுதி செய்வது என்பது ஒரு தலைவனுக்கு அழகு இல்லை.

இந்நிலையில் பாரேஷ் பாருவா கூறிய கருத்துக்கள் ஒப்பிட முடியாதவையாக இருப்பதோடு, தலைவன் போராடாது வேறு ஆட்களைப் போராடச் சொல்வதே நல்லது என்றது போன்ற கருத்துப்படவுள்ளது.

2009ஆம் ஆண்டு இவர் தெரிவித்த இக் கருத்துகளுக்கு தற்போது பலத்த அடி விழுந்துள்ளதே உண்மையாகும். ஆம்! அசாம் கிளர்ச்சி அமைப்பு தற்போது தோல்வியின் விளிம்பில் உள்ளது. இந்திய அரசோடு இவர்கள் தற்போது சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவில் அசாம் மாநிலத்துக்கு சுதந்திரம் வேண்டும் எனப் போட்ட இந்த அமைப்புடன் தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்புடன் பல இந்திய இராணுவத்தினரைக் கொன்ற அமைப்புடன் தற்போது சிதம்பரம் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

ஆனால், விடுதலைப் புலிகளை இந்தியா ஒருபோதும் மன்னிக்கவில்லை. இதன் பின்னணி தான் என்ன? காங்கிரஸா? இல்லை இந்தியாவா? அல்லது தமிழ் நாடுமேல் கொண்டுள்ள நம்பிக்கையின்மையா என்பதே கேள்விக்குறியாகும்.

தனி ஈழம் அமைந்தால், இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலம் பிரிந்து செல்ல நேரிடலாம், ரஷ்யா போல இந்தியாவும் உடைந்தால் அது தனது வல்லாதிக்கத்தையே இழக்கும் நிலை உருவாகும் என எண்ணியதா இந்தியா?

இச் சொந்த நலனுக்காக இந்தியா செயற்பட்ட விதம் மிகவும் கொடுமையானது. இதற்கு பதில் சொல்லும் காலம் மிகவிரைவில் உதயமாகும்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.