Thursday, May 03, 2007
ரி.ரி.என் சுயாதீன தொலைக்காட்சி சேவை தற்காலிக இடைநிறுத்தம் - ஒரு வாரத்தில் மீண்டும் ஒளிபரப்பாகும்.
Thursday, May 03, 2007
No comments
பாரிசை மையமிட்டு இயங்கி வந்த தமிழ் தொலைக்காட்சி இணையத்தின் (TTN) ஒளிபரப்பு புதன்கிழமை (02-05-07) மாலை நான்கு மணிமுதல் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
பிரான்சில் இயங்கும் தனியார் மற்றும் பொது ஒலி, ஒளி ஊடகங்களை கண்காணித்து ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளும் 'ஒலி, ஒளிபரப்பு கட்டுப்பாட்டு உயரதிகார சபை' (Conseil Superior l'Audiovisuel - CSA) வழங்கிய உத்தரவின் பேரில் ரிரிஎன் ஒளிபரப்பு இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இத்தகவலை தமிழ் தொலைக்காட்சி இணையத்தின் ஒளிபரப்பை அஞ்சல் செய்யும் GlobeCast என்னும் பிரெஞ்ச் செய்மதி நிறுவனம் தொலைநகல் மூலம் தமக்கு தெரிவித்தாக ரிரிஎன் நிறுவனத்தினர் அறிவித்துள்ளனர்.
கடந்த ஏழு ஆண்டுகளாக ஐரோப்பாவிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் ஏறத்தாழ 22,000 சந்தா செலுத்தும் பார்வையாளர்களைக் கொண்டு இயங்கி வந்த தமிழ் தொலைக்காட்சி இணையம் இடை நிறுத்தம் செய்யப்பட்டதானது புலம்பெயர்ந்த தமிழரிடையே அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும், கவலையையும் தோற்றுவித்துள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்தின் ஊடக உரிமை மீறல்கள் தொடர்பாக குறிப்பாக தமிழ் ஊடகங்களுக்கு எதிரான உரிமை மீறல்கள் அனைத்துலக பத்திரிகையாளர் அமைப்புக்கள், மனித உரிமை அமைப்புக்கள் பலமுறை கண்டனம் செய்துள்ளன.
இருப்பினும் சிறிலங்கா அரசாங்கமானது இலங்கையில் செய்தித் தணிக்கை மூலம் தமிழ் ஊடகங்களை முடக்கி, ஊடக சுதந்திரத்தை நசுக்குவதுடன், ஊடகவியலாளர்களை படுகொலை செய்வதும், அவர்களை அச்சுறுத்துவதும் தொடர்கின்றன.
தற்போது உறவுப்பாலம் அமைத்துவரும் புலம்பெயர்ந்தோர் இடையேயான ஊடகங்களை முடக்குவதிலும் சிறிலங்கா அக்கறை செலுத்தி வருகின்றது.
இதன் வெளிப்பாடாகத்தான் பிரான்சில் ரி.ரி.என். இடை நிறுத்தமானதா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முன்னர் தமிழீழத்தில் இருந்து ஒளிபரப்பாகும் தமிழீழ தேசிய தொலைக்காட்சி ஒளிபரப்பை தாம் நிறுத்தி உள்ளதாக அமெரிக்க நிறுவனமான இன்ரல் சற் அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் தொலைக்காட்சி இணையத்தின் இடைநிறுத்தம் பற்றி ஊடகச் செயற்பாட்டாளர் கி.பி.அரவிந்தன் எம்மிடம் கூறியதாவது:
கட்டாரில் இருந்து ஒளிபரப்பாகும் அல்ஜசீரா தொலைக்காட்சியும் ஐரோப்பாவில் இப்படியான பல தடைகளுக்கு முகம் கொடுத்ததனை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
மேற்கத்தைய ஐனநாயகம், ஊடக சுதந்திரம், மனித உரிமைகள் பற்றி நன்கு அறிந்தவர்கள் இதனை ஆச்சரியத்துடன் நோக்க மாட்டார்கள். தற்போதைய இடைநிறுத்தத்தின் உள்நோக்கம் பற்றி சமூக ஆர்வலர்கள், தமிழ் ஊடகச் செயற்பாட்டாளர்கள் தெளிவாக அறிய முயற்சிக்க வேண்டும்.
அத்துடன் இந்நிலைபற்றி அனைத்துலக ஊடகச் சுதந்திர செயற்பாட்டளுக்கு முறைப்பாடுகளை சமர்ப்பிக்கவும் முயற்சிக்க வேண்டும். அனைத்துலக அளவில் தமிழ்த் தேசிய அடையாள திரட்சியை சிதைப்பதற்கு இவ்வகை முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் நவீன தொழில்நுட்பம் விரல்நுனியில் இணைக்கும் வசதியையும் தந்துள்ளது என்பதையும் நாம் மறந்துவிடுதல் கூடாது என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.