[வியாழக்கிழமை, 3 மே 2007,] "அரசாங்கப் படைகள் வடக்கு - கிழக்கில் வான் தாக்குதல்களை மேற்கொண்ட போது தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்களை தற்போது தென்னிலங்கை மக்கள் அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர். ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக்காலத்தில் நாட்டில் வான்தாக்குதல்கள் இடம்பெறவில்லை. யதார்த்தத்தை புரிந்துகொண்டு பௌத்த மத தர்மத்தின்படி இனப்பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்" என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். இனப் பிரச்சினைக்கான தீர்வு யோசனையை சிறிலங்கா சுதந்திரக் கட்சி இதய சுத்தியுடன் முன்வைக்கவில்லை. தமிழ் மக்களை விடுத்து சிங்கள இனத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான என்னால் கூட இந்த யோசனையை ஏற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது. 30-க்கும் மேற்பட்ட வருடங்களை கடந்து சென்று சுதந்திரக் கட்சி யோசனையை தயாரித்துள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யோசனை வெளிவருவதற்கு முன்னரே குப்பைத் தொட்டிக்குள் சென்றுவிட்டது" என்றும் அவர் மேலும் கூறினார். நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பாக கொழும்புத் தமிழ் நாளேட்டுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: "இனங்களுக்கிடையில் நிலவுகின்ற நம்பிக்கையீனமே நாட்டின் இனப்பிரச்சினைக்கு அடிப்படைக் காரணமாகும். எனவே இனங்களுக்கிடையில் நம்பிக்கையை கட்டியெழுப்பும் வகையில் அரசாங்கம் வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். இதற்காக நீண்டகால வேலைத் திட்டங்களை உருவாக்கவேண்டும். இரு நாடுகளுக்கு இடையில் யுத்தம் இடம்பெறவில்லை. இது ஒரு நாட்டின் இரண்டு இனங்களுக்கிடையில் நம்பிக்கையின்மையால் இடம்பெறுகின்ற மோதலாகும். சிறிலங்கா சுதந்திரக் கட்சி பெயரளவில் இனப்பிரச்சினை தீர்வு யோசனையை முன்வைத்துள்ளது. எந்தவிதமான நேர்மைத்தன்மையும் இன்றி இந்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மாவட்ட சபை என்பது பல வருடங்களுக்கு முன்னர் விவாதிக்கப்பட்ட விடயமாகும். இந்த திட்டத்தினை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யோசனை வெளிவருவதற்கு முன்னரே குப்பைத் தொட்டிக்குள் சென்றுவிட்டது. தற்போது நடைமுறையில் உள்ள மாகாண சபை முறைமையின் அதிகாரங்களைக் குறைப்பதற்கு முயற்சிப்பது நகைச்சுவைக்குரிய விடயமாகும். குறைந்த பட்சம் பௌத்த மத கோட்பாடுகளின் படி அரசாங்கம் செயற்படவேண்டும். அடித்தால் திருப்பி அடிக்கவேண்டும் என்று பௌத்த மதத்தில் கூறப்பட்டுள்ளதா? என்று அண்மையில் நான் அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பியிருந்தேன். ஆனால் இதுவரை அரசாங்கம் எனது கேள்விக்கு பதிலளிக்கவில்லை. அடித்தால் திருப்பியடிக்கக்கூடாது. ஏன் அடிக்கின்றனர் என்பது குறித்து ஆராயவேண்டும். பௌத்த மதத்தின் கோட்பாடுகள் தற்போது திரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. அண்மைக்காலமாக விடுதலை புலிகள் வான்தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர். அரசாங்கம் வடக்கு - கிழக்கில் வானூர்திக் குண்டுகளை போட்டபோது அப்பகுதி மக்கள் எத்தனை துன்பங்களை அனுபவித்திருப்பர் என்பதனை தற்போது எங்களால் உணரமுடிகின்றது. கேட்டால் பதில் தாக்குதல் என்று கூறுகின்றனர். இதற்கும் ஐக்கிய தேசிய கட்சியே குற்றஞ்சாட்டபடுகின்றது. ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக் காலத்தில் எந்தவிதமான வான்தாக்குதலும் இடம்பெறவில்லை. மக்கள் நிம்மதியாக வாழ்ந்தனர். நாட்டில் இரவு நேரத்தில் திடீரென மின்சாரத்தை துண்டிப்பதே மகிந்த சிந்தனையாகும். அரசாங்கம் யதார்த்தத்தை உணர்ந்து செயற்படவேண்டும். இந்த நாட்டில் கடந்த பல வருடங்களாக புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினையை பேச்சு வார்த்தை மூலமே தீர்க்க முடியும் என்பதனை அனைவரும் உணரவேண்டும். வன்முறைகள் வேண்டாம் என்றே பௌத்த மதம் கூறுகின்றது. இந்நிலையில் நாங்கள் உண்மையான பௌத்தர்களாக இருந்தால் பழிவங்கும் செயற்பாட்டை நிறுத்தவேண்டும். நாட்டில் சமானத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆவார். எனவே நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்காகவே ஐக்கிய தேசிய கட்சி விரைவில் ஆட்சியைக் கைப்பற்றும்." இவ்வாறு அவர் மேலும் தெரிவித்தார்.
Thursday, May 03, 2007
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.