[வியாழக்கிழமை, 3 மே 2007,]
இலங்கையின் அரை நூற்றாண்டு காலத் தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அரை வேக்காட்டுத்திட்டம் ஒன்றை யோசனை ஒன்றை முன்வைத்திருக்கின்றது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி.
""சிங்கள ஆட்சியாளர்களின் நீண்டகால வரலாற்றுப் பின்னணி கொண்ட ஏமாற்று நாடகத்தின் மற்றோர் அங்கமே இந்த யோசனை.
பரிசீலனைக்குக்கூடத் தமிழர்கள் தொட்டுப்பார்க்கவும் அருகதையற்றது அது'' என அடியோடு அதனை நிராகரித்து இலங்கைத் தமிழர்களின் ஒட்டுமொத்தக் கருத்தைப் பிரதிபலித்திருக்கின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியினர் முதல் வீ.ஆனந்தசங்கரி வரை இந்த நாட்டின் தமிழ் பேசும் மக்களின் தரப்புகள் எல்லாமே இந்த யோசனைகளை ஒட்டுமொத்தமாக நிரகரித்திருக்கின்றார்கள்.
பௌத்த சிங்களப் பேரினவாதத் திமிரின் ஒட்டுமொத்த வெளிப்பாடாக முன்நிறுத்தப்பட்டிருக்கின்றது இந்த யோசனைத்திட்டம் என்றால் அது மிகையாகாது. இந்தத் திட்டத்தின் இரண்டு அடிப்படைகள் இங்கு முக்கியமாகக் கவனிக்கத்தக்கவை.
ஒன்று பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் பேரினவாதச் சிந்தனை அதில் முழு அளவில் உறுதியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.
அடுத்தது அரைகுறை அதிகாரப் பகிர்வை அதுவும் மாவட்ட மட்டத்திற்கு வழங்குவதாகக் கூறுவதன் மூலம் தமிழரை அடிமைப்படுத்தும் மேலாண்மைச் செருக்குப் போக்கிலிருந்து தான் விடுபடப் போவதில்லை என்பதை சிங்களம் மீளச் சூளுரைத்து நிற்கின்றது.
இதில் முதல் விடயமான பௌத்த சிங்களப் பேரினவாதச் சிந்தனையை நிலைநாட்டும் விவகாரத்தில் ஸ்ரீல. சு. கட்சியின் ஸ்தாபகர் எஸ். டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்காவின் சிங்களத் தேசியவாத மமதைப் போக்கின் அடுத்த வரலாற்று நாயகனாகத் தன்னை நிலைநிறுத்த முயல்கிறார் அரசுத் தலைவர் மஹிந்தர்.
அடுத்த விவகாரத்தைப் பொறுத்தவரை மாவட்ட மட்டத்தில் அதிகாரப்பகிர்வு என்று கூறுவதன் மூலம் எண்பதுகளின் முற்பகுதியில் அப்போதைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனாவினால் முன்வைக்கப்பட்டு, தமிழர்களால் நிராகரிக்கப்பட்டு, செயலிழந்து பயனற்றுத் தோற்றுப்போன உப்புச்சப்பற்ற மாவட்ட அபிவிருத்தி சபைத் திட்டத்தை மஹிந்தரின் கட்சி மீளத் தூக்கிப் பிடித்திருக்கின்றது.
ஆக, பௌத்த சிங்கள மேலாண்மை ஆதிக்கச் சிந்தனையோடும், தமிழர்களுக்கு நீதியான நியாயமான அதிகாரப் பகிர்வை வழங்க மறுக்கும் பிடிவாதத்தோடும் இந்தத் திட்டத்தை இனப்பிரச்சினைத் தீர்வுக்கான ஆளும் கட்சியின் யோசனையாக வெளிப்படுத்தியதன் மூலம், பண்டாரநாயக்காவின் பௌத்த சிங்களத் தேசியவாதத்தையும், ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் தமிழர்களை அடிமைப்படுத்தும் அதிகாரவாதத்தையும் பிரதிபலித்து, அந்த இரு தலைவர்களும் ஒன்று சேர்ந்த மறு அவதாரமாகப் பேரினவாதச் சிங்களவர்கள் முன்னிலையில் தம்மைத் தூக்கி நிறுத்தியிருக்கின்றார் மஹிந்தர்.
இது இப்படித்தானாகும் என்பதை விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் தமது கடந்த வருட மாவீரர் தின உரையில் ஏற்கனவே திட்டவட்டமாக வெளிப்படுத்தியிருந்தார்.
பற்றியெரியும் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு சிங்களத்தின் ஆளும் வர்க்கம் நீதியான தீர்வை ஒருபோதும் முன்வைக்கப்போவதில்லை.
தமிழர்களுக்கு எதிரான தனது இன அழிப்புப் போரைத் தொடர்வதற்காக அனைத்துக் கட்சி மாநாட்டை தென்னிலங்கைச் சிங்களம் சாகாது வைத்து இழுத்தடிக்கும் என்று பிரபாகரன் குறிப்பிட்டிருந்தார். அதுவே யதார்த்தத்தில் நடந்து கொண்டிருக்கின்றது.
அதையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனும் இப்போது தெளிவாகச் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
""தமிழர்கள் தொட்டுக்கூடப் பார்க்கும் தகுதியோ, அருகதையோ அற்ற இந்த யோசனைத் திட்டத்தை முன்வைத்ததன் மூலம் ஐக்கிய இலங்கைக்குள் தமிழர்களுக்கு கௌரவத்துடன் கூடிய நீதியான தீர்வை வழங்கி, இணைந்து வாழ்வதற்குத் தாங்கள் தயாரில்லை என்பதை சிங்கள ஆட்சி தெளிவுபடுத்திவிட்டது.
இந்த உண்மையை உலகு தெளிவாகக் கண்டுகொள்ளவும் புரிந்துகொள்ளவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இராணுவ ரீதியில் தமிழர்களை வெல்வதற்கான முனைப்புடன் முன்னெடுக்கப்படும் போரியல் தந்திரங்களுக்கான அவகாசத்தைப் பெறவே சிங்கள ஆட்சியாளர்கள் காலத்துக்குக் காலம், உருப்படியற்ற, அரைகுறைத் தீர்வு யோசனைகளை முன்வைத்து, காலத்தை இழுத்தடித்து, ஏமாற்று நாடகங்களை அரங்கேற்றுகின்றனர்.
""இலங்கை இனப்பிரச்சினையில் சிங்களத்தின் சதித் தந்திரோபாயத்தை இந்தியாவும் சர்வதேச சமூகமும் சரியாக எடைபோட்டுக் கணித்துத் தீர்மானம் எடுக்க இது வாய்ப்புத் தந்துள்ளது.'' என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருக்கின்றமை ஒட்டுமொத்தத் தமிழினத்தின் கருத்துத்து வடிவமே.
ஏற்கனவே புலிகளோடு நடத்தப்பட்ட சமாதான பேச்சுகளில் எட்டப்பட்ட தீர்வுகளை அடிப்படையாக வைத்து அமைதி முயற்சிகள் தொடர வேண்டும் என சர்வதேச சமூகம் வலியுறுத்த, அவற்றையெல்லாம் தூக்கிக் கடாசிவிட்டு, இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்னர் நிராகரிக்கப்பட்டு, குப்பைக்குள் வீசப்பட்ட "மாவட்ட மட்ட அதிகாரப் பகிர்வு' என்ற உளுத்துப்போன திட்டத்துடன் வந்திருக்கின்றார் மஹிந்தர்.
தமிழர்களின் சுயநிர்ணயப் போராட்டத்தின் பின்னால் புதைந்து கிடக்கும் நியாயத்தை, தென்னிலங்கைச் சிங்களத்தின் மேலாதிக்கத் திமிர்ப்போக்கைப் பிரதிபலிக்கும் இந்த யோசனைத் திட்டம் வாயிலாக உணரக்கூடிய சந்தர்ப்பம் சர்வதேச சமூகத்துக்குக் கிட்டியிருக்கின்றது.
தமிழர்களுக்கு நீதி செய்ய கௌரவத்துடன் கூடிய வாழ்வை வழங்க அவர்களின் நியாயமான அபிலாஷைகளை நிறைவுசெய்ய மறுக்கும் சிங்களப் பேரினவாதத்தின் இந்தத் திமிர்ப் போக்குக் குறித்து உலகின் பதில் என்ன? சர்வதேசம் இனி என்னதான் செய்யப்போகிறது.
அதனிடம் உருப்படியான அணுகுமுறை ஏதாவது உண்டா?
அமைதித் தீர்வுக்கான ஆளுங்கட்சியின் விட்டுக்கொடுப்பு இவ்வளவுதான் என்பதை எழுத்தில் படித்துப் புரிந்த இந்த நிலைமையின் பின்னராவது, தமிழர்களின் சுயநிர்ணயப் போராட்டத்தை அங்கீகரிக்க சர்வதேச சமூகம் காலம் தாமதியாது முன்வரவேண்டும். அதுதான் நீதியானது; தமிழர்களுக்கு நீதியுடனும் கௌரவத்துடனுமான ஒரு தீர்வைப் பெற்றுக் கொடுக்கவல்லது.
Thursday, May 03, 2007
சுதந்திரக் கட்சியின் யோசனை வெளிப்படுத்தும் உண்மைகள்.
Thursday, May 03, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.