Monday, May 07, 2007

வான்புலிகளை எதிர்கொள்ள அதிநவீன ஏவுகணைகளை கொள்வனவு செய்கிறது சிறிலங்கா.

[திங்கட்கிழமை, 7 மே 2007] தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல்களை முறியடிப்பதற்காக சிறிலங்கா அரசாங்கம் பெருமளவில் வானூர்தி எதிர்ப்பு ஆயுதங்கள், ராடார்கள், ஏவுகணைகள், பீரங்கிகள், வானூர்திகளை கொள்வனவு செய்ய முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கொழும்பு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி: வான்புலிகளை சமாளிப்பதற்காக சிறிலங்கா வான்படையினர் வான் எதிர்ப்பு சாதனங்களை கொள்வனவு செய்ய வேண்டும் என்று 2005 ஆம் ஆண்டு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. அதில் ராடார்களில் வானூர்திகள் கண்டறியப்பட்டாலும் ராடார்களினால் வழிநடத்தப்படும் துப்பாக்கிகள் தரையில் இல்லாவிட்டால், வழிநடத்தப்படும் ஆயுதங்கள் உள்ள எம்.ஐ-24 ரக உலங்குவானூர்திகள் இல்லாதுவிட்டால் அதில் பயனில்லை. எனினும் விடுதலைப் புலிகளின் வானூர்திகளை சுட்டு வீழ்த்துவதற்கு முன் எச்சரிக்கைகள் அவசியமானது. எம்.ஐ-24 ரக உலங்குவாணூர்திகளின் தாக்குதல் வலிமையை அதிகரிக்கும் நோக்கதுடன் அரசு ஸ்பைக் ஈஆர் (Spike ER) எனும் ஏவுகணைத் தொகுதியை வாங்க முயற்சி எடுத்துள்ளது. இந்த ஆயுதம் முதலில் குறிபார்த்து பின்னர் ஏவப்படுவதாகும். அதன் பின்பு இது வானோடியினால் இலக்கு நோக்கி வழிநடத்தப்படும். இந்த ஆயுதம் ஏவிவிட்டு மறந்துவிடு (Fire and Forget) என்ற ஆயுதத்தை போலவும் பயன்படுத்தலாம். அதாவது ஒருமுறை ஏவிவிட்டால் அது தனாகவே இலக்கை சென்று தாக்கி அழிக்கக்கூடியது. இந்த ஆயுதங்களை வாங்குவதன் மூலம் எம்.ஐ-24 ரக உலங்குவானூர்திகளின் தாக்குதல் வலிமை அதிகரிப்பதுடன், அது இலகுவாக எதிரியின் வானூர்திகளை தாக்கி அழிக்கும் வலிமையையும் பெற்றுவிடும். மேலும் இந்த ஆயுதங்களின் மூலம் விடுதலைப் புலிகளின் கடல் மற்றும் தரையில் உள்ள இலக்குகளையும் தாக்கி அழிக்க முடியும். இது படையினருக்கு மிகவும் பயனுள்ளதாகும். அதேசமயம், ராடார்களினால் வழிநடத்தப்படும் புதிய துப்பாக்கிகளை வாங்குவதும் மிகவும் பயனுள்ளதாகும். இது இராணுவத்தினர் வெற்றிகரமாக விடுதலைப் புலிகளின் வானூர்திகளை வீழ்த்தும் சாத்தியக்கூறை அதிகரிக்கும். இந்த துப்பாக்கிகளில் உள்ள ராடார்கள் முதலில் இலக்குகளை கண்டறிந்து தமது இலக்கின் எல்லைப்புள்ளிக்குள் உள்வாங்கிய பின்னர் அது துப்பாக்கி தாக்குதலை நெறிப்படுத்தும். எனவே தாக்குதலில் இலக்கு சிக்குவது உறுதியானது. இந்த வகை துப்பாக்கிகளை மிகவும் முக்கியமான இலக்குகள் உள்ள பிரதேசங்களில் நிறுவ வேண்டும். மனிதர்களால் தோளில் வைத்து இயக்கக் கூடிய வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகளையும் அரசு அதிகளவில் கேந்திர முக்கியத்துவமான பிரதேசங்களில் நிறுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையானது சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கா ஆட்சியில் இருந்த போது பாதுகாப்பு அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் அதனை நிராகரித்திருந்தார். கடந்த வருடம் சிறிலங்காவின் படைத்துறை அதிகாரி சீனாவின் பாதுகாப்புத்துறை விநியோகத்துறைக்கு சென்றிருந்தார். இந்த விநியோகஸ்தர் தான் சிறிலங்காவிற்கு மிகை ஒலி வானூர்திகளையும், பயிற்சி வானூர்திகளையும் வழங்கியவர். இந்த ஜெட் வானூர்திகள், வானில் இருந்து வானூர்திகள் மீது தாக்குதலையும், இரவு நேரப் பறப்புக்களையும் மேற்கொள்ளக் கூடியவை. எனினும் தமக்கு வானூர்தி அச்சுறுத்தல்கள் இல்லை எனவும், இவை தமக்கு தேவையில்லை எனவும் அதிகாரிகள் அன்று தெரிவித்திருந்தனர். எனினும் தற்போது அவர்களின் தெரிவாக மிக்-29 ரக வானூர்திகள் உள்ளன எனக் கூறப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.