Tuesday, May 08, 2007

துணை இராணுவக் குழுவினரை அடக்க சிறிலங்காவுக்கு அமெரிக்கா அழுத்தம்.

[செவ்வாய்க்கிழமை, 8 மே 2007]

சிறிலங்கா அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளில் படுகொலைகளை நிகழ்த்தி வரும் துணை இராணுவக் குழுவினரை கட்டுப்படுத்தி வைக்குமாறு சிறிலங்காவுக்கு அமெரிக்க அரசாங்கம் அழுத்தம் கொடுக்கிறது.

அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சின் உதவிச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர் தனது இலங்கைப் பயணத்தை இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளார்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ரிச்சர்ட் பௌச்சர், இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ வழித் தீர்வு காண முடியாது என்று தெரிவித்திருந்தார்.

தற்போதைய இலங்கைப் பயணத்தின் போது சிறிலங்கா மீது கடுமையான அழுத்தங்களை அமெரிக்கா செலுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

சிறிலங்காவின் கட்டுப்பாட்டுப் பகுதியில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது சிறிலங்கா அரசாங்கத்தினது பொறுப்புதான் என்றும் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவைக் கண்டிப்பாக கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அமெரிக்கா திட்டவட்டமாகத் தெரிவிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

இலங்கையில் 3 நாட்கள் பயணம் மேற்கொள்ளும் ரிச்சர்ட் பௌச்சர், யாழ்ப்பாண குடாநாட்டுக்கும் செல்கிறார். பல்வேறு தரப்பு பிரதிநிதிகளையும் அவர் சந்தித்துப் பேச உள்ளார்.

நீதிக்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் சிறார்களை தனது குழுவில் சேர்த்தல் ஆகியவற்றை கருணா குழுவினர் மேற்கொள்வதாக கண்காணிப்புக் குழுவினர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் தூதுவர் ஆகியோர் ஏற்கெனவே குற்றம்சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.