Sunday, May 06, 2007

கன்னியாகுமரி மாவட்ட கடல் தொழிலாளர்களுடன் தொல். திருமாவளவன் சந்திப்பு.

[ஞாயிற்றுக்கிழமை, 6 மே 2007]

இந்திய கடல் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட ஐந்து கடல் தொழிலாளர்கள் குடும்பத்தினரையும், காணாமல் போன பன்னிரெண்டு கடல் தொழிலாளர்களின் குடும்பத்தினரையும் சந்திக்க தமிழ்நாடு விடுதலைச் சிறுத்தைகளின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன், தனது கட்சியின் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் பா.ரவிக்குமாருடன் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நேற்று சனிக்கிழமை சென்றார்.

இந்த சந்திப்பை கடலோர வளர்ச்சி மற்றும் அமைதிப்பணிக் குழுவின் இயக்குநர் அருட்தந்தை சூசை ஒருங்கிணைத்தார்.

ஏழு கடல் தொழிலாளர்கள் காணாமல் போன கோடிமுனை கிராமத்திற்கும், மூன்று பேர் காணாமல் போன கொட்டில் பாடு கிராமத்திற்கும் தொல். திருமாவளவனும், பா.ரவிக்குமாரும் நேரடியாக சென்றனர்.
சந்திப்பிற்குப் பிறகு ஊடகவியலாளர்களிடம் திருமாவளவன் தெரிவித்துள்ளதாவது:

''1985 இல் தொடங்கி இதுவரை 76 கடல் தொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர். இந்த 76 குடும்பங்களையும் நான் சந்தித்துள்ளேன். துயரமான ஒரு வாழ்வை கடற்கரையோர கடல் தொழில் செய்யும் மக்கள் எதிர்கொண்டுள்ளார்கள்.

கடல் தொழில் செய்யும் ஒருவர் காணாமல் போய் இரண்டாண்டு ஆனபிறகும் கண்டடையாமல் போனால் அவர் இறந்து போனதாக கருதி அந்த குடும்பங்களுக்கு நிவாரணங்கள் வழங்க வேண்டும். ஆனால் அப்படி எந்த நிவாரணமும் இதுவரை இந்த கடல் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை.

அரசாங்கமே இந்த கடல் தொழிலாளர்களை தத்தெடுக்க வேண்டும். மற்றபடி சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஐந்து கடல் தொழிலாளர்கள் கொல்லப்பட்ட, 12 கடல் தொழிலாளர்கள் காணாமல் போன சம்பவத்தை நிச்சயம் விடுதலைப் புலிகள் செய்திருக்க மாட்டார்கள். காரணம் இந்திய அரசாங்கத்தோடு விடுதலைப் புலிகள் நல்லுறவை பேணவே விரும்புகிறார்கள்.

இந்தியா இதற்கு முன்னும் பல முறை இலங்கை பிரச்சனையில் தலையிட்டுருக்கிறது. ஆனால் இனியும் தலையிட விரும்பினால் ஈழத்தமிழருக்கு ஆதரவாக மட்டுமே தலையிட வேண்டும். இல்லை என்றால் ஒதுங்கி இருக்க வேண்டும். அதனை விட்டு சிங்கள இராணுவத்துக்கு தமிழ் மக்களை ஒடுக்க உதவியாக எவ்வித உதவிகளையும் செய்யக்கூடாது.

கடல் தொழில் செய்யும் மக்களையும் பலியாக்கக்கூடாது. 12 கடல் தொழிலாளர்களைப் பொறுத்த வரையில் இந்திய அரசு அவர்களை யார் வைத்திருந்தாலும் மீட்டுக்கொண்டு வரவேண்டும். இதனை நான் கடல் தொழில் செய்யும் மக்களிடமும் வலியுறுத்தியிருக்கிறேன்" என்றார் அவர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.