Saturday, May 12, 2007

தமிழக முதல்வர் கருணாநிதியின் சட்டசபை பொன்விழா. மாறன் பங்கேற்கவில்லை மாறனின் மந்திரி பதவிக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பது உறுதி.

[சனிக்கிழமை, 12 மே 2007]

முதல்வர் குடும்பத்துடன், மாறன் குடும்பத்திற்கு ஏற்பட்ட மோதலை தொடர்ந்து மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் எந்த நேரத்திலும் தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய கூடும் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக கூறப்படுகிறது.

முதல்வரிடம் அவர் ராஜினாமா கடிதத்தை கொடுக்க முற்பட்ட தாகவும், ஆனால் ஜனாதிபதி அல்லது பிரதமரிடம் ராஜினாமாவை கொடுக்கட்டும் என்று அவர் கோபமாக கூறிவிட்டதாகவும் தெரிகிறது. இதனிடையே சன் டிவி நிர்வாக இயக்குனர் கலாநிதி மாறன் தமது துணைவியாருடன் இன்று அதிகாலை அமெரிக்காவுக்கு திடீரென்று புறப்பட்டு சென்றுள்ளார். தயாநிதி மாறன் ஊட்டிக்கு பயணமாகிவிட்டார்.

கருணாநிதியின் வாரிசு யார் என்பது குறித்து கடந்த 7ந் தேதி தினகரன் பத்திரிகை கருத்து கணிப்பு வெளியிட்டதை தொடர்ந்து, மதுரை யில் உள்ள தினகரன் பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டது. பெட்ரோல் வெடிகுண்டு வீசப் பட்டது. இதில் 3 ஊழியர்கள் உயிரிழந்தார்கள். முதல்வரின் மகன் மு.க. அழகிரியின் தூண்டுதலால் இந்த தாக்குதல் நடைபெற்றதாக தினகரன் குற்றம் சாட்டியது.

இதனைத் தொடர்ந்து முதல்வரின் குடும்பத்திற்கும் கலாநிதி மாறன் குடும்பத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நேற்று முதல்வரின் சட்டசபை பொன்விழா நிகழ்ச்சிகள் நடைபெற்ற போது இதை சன் டிவி நேரடியாக அஞ்சல் செய்யப்போவதாக அறிவித்திருந்தது. ஆனால் சன் டிவிக்கு விழா அமைப்பாளர்கள் அனுமதிஅளிக்கவில்லை. சன் டிவிக்கு மாறாக சன்டிவியின் எதிரியாக கருதப்படும் ராஜ் டிவி, முதல்வரின் பொன் விழா நிகழ்ச்சி களை நேரடியாக ஒளிபரப்பியது பெரும் பரபரப்பையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது.

முதல்வரின் செல்லப்பிள்ளையாக வலம் வந்த மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பொன்விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளா விட்டாலும், பிரதமரை வரவேற்பதற்காக விமான நிலையத்திற்கு சென்றார். பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு பிரதமர் புதுடெல்லிக்கு புறப்பட்டு சென்ற போதும் விமான நிலையத்தில் அவரை வழியனுப்பும் நிகழ்ச்சியில் தயாநிதி மாறன் கலந்து கொண்டார். முதல்வர் குடும்பத்துடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் பதவியை எந்த நேரத்திலும் ராஜினாமா செய்ய கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

நேற்று மாலையில் தயாநிதி மாறன் சிஐடி நகரில் உள்ள முதல்வரின் இல்லத்திற்கு சென்றிருக்கிறார். ஆனால் அவரை பார்க்க முதல்வர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இருந்தாலும் அவர் அங்கேயே நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. முதல்வர் வெளியே வந்த போது அவரை கோபமாக பார்த்து, "அழகிரி யார் தெரியுமா? அவன் என் மகன்' என்று கூறிவிட்டு போய்விட்டதாக கூறப்படுகிறது.

இதன்பின் தயாநிதி மாறன் தமது மூத்த சகோதரன் கலாநிதி மாறனுடன் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து முதல்வரின் இல்லத்திற்கு கடிதத்தை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த முதல்வருக்கு கோபம் ஏற்பட்டுவிட்டது. "நான் என்ன தபால்காரனா? கடிதத்தை அனுப்பி வைக்க' என்று கூறிவிட்டு, "ஜனாதிபதி யிடமோ, பிரதமரிடமோ ராஜினாமா கடிதத்தை கொடுக்கசொல்' என்று ஆவேசமாக கூறியதாக தெரிகிறது.

கலாநிதி அமெரிக்கா பயணம்

இந்தநிலையில் சன் டிவியின் நிர்வாக இயக்குனர் கலாநிதி மாறன் இன்று அதிகாலை 1.45 மணிக்கு லுக்தான்சா விமானம் மூலம் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் மனைவி காவேரியும் சென்றார்.

தயாநிதி ஊட்டி பயணம்

இன்று காலை 11.25 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து மத்திய அமைச்சர் தயாநிதிமாறன், கோயம்புத்தூருக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். அவர் வழக்கமாக விமான நிலையத் திற்கு வரும் போது, போலீஸ் பட்டாளத்தோடு வருவது வழக்கம். உயர் காவல் துறை அதிகாரிகள் விமான நிலையத்திற்கு வந்து அவரை வழியனுப்பி வைப்பார்கள். மாநில அரசின் பொதுத்துறையை சேர்ந்த "புரோட்டக்கல்' ஊழியர்களும் வழியனுப்ப வருவார்கள். ஆனால் இன்று தயாநிதி மாறன் விமான நிலையத்திற்கு வந்த போது மாநில அரசின் "புரோட்டக்கல்' ஊழியர்கள் வரவில்லை. உயர் காவல்துறை அதிகாரிகளும் வரவில்லை. அவரு டைய பாதுகாப்பு அதிகாரி மட்டுமே வந்தார்.

தயாநிதி மாறன் துறையைச் சேர்ந்த தபால்துறை அதிகாரி விமான நிலையத்திற்கு வந்து விமானத்திற் கான போர்டிங் கார்டை வாங்கி கொடுத்தார். விமான நிலையத்தில் அவரிடம் பத்திரிகையாளர்கள் கருத்து கேட்க முயன்றனர். மதுரை சம்பவம் குறித்து இதுவரை நீங்கள் எதுவும் கருத்து தெரிவிக்க வில்லையே என்று அவரிடம் கேட்கப்பட்டது. அவர் பதில் ஏதும் கூறவில்லை.

நீங்கள் மத்திய அமைச்சராக இருப்பதால் சிபிஐ விசாரணையில் தலையிட கூடும் என்று கூறப்படுகிறதே? என்று தொலைக்காட்சி நிருபர்கள் தங்கள் மைக்குகளை நீட்டி கேட்ட போது, மைக்குகளை தட்டிவிட்டு அவர் பதில் ஏதும் சொல்லாமல் உள்ளே சென்று விட்டார்.

கோவையில் இருந்து தயாநிதி மாறன் ஊட்டி செல்லவிருப்பதாக கூறப்படு கிறது. அங்கு ஓய்வெடுத்து விட்டு அவர் திங்கட்கிழமை புதுடெல்லி சென்று ராஜினாமா கடிதத்தை கொடுக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

5 comments:

  1. அழகிரி-மாறன் குடும்பத்தினர் இடையே ஏற்பட்டுள்ள மோதலையடுத்து தயாநிதி மாறனின் மத்திய அமைச்சர் பதவி பறிக்கப்படலாம் என்று தெரிகிறது.

    ReplyDelete
  2. கருணாநிதியின் விழாவுக்கு அவர் பேரனுக்கு அழைப்பிதழ் அனுப்ப வேண்டுமா? அழைப்பிதழ் இல்லாமலேயே கலந்து கொள்ள வேண்டும் இல்லையா?

    ReplyDelete
  3. வளர்த்த கடாக்கள் மார்பில் பாய்ந்திருக்கிறது. பணமா பாசமா என்று கேட்டால் மாறன் பிறதர்ஸ் பணம் தான் என்கின்றார்கள். என்றோ ஒரு நாள் மாறன் தி.மு.க உருவாகும். ஸ்டாலினும் ஒரு டி.வி ஒன்றை தொடங்குவது குறித்து யோசிக்கத் தொடங்குவது நல்லது.

    ReplyDelete
  4. கலைஞர் தயாநிதிக்கு கருனை காட்டி இருக்க வேண்டும்.
    தனது பதவி விலகல் கடிதத்தை பிரதமருக்கு அனுப்பி வைத்தார்.

    ReplyDelete
  5. கொடுத்தவணே எடுத்துக்கொன்டாண்டி......

    முதல்வர் கருணாநிதி‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍ ‍
    மே 10, 2007

    நடைபெற்ற அந்த வன்முறை சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதுடன் இவற்றுக்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்கள் மீது கண்டிப்பாக சட்டப்படியான நடவடிக்கை இந்த அரசினால் எடுக்கப்படும் என்ற உறுதியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்....

    நடைபெற்ற செயலுக்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். தாக்குதல் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன



    சென்னை, மே 14:


    சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தி.மு.க. நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதற்காக தயாநிதி மாறனை மத்திய அமைச்சர்

    பதவியிலிருந்து நீக்கும் முடிவு இரவு 8 மணிக்கு எடுக்கப்பட்டது.
    மத்திய அமைச்சர் பதவியை தயாநிதி மாறன் ஞாயிற்றுக்கிழமை இரவு ராஜிநாமா செய்தார். உதகமண்டலத்தில் குடும்பத்தினருடன் ஓய்வு எடுக்கும் அவர் ராஜிநாமா

    கடிதத்தை பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பினார்.

    இதையடுத்து இரவு 10.30 மணி அளவில் ராஜிநாமா முடிவை அறிவித்தார் தயாநிதி மாறன்.

    கட்சியிலிருந்தும் நீக்க நோட்டீஸ்: கட்சிக் கட்டுப்பாட்டைச் சீர்குலைக்கும் வகையில் தயாநிதி மாறன் செயல்படுவதால் அதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்கும் நோட்டீஸ் அனுப்புவதென்றும்,

    ReplyDelete

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.