Saturday, May 12, 2007

'தமிழீழ வான்படை சிறிலங்காவின் பொருளாதாரத்திற்கான பெரும் அச்சுறுத்தல்': புளும்பேர்க்.!!

[சனிக்கிழமை, 12 மே 2007]


"கடந்த 30 ஆண்டுகளில் விரைவாக வளர்ந்து வந்த சிறிலங்காவின் பொருளாதாரத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ வான்படையால் எண்ணெய் மற்றும் எரிவாயு களஞ்சியங்கள் மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல்களும், அதன் விளைவாக இரவில் மூடப்பட்ட அனைத்துலக வானூர்தி நிலையமும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது."
அமெரிக்காவிலிருந்து வெளிவரும் இணையத்தளமான புளும்பேர்க் எழுதிய ஆய்விலேயே மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றது.

அந்த ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கொழும்பில் இருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள வடபுலத்தில் இருந்து சிறிலங்காவின் வான் பாதுகாப்புக்களை ஊடுருவி வந்த விடுதலைப் புலிகளின் வானூர்திகள் கட்டுநாயக்க வான்படைத்தளம், றோயல் டச்சு செல் எரிவாயு நிறுவனம், இந்தியாவின் எண்ணெய் நிறுவனம் ஆகியவற்றின் மீது கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இரு தடவைகள் தாக்குதல்களை நடத்திவிட்டு சென்று விட்டன.

சிறிலங்காவில் உள்ள ஆபத்துக்கள் அதிகரித்துள்ளன. எனவே முதலீட்டாளர்கள் அதனை கருத்தில் எடுக்க வேண்டும். இந்த புதிய பரிணாமம் ஆராயப்பட வேண்டும் என சிறிலங்காவின் மிகப் பெரும் திரவமாக்கபட்ட பெற்றோலியம் எரிவாயு நிறுவனமான செல் எரிவாயு நிறுவனத்தின் நிதிப் பணிப்பாளர் றோமியோ சல்டின் தெரிவித்துள்ளார்.

20 வருடகால போரானது 26 பில்லியன் டொலர்கள் பொருளாதாரத்தை உடைய சிறிலங்காவின் தலைநகரில் இருந்து தொலைவில் உள்ள வடக்கு மற்றும் கிழக்கில் தான் தீவிரம் பெற்றிருந்தது. தற்போது விடுதலைப் புலிகளின் வான்படை 5 வானூர்திகளை கொண்டிருப்பதாக படையினர் தெரிவிக்கின்றனர். அது தற்போது கொழும்பை தனது தாக்குதல் எல்லைக்குள் கொண்டு வந்துள்ளதுடன், சிறிலங்காவின் பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்பாகவும் கேள்வியை எழுப்பியுள்ளது.

விடுதலைப் புலிகளின் வானூர்திகள் கண்டறியப்படாது பறப்பில் ஈடுபடுவதும், அவற்றை முன்னர் சுட்டு வீழ்த்த முடியாது போனதும் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் என சிறிலங்காவின் அம்பா ஆய்வு நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரவி அபயசூர்ய தெரிவித்துள்ளார். முதலீட்டு ஆய்வு நிறுவனமான இந்த நிறுவனம் கொழும்பு, சிங்கப்பூர், கோஸ்ரா றிகா, இந்தியா போன்ற நாடுகளில் கிளைகளை கொண்டுள்ளது.

ஆனால் விடுதலைப் புலிகளின் வான்படை சிறிலங்காவிற்கும் பிராந்தியத்திற்கும் ஆபத்தானது என மகிந்த தெரிவித்துள்ளார். இவர் முப்படையினருக்குமான பாதுகாப்பு நிதியை 44 விகிதத்தால் இந்த வருடம் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இது 139 பில்லியன் ரூபாய்களாகும். எனினும் இந்த வாரம் அமெரிக்காவின் வெளிவிவகார பிரதிச் செயலாளரை சந்தித்த மகிந்த சமாதான முயற்சிகளுக்கு அனைத்துலகத்தின் ஆதரவை கோரப்போவதாக தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் தாம் சிறிலங்கா மக்களுடன் சேர்ந்து நிற்கப்போவதாக பௌச்சர் தெரிவித்துள்ளார் என அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

விடுதலைப் புலிகளிடம் 12,000 வீரர்களும், கடற்படைப் பிரிவும் உண்டு, கடந்த மார்ச் 26 ஆம் நாளில் இருந்து அவர்களிடம் வான்படையும் உள்ளது தெரியவந்துள்ளது. கடந்த ஏப்ரல் 29 ஆம் நாள் விடுதலைப் புலிகளின் வானூர்திகள் முத்துராஜவெல எரிவாயு நிறுவனத்தையும், கொலன்னாவ எண்ணைக் களஞ்சியத்தையும் தாக்கிவிட்டு சென்று விட்டன.

இந்த தாக்குதலின் பின்னர் செல் எரிவாயு நிறுவனம் தனது முழுமையான செயற்பாடுகளை இதுவரை ஆரம்பிக்கவில்லை என சல்டின் கடந்த மே 7 ஆம் நாள் தொலைபேசி நேர்காணலின் போது தெரிவித்துள்ளார்.

எண்ணெய் சேமிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்களால் நாம் அச்சமடைந்துள்ளோம். இந்த போர் சூழ்நிலைகள் எரிபொருள் மையங்கள் மீதான ஆபத்துக்களை அதிகரிப்பதுடன், அதன் விலையையும் அதிகரிக்கச் செய்யும் என இந்தியாவின் எண்ணெய் நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் கே.இராமகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் மேற்கு கரையில் உள்ள 3 எண்ணெய்ப் படிவுகளை அகழ்வதற்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் அழைக்க அரசாங்கம், எண்ணியிருந்த வேளையில் நடைபெற்ற இந்த தாக்குதல் பெரும் அச்சுறுத்தல்களை உண்டு பண்ணியுள்ளது.

சிறிலங்கா தனக்கு தேவையான எரிபொருட்களை இறக்குமதி செய்து வருகின்றது. மசகு எண்ணையின் விலையானது கடந்த ஆண்டு 25 விகிதத்தாதல் அதிகரித்துள்ளது. இது 2.07 பில்லியன் டொலர்களாகும்.

இந்த இறக்குமதி விலை அதிகரிப்பானது ரூபாயின் பெறுமதியின் வீழ்ச்சியால் மேலும் அதிகரித்துள்ளது. புளும்பேர்க்கினால் ஆராயப்பட்ட 71 நாணயங்களில் சிறிலங்காவின் நாணயம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த வருடம் அது 3.1 விகிதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் சிறிலங்காவிற்கு 35,031 உல்லாசப்பயணிகள் வந்திருந்தனர், இது கடந்த ஆண்டு மார்ச் மாதம் வருகை தந்த 54,746 பேருடன் ஒப்பிடும் போது 36 விகித வீழ்ச்சியாகும் என சுற்றுலாப் பயணத்துறை கூறியுள்ளது. 2001 ஆம் ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட 37 விகித வீழ்ச்சிக்கு பின்னர் இது சடுதியான வீழ்ச்சியாகும்.

ஹெங்கொங்கின் மிகப்பெரும் வானூர்தி நிறுவனமான கதே பசுபிக் கொழும்புக்கான தனது வானூர்தி சேவைகளை கடந்த ஏப்ரல் 29 ஆம் நாளில் இருந்து நிறுத்தியிருந்தது. அனைத்துலக வானூர்தி நிலையமும் தற்போது இரவு 10.30 மணியில் இருந்து காலை 4.30 மணிவரை மூடப்படுகின்றது. இது எதிர்வரும் 3 மாதங்களுக்கு நீடிக்கும். 'சிறிலங்கா மிகவும் ஆபத்தான போர் நடக்கும் பகுதி' என்ற செய்தியை இது உலகிற்கு வழங்கும் என அபயசுர்ய தெரிவித்துள்ளார்.

பெரும் தெருக்கள், துறைமுகங்கள், ஏனைய உட்கட்டுமானப் பணிகள் மீதான முதலீடுகள் போரின் தாக்கத்தை குறைக்கும் என மத்திய வங்கி நம்புகின்றது. இது இந்த வருட 7.5 விகித பொருளாதார வளர்ச்சியையும், எதிர்வரும் ஆண்டின் 8.0 விகித வளர்ச்சியையும் பாதிக்காது எனவும் அது நம்புகின்றது.

கடந்த ஆண்டு பொருளாதாரம் 7.4 விகிதம் வளர்ச்சி கண்டுள்ளது இதில் புடவைக் கைத்தொழில், துணி ஏற்றுமதி என்பன முக்கிய ஏற்றுமதி துறையாகும்.

சிறிலங்கா போருடன் தொடர்பற்ற பல பொருளாதார மையங்களை கொண்டுள்ளது. நாம் பல முதலீட்டாளர்களை கொண்டுள்ளோம், குறிப்பாக உட்கட்டுமானப்பணிகளில் கொண்டுள்ளோம். அத்துடன் அவர்கள் சிறிலங்காவில் தமது வர்த்தகத்தையும் கொண்டுள்ளதாகவும், அவர்களிடம் தொடாச்சியான முதலீட்டுத் திட்டங்கள் உள்ளதாகவும், மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரல் தெரிவித்துள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி:புதினம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.