Friday, May 11, 2007

வான்புலிகளைச் சமாளிக்க வாடகை மிக் - 29 ரக வானூர்தி.

[வெள்ளிக்கிழமை, 11 மே 2007]

வான் புலிகளின் தாக்குதல்களால் சிறிலங்காவில் உருவாகியிருக்கும் அச்சுறுத்தலைச் சமாளிப்பதற்காக மிக் - 29 ரக வானூர்தி ஒன்றை சிறிலங்கா வான்படை அவசரமாக வாடகைக்குப் பெற்றுக்கொள்ளவிருக்கின்றது.

உக்ரேனிலிருந்து அதிநவீன மிக்-29 ரக வானூர்திகள் சிலவற்றைக் கொள்வனவு செய்வதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டிருக்கின்ற போதிலும், அவற்றைப் பெற்றுக்கொள்வதில் காலதாமதம் ஏற்படும் என்பதால்தான் அவசரமாக வாடகைக்கு மிக்-29 ரக வானூர்தி ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் இப்போது இறங்கியிருக்கின்றது.

மிக்-29 ரக வானூர்திகளைச் செலுத்துவதில் சிறிலங்கா வான்படையினருக்கு அனுபவம் இல்லாமையால், உக்ரேனிலிருந்து வானோடிகளை கொண்டுவருவதற்கான முயற்சிகளிலும் வான்படை இறங்கியிருக்கின்றது.

இது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம், உக்ரேனுடன் உடன்படிக்கை ஒன்றை ஏற்கனவே செய்திருப்பதாகவும், இதன்படி வாடகைக்குப் பெறப்படும் முதலாவது வானூர்தி அடுத்த ஒருசில நாட்களில் சிறிலங்காவுக்கு கொண்டுவரப்படும் எனவும் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பிந்திய அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த மிக்-29 ரக வானூர்திகள்தான் உலகிலேயே சிறப்பான யுத்த வானூர்திகளாகக் கருதப்படுகின்றன.

ராடாரின் உதவியுடன் வானில் பறந்துவரும் எதிரி வானூர்திகளைத் தாக்கி அழிப்பதற்கான தொழில்நுட்ப வசதிகளையும் இந்த வானூர்திகள் கொண்டிருப்பதாகக் கருதப்படுகின்றது.

வான்புலிகளால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு இது சிறந்த ஆயுதமாக இருக்கும் என சிறிலங்கா பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் கருதுகின்றன.


நன்றி:புதினம்

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.