Sunday, May 06, 2007

வானில் இடைமறித்து தாக்குதல் நடத்த மிக்-29 ரக வானூர்திகளை கொள்வனவு செய்தது சிறிலங்கா.

[ஞாயிற்றுக்கிழமை, 6 மே 2007]


ரஸ்யாவில் இருந்து 05 மிக்-29 ரக தாக்குதல் வானூர்திகளை சிறிலங்கா அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளது என்று கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு ஆங்கில ஊடகத்தில் வெளியான செய்தி:

தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது வான் தாக்குதலைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட சிறிலங்கா வான்படையின் விசாரணைக்குழு விடுதலைப் புலிகளின் வான்படையின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்புக்களை தேடுவது குறித்து ஆராய்ந்து வருகின்றது.

ரஸ்யாவிலிருந்து 05 மிக்-29 ரக தாக்குதல் வானூர்திகளை சிறிலங்கா அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளது.

இது விடுதலைப் புலிகளின் வான்படைக்கு எதிரான ஒரு நடவடிக்கையாகும். இந்த வானூர்திகள் முன்னாள் சோவியத்து ஒன்றியத்தினால் வடிவமைக்கப்பட்டவை. தரமான வான் இடைமறிப்பு தாக்குதல் வல்லமையை கொண்ட இந்த வானூர்தி 1970-களில் மிகோயன் நிறுவனத்தினால் தயாரிப்பு வேலைகள் தொடங்கப்பட்டு 1983-களில் சோவியத்தின் வான்படையில் சேர்க்கப்பட்டது.

இந்த வானூர்திகள் இந்தியா உட்பட பல நாடுகளில் பாவனையில் உண்டு.

மிக்-29 ரக வானூர்தி அமெரிக்காவின் எஃப்-15 மற்றும் எஃப்-16 வானூர்திகளின் சவால்களை சமாளிப்பதற்காக உருவாக்கப்பட்டது.

இதன் பிரதான பங்கு வானில் இருந்து வான் மீதான தாக்குதல் ஆகும். எனினும் மெதுவாக நகரும் வானூர்திகளுக்கு எதிராக இது எத்தகைய பாத்திரத்தை வகிக்கப்போகின்றது என்பது ஆவலான விடயம்.

மிக்-27 ரக வானூர்திகள், சிறிலங்கா வான்படையிடம் ஏற்கனவே உள்ளன. இது முழுக்க முழுக்க தரைத்தாக்குதல் வானூர்தி ஆகும். வானில் வானூர்திகளை இடைமறித்து தாக்கும் வசதிகள் இதற்கு கிடையாது.

மிக்-29 வானூர்தியின் உலக சந்தை விலையானது 15 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். 1980-களின் ஆரம்பத்தில் இந்தியாவும் மிக்-29 ரக வானூர்திகளின் உற்பத்தியை தொடங்கியது.

சிறிலங்காவின் அதிகாரிகள் இந்தியா, பாகிஸ்தான், சீனா அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்திய போதும் சோவியத்திடம் இருந்தே வானூர்திகளை கொள்வனவு செய்துள்ளனர்.

மேலும் தன்வசம் உள்ள கிபீர் வானூர்திகளையும் நவீனமயப்படுத்தி அதனை வானில் இடைமறித்து தாக்கும் வானூர்தியாக வடிவமைக்க சிறிலங்கா அரசாங்கம் முயற்சிகளை எடுத்துள்ளது.

இதற்காக ராடார்கள், வானில் இருந்து வானுக்கு பாயும் ஏவுகணைகள் என்பனவற்றை கிபீர் வானூர்திகளுக்கு பொருத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான கருத்துக்களை வான்படையினர் எதிர்பார்க்கின்றனர்.

இதனிடையே வான்படையினர், விடுதலைப் புலிகளின் ஒவ்வொரு வான் தாக்குதல்கள் தொடர்பாகவும் விசாரணைகளை நடத்துவதற்கு வேறுபட்ட விசாரணைக்குழுக்களை அமைத்து வருகின்றனர்.

அதில் விடுதலைப் புலிகளின் முதலாவது வான் தாக்குதலின் போது வான் கலங்கள் தொடர்பான தகவல்களை குறிப்பிட்ட அதிகாரிகளிடம் வழங்குவதற்கு தவறியது தொடர்பாக விசாரணைகள் நடைபெறுகின்றன.

தாக்குதலில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் ஏற்பட்ட தாமதங்கள், தாழப்பறக்கும் வானூர்திகளை கண்டறிய முடியாத 2 டி ராடார்களை கொள்வனவு செய்த வான்படை அதிகாரிகள் மீதான விசாரணைகள் என பல விசாரணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விசாரணைகளின் முடிவில் போதிய ஆதாரங்கள் கிடைக்குமாயின் அது தொடர்பான வான்படை அதிகாரிகள் மீது குற்றங்கள் சுமத்தப்படுவதுடன் அவர்கள் இராணுவ நீதிமன்ற விசாரணைகளையும் எதிர் கொள்ள நேரிடும் என்று அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.