Wednesday, April 11, 2007

ஜனக பெரேராவை பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கவும்.!!

[புதன்கிழமை, 11 ஏப்ரல் 2007] "ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் ஜனக பெரேராவை கோத்தபாயாவுக்கு பதிலாக பாதுகாப்புச் செயலாளராக நியமிக்குமாறு" சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சிறீகோத்தாவில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சி அமைப்பாளர்களுக்கான கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது: "தற்போது இந்தோனேசிய தூதுவராக பணியாற்றிக் கொண்டிருக்கும் ஜனக பெரேரா மிகவும் திறமை வாய்ந்த இராணுவத் தளபதி. மிகவும் செயற்திறன் மிக்கவர். தற்போதைய நாட்டின் இக்கட்டான நிலையில் அவரே மிகவும் நம்பிக்கை வாய்ந்தவர். பாதுகாப்புச் செயலாளர் பதவியில் இருப்பவர் அரசியல் நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டவராக இருத்தல் வேண்டும். மேலும் ஜனக பெரேரா தளபதியாக இருந்த போது விடுதலைப் புலிகளுக்கு மிகப்பெரும் தோல்வியை கொடுத்தவர். அவர் யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த போது ஆனையிறவு வீழ்ச்சி கண்ட பின்னர் விடுதலைப் புலிகள் வசம் யாழ். குடா விழும் கட்டத்தில் இருந்த போதும் அதனைக் காப்பாற்றியவர். கட்சியின் தேர்தல் தொகுதி அமைப்பாளர்கள் தேர்தல் ஒன்றிற்கு தயாராக இருத்தல் வேண்டும். ஏனெனில் அரசாங்கத்தின் செல்வாக்கு சரிந்து வருகின்றது. தற்போதைய நிலையில் மிகவும் பலவீனமான நிலையில் இருந்து கொண்டு அரசாங்கம், பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டிய நிலையில் உள்ளது என்றார்" அவர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.