Saturday, April 07, 2007

வவுனியா கிளைமோரில் 7 பொதுமக்கள் படுகொலை- 25 பேர் படுகாயம்.!!!

[சனிக்கிழமை, 7 ஏப்ரல் 2007]

வவுனியாவில் நடத்தப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் 7 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 4 குழந்தைகள் உட்பட 25 பேர் படுகாயமடைந்துள்ளனர்.


வவுனியா நகரின் மேற்குப் பகுதியில் 28 கிலோ மீற்றர் தொலைவில் வவுனியா - மன்னார் வீதியில் உள்ள குருக்களுரில் இன்று சனிக்கிழமை காலை 7.40 மணிக்கு வவுனியா நோக்கி பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேரூந்தை இலக்கு வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சிறிலங்கா போக்குவரத்து சபைக்குச் சொந்தமான அப்பேரூந்தில் தமிழ் - முஸ்லிம் பயணிகள் சென்று கொண்டிருந்தனர்.

இதில் படுகாயமடைந்த சுவிஸ் கண்ணிவெடி அகற்றும் அமைப்பின் பணியாளர்கள் இருவர் வவுனியா மருத்துவமனைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்
இக்கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டோரில் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

விவரம்:

பேரூந்து ஓட்டுநர் பொன்னம்பலம் கிருபாகரன்(ஒரு பிள்ளையின் தந்தை)

சின்னதம்பி நிர்மலா(வயது 44), கண்ணட்டி, கணேசபுரம்,வவுனியா

சசிதரன்(வயது 14)

சகாயநாதன் சூசை (வங்காலை)

முடியப்பு யேசுநாயகம்(வயது 25), செட்டியார்மகன் கட்டையடம்பன், முருங்கன் (இவரது மனைவியான சகாயதேவி யேசுநாயகம்) இத்தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார்)

சிவலிங்கம், முருங்கன்

மற்றும் பொதுமக்கள் உடையில் மன்னாரிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர்

ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பேரூந்தின் நடத்துநர் பக்கீர் மொகிதீன் நிகால் (பதிவு எண்: 62-5546) படுகாயமடைந்துள்ளார்.

இத்தாக்குதலைத் தொடர்ந்து மன்னார் பணிமனையிலிருந்து இயக்கப்பட்டு வந்த அனைத்துப் பேரூந்துகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

வவுனியா மாவட்ட நீதிபதி எம். இளஞ்செழியனின் நெருங்கிய உறவினரான பொறியாளர் பொன்னைய மாணிக்கவாசகரும் இத்தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.