Sunday, April 01, 2007

500 அடி உயரத்தில் பறந்த விடுதலைப் புலிகளின் வானூர்திகள்


[ஞாயிற்றுக்கிழமை, 1 ஏப்ரல் 2007]

கட்டுநாயக்க வான்படைத் தளம் மீது தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகளின் வானூர்திகள், புத்தளம் மாவட்டத்தில் உள்ள வில்பத்து காட்டுப்பகுதிக்கு மேலாக தெற்கு நோக்கி பறந்து சென்றதனை கண்டதாக வில்பத்து சரணாலயப் பகுதியில் உள்ள ஒலுமடுவப் பகுதியில் வசிக்கும் மக்களும் ஊர்காவல் படையினரும் தெரிவித்திருக்கின்றனர்.

இது தொடர்பில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

இரு வானூர்திகளும் நில மட்டத்தில் இருந்து 500 தொடக்கம் 600 அடி உயரத்தில் பறந்து சென்றன. அவை எழுப்பிய ஓசைகள் மிகவும் அதிகமாகவும் ஏனைய விமானங்களில் இருந்து வேறுபட்டதாகவும் இருந்தன.

நாங்கள் கண்ட வானூர்திகள் விடுதலைப் புலிகளின் வானூர்திகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டது. மறுநாள் காலையில் நாம் தாக்குதல் செய்தியை அறிந்தோம் என தெரிவித்தனர். அவர்களின் வாக்குமூலங்கள் கட்டுநாயக்க தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை நடத்தும் குழுவினரால் பெற்றுக்கொள்ளப்பட்டது.

நான் ஞயிறு நள்ளிரவின் பின்னர் வீடு திரும்பிய போது சிறிய ரக உழவூர்தி போன்ற சிறிய உழவு இயந்திரத்தின் ஓசை போன்ற பெரும் சத்தத்தை செவிமடுத்தேன். நான் வீட்டுக்கு வெளியில் வந்து பார்த்த போது இரு சிறிய ரக வானூர்திகள் ஒன்றன் பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தன என மரக்கறி வியாபாரியான சரத் ராஜகருணா தெரிவித்துள்ளார்.

நான் தொலைக்காட்சியில் படம் பார்த்துக்கொண்டு இருந்த போது பாரிய சத்தத்தை கேட்டேன். வெளியில் வந்து பார்த்தபோது இரு விமானங்கள் மிகவும் தாழ்வாக பறந்து சென்றன. ரி-56 துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தும் உயரத்தில் பறக்கின்றன என நான் அப்போது நினைத்தேன் என மற்றுமொரு கிராம வாசியான கல்பிடி காமினி தெரிவித்துள்ளார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.