Saturday, March 31, 2007

தமிழக மீனவர்கள் சுட்டுக்கொலை: சிறிலங்கா அரசு- கடற்படை மறுப்பு

[சனிக்கிழமை, 31 மார்ச் 2007] கடந்த வியாழக்கிழமை நான்கு தமிழக மீனவர்கள் கடலில் சுடப்பட்டதற்கு தாங்கள் பொறுப்பல்ல என்று சிறிலங்கா அரசாங்கமும் கடற்படையினரும் மறுத்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் 23 ஆம் நாள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்பது மீனவர்கள் சிறிலங்கா கடற்படையினரால் தாக்கப்பட்டனர் என்றும் தாக்குதலில் நால்வர் உயிரிழந்தனர் என்றும் ஏனையவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் நேற்று வெள்ளிக்கிழமை செய்திகள் வெளிவந்தன. அந்தச் செய்தியை சிறிலங்கா அரசாங்கமும் கடற்படையும் தற்போது மறுத்துள்ளது. சிறிலங்கா கடற்படையினர் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என தேசிய பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையம் தெரிவித்தது. இந்திய கடல்பகுதிக்குள் இடம்பெற்ற இந்தத் தாக்குதலை 'மரியா' என்ற பெயருடைய வேறு படகே நடத்திய என இந்திய தகவல் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்தத் தாக்குதலை விடுதலைப் புலிகளே நடத்தியிருக்கக்கூடும் எனவும் சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயுள்ள இருதரப்பு உறவை முறியடிப்பதற்காக இதுபோன்ற தாக்குதல்களை விடுதலைப் புலிகள் முன்னரும் நடத்தியுள்ளர் என்று சிறிலங்கா வெளியுறவு அமைச்சின் அறிக்கை மேலும் குறிப்பிட்டது. எதிர்காலத்தில் இத்தகைய குற்றச்சாட்டுகள் எழுவதைத் தடுக்க, இருதரப்பு கடற்படையின் ஒத்துழைத்த செயற்பாட்டில் சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் கடப்பாடு கொண்டுள்ளது எனவும் அந்த அறிக்கை கூறியது. சிறிலங்கா கடற்படை இந்திய கடற்படை மற்றும் கரையோர கண்காணிப்புப் படையுடன் நீண்டகால உறவை கொண்டுள்ளது. அந்த உறவு இனியும் தொடரும். சிறிலங்கா கடற்பகுதிக்குள் இந்திய மீனவர்கள் மாட்டிக்கொள்ளும் போது எல்லாம் சிறிலங்கா கடற்படை உதவிக்கரம் நீட்டுவதாகவும் அது தெரிவித்தது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.