முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் சிறிலங்கா வான்படையின் மிக் ரக வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.
புதுக்குடியிருப்பு பிரதேச மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று புதன்கிழமை பிற்பகல் 1 மணியளவில் வான்படையின் இரு மிக் ரக வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன.
இத்தாக்குதலில் ஒரு பிள்ளையின் தந்தையான மூங்கிலாறு உடையார்கட்டைச் சேர்ந்த பே.பிரதீப் என்பவர் கொல்லப்பட்டுள்ளார். மற்றவரின் பெயர் விபரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
வள்ளிபுனத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான இலட்சுமணன் குணரத்தினம் (வயது 32)
அம்பலவன்பொக்கனையைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான கந்தையா ஆனந்தராசா (வயது 45)
மந்துவில் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான அமிர்தலிங்கம் அறிஞன் (வயது 27)
கண்ணகி நகர் விசுவமடுவைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான சிற்றம்பலம் தர்மசேனன் (வயது 29)
ஆகியோர் காயமடைந்துள்ளனர்.
ஆனால் சிறிலங்கா படைத்தரப்பானது, தங்களது வானூர்திகள் முல்லைத்தீவில் உள்ள கடற்புலிகளின் தலைமையகத்தை தாக்கியழித்துள்ளதாக ஊடகங்களுக்கு செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளையில் இவ்வான் தாக்குதல் பற்றி தமிழீழ விடுதலைப் புலிகளின் மனித உரிமைகள் தொடர்பகத்தின் பேச்சாளர் செல்வி எம்மிடம் கருத்து தெரிவிக்கையில்:
"அங்கே கடற்புலிகளின் முகாம் எதுவும் கிடையாது. அது முற்றிலும் பொதுமக்கள் குடியிருப்புப் பகுதியாகும். கண்ணிவெடியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான செயற்கை உறுப்புக்களை வழங்கும் 'வெண்புறா' நிறுவனத்தின் கட்டங்களே சேதமடைந்துள்ளன. அதிலும் அனைத்துலக கண்ணிவெடி எதிர்ப்பு தினமான இன்று சிறிலங்கா அரசாங்கம் அதனை எவ்வாறு மதிக்கின்றது என்பதையே இது காடடுகின்றது" எனக் குறிப்பிட்டார்.
நன்றி:புதினம்







0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.