Monday, April 02, 2007

போர் நிறுத்தம் 100 விகிதம் கடைப்பிடிக்கப்படும் போதே பேச்சுக்கான வாய்ப்பு: சு.ப.தமிழ்ச்செல்வன்.!!!

[திங்கட்கிழமை, 2 ஏப்ரல் 2007]


2002 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையின் அடிப்படையில் பேச்சுவார்த்தைக்கு சிறிலங்கா அரசாங்கம் சம்மதிக்கும் வரையிலும் பேச்சக்களை மீள ஆரம்பிப்பது சாத்தியமற்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்கா அரசாங்கம் போர்நிறுத்த உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவதனை மறுத்து வருமானால் அது முழு அளவிலான போர்ப்பிரகடனமாகவே எடுத்துக் கொள்ளப்படும் என்றும் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய மின்னஞ்சல் நேர்காணலின் போது தெரிவித்துள்ளார்.

இந்த நேர்காணலில் அவர் மேலும் முக்கியமாகத் தெரிவித்ததாவது:

போர் நிறுத்தத்தை அரசாங்கம் பின்பற்றாமல் இருப்பது சிறிலங்கா அரசாங்கம் உக்கிரமான போரை நடத்த விரும்புவதனைக் காட்டுகின்றது. இந்த நடைமுறை முழு அளவிலான போருக்கு வழிவகுக்கும், மிகவும் பயங்கரமான சூழ்நிலையை தோற்றுவிக்கும், பேரழிவுகளை தடுப்பது சாத்தியமற்றதாகி விடுவதுடன் இந்த தீவிலும் பெரும் அவலம் எற்படும்.

போர் நிறுத்தம் ஒரு வரலாற்று திருப்புமுனை. அது வன்முறைகளையும், மனித நெருக்கடிகளையும் முடிவுக்கு கொண்டு வந்ததுடன், இரு தரப்பிற்கும் இடையில் ஒரு புரிந்துணர்வையும் ஏற்படுத்தியிருந்தது. அதன் மூலம் நேரடிப் பேச்சுக்களுக்கும் வழி வகுத்திருந்தது.

போர் நிறுத்தத்தை முதன்மைப்படுத்தாது பேச்சின் மூலம் போருக்கு தீர்வைக் காண்பது சாத்தியமற்றது. போர்நிறுத்த உடன்பாடு அனைத்துலகத்தின் ஆதரவுடன் 100 விகிதம் கடைப்பிடிக்கப்படும் போதே நேரடிப் பேச்சுக்கான சூழல் உருவாகும்.

தற்போது இடம்பெற்று வரும் மோதல்களும், மனித அவலங்களும் நிறுத்தப்பட்டாலே அமைதிப் பேச்சுக்களுக்கான சூழல் உருவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் தாக்குதல்களை நடத்தி வருவதுடன், விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்கப்போவதாக சவால் விட்டுள்ளது. கிழக்கில் அண்மையில் இடம்பெற்ற மோதல்களால் பல நூறு பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 155,000 தொடக்கம் 165,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

போர் நிறுத்த உடன்பாடு இரு தரப்பும் மோதல்களை நிறுத்தி தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் நிலைகொண்டிருக்க வேண்டும் என கூறுகின்றது. 2006 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முறிவடைந்தது.

எந்த நேரமும் மோதல்களை நிறுத்தி விடுதலைப் புலிகளுடன் பேச்சை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது.

கடந்த 15 மாதங்களாக இடம்பெற்று வரும் மோதல்களில் 4,000 மக்கள் கொல்லப்பட்டிருந்தனர். எனினும் போர் நிறுத்தம் விடுதலைப் புலிகளுக்கு அனுகூலமானது எனவும், அதன் மூலம் அவர்கள் தமது படையணிகளை ஒழுங்கமைத்து, ஆயுதங்களையும் கொள்வனவு செய்யலாம் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

போர் நிறுத்தத்தின் அடிப்படையில் பேச்சுக்களை நடத்த ஆர்வமாக இருப்பதாக நினைக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் பாலித கோகன்ன கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

போர் நிறுத்த உடன்பாடு ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே கொண்டுவரப்பட்டது. அதன் மூலம் மோதல்கள் முடிவுக்கு வந்தன. அதன்பின்னர் என்ன நடந்தது என்பது எமக்குத் தெரியும்.

எமது தற்போதைய அணுகுமுறைகள் முழு போரையும் முடிவுக்கு கொண்டு வரும் வகையில் பேச்சினை நடத்துவது தான். அங்கு மோதல்கள் இடம்பெறவில்லை என இலகுவாக உறுதிப்படுத்த முடியாது.

இவ்வாறு தமிழ்ச்செல்வன் தனது நேர்காணலில் மேலும் குறிப்பிட்டிருக்கின்றார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.