Thursday, March 01, 2007

இலங்கை விவகாரத்துக்குள் பிறசக்திகளை இழுக்கும் முயற்சி

[வியாழக்கிழமை, 1 மார்ச் 2007]

மத்திய கிழக்கின் பிரபல்யம் மிக்க தொலைக்காட்சிச் சேவையான "அல் ஜஸீரா' நேற்றுக்காலை தனது "இன்சைட் ஸ்டோரி' என்ற நிகழ்வில் இலங்கை விவகாரம் தொடர்பாக மூன்று முக்கிய அரசறிவியல் பிரமுகர்களை ஒரே சமயத்தில் இணைத்து நடத்திய கலந்துரையாடலில் அந்நிபுணர்கள் தெரிவித்த முக்கிய கருத்து ஒன்று இப்போது குறிப்பிடத்தக்க அம்சமாக வந்திருக்கின்றது.

இலங்கை இனப்பிரச்சினைக்கு அமைதித் தீர்வு காண்பதற்கு நோர்வே அனுசரணையுடன் ஆரம்பிக்கப்பட்ட அமைதி முயற்சிகள் இப்போது முழு அளவில் தேக்கமடைந்து பயனற்றுப்போகும் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டன. இந்நிலையில் நோர்வேயின் அனுசரணைப்பணி அமைதித் தீர்வுக்கு சம்பந்தப்படாததாக அல்லது பொருத்தமற்றதாக மாறி வருகின்றது என்ற சாரப்பட அந்தக் கலந்துரையாடலில் கருத்து முன்வைக்கப்பட்டது. ஆகையினால் நோர்வேக்கும், இலங்கை அரசு, விடுதலைப் புலிகள் ஆகிய தரப்புக்கும் அப்பால் புதிய தரப்புகளை இதில் நேரடியாகச் சம்பந்தப்படுத்தவேண்டிய தேவை எழுந்துள்ளதா என அல் ஜஸீராவின் கலந்துரையாடலின் இணைப்பாளர் சம்பந்தப்பட்ட அரசியல்துறைசார் வல்லுநர்களிடம் கேள்வி எழுப்பினார்.

இலங்கை அமைதி முயற்சிகளுக்கான நோர்வேயின் அனுசரணைப்பணிக்கு முன்னர் பொறுப்பாகக் கடமையாற்றியவரும் அந்நாட்டின் முன்னாள் பிரதி வெளிவிவகார அமைச்சருமான விடார் ஹெல்கிஸன் முதலில் பதிலளித்தார்.

"அமைதி முயற்சிகளை ஆரம்பித்த சமயத்தில் எங்களையும் (நோர்வேயையும்) இந்த இரு தரப்பையும் தவிர, வேறு தரப்புக்களையோ கட்சிகளையோ எங்களால் இதில் சம்பந்தப்படுத்த முடியவில்லை. அதற்கு அப்பால் செல்ல நிலைமை இடமளிக்கவில்லை. மேலும் புதிய தரப்புகளை இணைப்பதுதான் இன்றைய கட்டாயம் என்றால் அது குறித்துப் பரிசீலிக்கலாம்.'' என்ற சாரப்பட ஹெல்கிஸன் பதிலளித்தார்.
பிரபல இராணுவத் தகவல் விமர்சகரும், இலங்கை இனமோதல் தொடர்பான இராணுவத் தகவல்கள் அடங்கிய பல நூல்களை எழுதியவருமான றோஹான் குணரத்ன, நோர்வே அனுசரணையுடனான அமைதி முயற்சிகள் அடங்கிப் போய்விட்டன என்ற சாரப்பட கருத்து வெளியிட்டார். இனிமேலும் அதை நம்பியிருப்பதில் அர்த்தமில்லை என்று குறிப்பிட்ட அவர், ஆகவே புதிய தரப்புகளை இந்த சமாதான முயற்சிக்குள் இழுத்து வரவேண்டும் என்றார். அமெரிக்கா, பிரிட்டன் போன்ற ஐரோப்பிய யூனியன் அங்கத்துவ நாடுகள் மற்றும் இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் நேரடியாக அமைதி முயற்சியில் தலையிட வேண்டும். தமிழர் தரப்பில் அவர்களின் ஜனநாயக ரீதியான பிரதிநிதிகள் புலிகள் என்ற நிலைப்பாடு தவறானது. பிற தரப்புகளையும் இந்த முயற்சிக்குள் கொண்டுவரவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

"நோர்வேக்கு அப்பால் பிற நாடுகளையும் சக்திகளையும் நேரடியாக இந்த அமைதி முயற்சிக்குள் இழுத்து வரவேண்டும். மோசமடைந்து வரும் இலங்கை நிலைமையை அப்பாவி மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்படும் இந்த அவல நிலையை உலகம் இனிமேலும் கைகட்டிப் பார்த்திருக்க முடியாது; பார்த்திருக்கவும் கூடாது. அதில் சர்வதேச சமூகம் நேரடியாகச் சம்பந்தப்பட வேண்டும். இனப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட தரப்புகளை அடக்கி, வழிக்குக் கொண்டுவரக்கூடிய சக்தியுள்ள வலிமையுள்ள நாடுகள், இவ்விடயத்தில் நேரடியாகத் தலையிட வேண்டும்.'' என்ற சாரப்பட லண்டனில் வசிக்கும் இந்திய அரசறிவியல் ஆய்வாளரான பதான் என்பவர் அங்கு குறிப்பிட்டார்.

மொத்தத்தில் அந்தக் கலந்துரையாடலின் போக்கு, இலங்கையில் அமைதி முயற்சிகளுக்கு உயிரூட்டப்பட வேண்டும் என்றால் மோதல் நிறுத்தப்பட்டு, யுத்த நிலை தவிர்க்கப்பட்டு, நின்று, நிலைத்து, நீடிக்கக்கூடிய நீதியான சமாதானத் தீர்வு எட்டப்பட வேண்டுமானால் இப்போது செத்துக்கொண்டிருக்கும் நோர்வே அனுசரணைப் பணியை முற்றாக உதறித்தள்ளிவிட்டு, மேலும் சக்தியுள்ள பல தரப்புகளை (குறிப்பாக முக்கிய நாடுகளை) இவ்விடயத்துக்குள் நேரடியாகத் தலையிட வைக்கவேண்டும் என்பதாகவே அமைந்தது.

இது, வெறுமனே "அல் ஜஸீரா' நடத்திய அரசியல் கலந்துரையாடலின் கண்ணோட்டம் அல்லது சிந்தனைப் போக்கு ஆக அமைந்திருந்தால் இதற்கு அத்துணை முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய தேவை இங்கு இல்லை.

ஆனால் இதுவே இலங்கை விவகாரம் தொடர்பான மேற்குலகின் கருத்து நிலைப்பாடாக உருவகிக்கும் ஒரு செல்நெறி உருவாகிவருவதை இப்போது ஓரளவுக்கு உய்த்துணரக்கூடியதாக இருக்கின்றது. அதனால் இவ்விடயம் முக்கியத்துவம் பெறுகிறது.

பயங்கரவாதத்துக்கு எதிராக சர்வதேச அபிப்பிராயம் உறுதியாக ஒன்று திரண்டு வரும் இச்சமயத்தில் உலக வல்லரசுகளும் வல்லாதிக்க சக்திகளும் அந்நோக்கில் ஒற்றுமைப்பட்டு, முழுப்பலத்துடன் செயலாற்ற முறுகி நிற்கும் இவ்வேளையில்
இலங்கையில் ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை முழுப் பயங்கரவாதமாகச் சித்திரித்து அடையாளப்படுத்துவதன் மூலம், உலகை சர்வதேச சமூகத்தை தமிழர்களின் அந்தப் போராட்டத்துக்கு எதிராகத் திருப்பிவிடும் தந்திரோபாயச் சதியில் தமிழர் விரோத சக்திகள் முனைப்பாக உள்ளன.

இந்த உள்நோக்குடன், சர்வதேச சமூகத்தைப் புலிகளுக்கு எதிராக இவ்விடயத்தில் இழுத்து வந்து இணைப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தவே, அச்சக்திகள் நோர்வேயின் அனுசரணைப்பணியின் அடிப்படையிலான தற்போதைய சமாதான முயற்சிகளை செல்லாக்காசாக்கி, செயலிழக்க வைத்து, சாகடிக்க முயல்கின்றன. செத்துவிட்டதாகக் காட்ட எத்தனிக்கின்றன.

இந்தச் சூழ்ச்சியின் உள்ளார்ந்தம் குறித்துத் தமிழர்களின் தலைமை சிந்தித்து, அதற்குப் பதிலான நகர்வுகளை மேற்கொண்டு, இந்தத் தந்திரோபாய நகர்வை முறியடிக்கத் தன்னை உரியமுறையில் வழிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நடுநிலைப் போக்குடைய நோர்வேயை ஓரங்கட்டி ஈழத்தமிழரின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஆயுதப் போராட்டத்தை முழு அளவில் எதிர்க்கின்ற வல்லாதிக்க சக்திகளை இதற்குள் நேரடியாக இழுத்து வந்து, தமிழர்களுக்கு எதிராக நிறுத்தும் முயற்சிக்கு ஆரம்பத்திலேயே ஆப்பு வைப்பது அவசியம். அதற்கு, நோர்வேயின் பங்களிப்புடன் கூடிய அமைதி முயற்சிகளுக்கு உயிரூட்டுவதும் ஒரு பங்களிப்பாகும்.

Uthayan