Saturday, March 03, 2007

பாதுகாப்பை அதிகரிக்குமாறு சிறிலங்கா அரசைக் கோரும் வெளிநாட்டு தூதுவர்கள்.

[சனிக்கிழமை, 3 மார்ச் 2007] மட்டக்களப்பில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தாக்குதலைத் தொடர்ந்து தமது தூதரகங்கள் மற்றும் வதிவிடங்களின் பாதுகாப்பை சிறிலங்கா அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கத்திடம் வெளிநாட்டு தூதுவர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். மட்டக்களப்பு சம்பவம் தொடர்பாக வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு விளக்கமளிப்பதற்கான சந்திப்பு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகமவினால் நேற்று வெள்ளிக்கிழமை கூட்டப்பட்டது. வெளிநாட்டுத் தூதுவர்கள் தமது பாதுகாப்பை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்திருப்பதாக கூறிய அவர், தூதுவர்கள் முன் ஆற்றிய உரையின் போது மேலும் தெரிவித்தததாவது: "தூதுவர்களின் கிழக்கு மாகாணப் பயணத்தின் போது முழுமையான பாதுகாப்பு நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை. எனவே எதிர்காலத்தில் அவை முழுமையாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். சிறிலங்காவின் தலைநகரை விட்டு வெளியே செல்லும் தூதுவர்கள் முன்கூட்டியே வெளிவிவகார அமைச்சிற்கு அறிவிக்க வேண்டும். இப்படிப்பட்ட பல நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை. ஆனால் அது தற்போது அவசியமானது. எனவே அவை மீள நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். தூதுவர்களின் மட்டக்களப்பு பயணம் பேரனர்த்த முகாமைத்துவ அமைச்சினாலேயே ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அதற்கு பாதுகாப்பு அமைச்சும் அனுமதி வழங்கியிருந்தது. எனினும் பாதுகாப்பு நடைமுறைகள் புறக்கணிக்கப்பட்டதாக தூதுவர்கள் எமக்குத் தெரிவிக்கவில்லை. தூதுவர்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் படி கோரிக்கை விடுத்திருக்கின்றனர். வடக்கு - கிழக்கில் மட்டும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளதாக கருதமுடியாது. தற்போது தெற்கிலும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ளன" என்றார் அவர். இச்சந்திப்பிற்கு அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக் சமூகம் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.