[வியாழக்கிழமை, 1 மார்ச் 2007]
"கொடூரமான முற்றுகை போர் முறையுடன் கிழக்கு மாகாணத்தில் தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்கும் இராணுவ நடவடிக்கைகள் நடைபெற்று வரும் அதே நேரத்தில் வடக்குப் போர் முனையிலும், வன்னி மாநிலம் மீதும் பெரும் முற்றுகைப் போர் நடவடிக்கையை தொடக்க சிங்களப் படைகள் முன்தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளன"
இன்று வியாழக்கிழமை வெளிவந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ ஏடான 'விடுதலைப் புலிகள்' ஏட்டின் முதன்மைச் செய்தியானது மேற்கண்டவாறு தெரிவிக்கின்றது.
அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
"மகிந்த ராஐபக்ச முதல் சரத் பொன்சேகா வரை சிங்களத்தின் அரசியல் இராணுவத் தலைவர்கள் தமிழருடனான போரை விரிவாக்கி தீவிரப்படுத்துவதிலேயே குறியாக உள்ளனர்.
தமிழர்களுக்கு எதிராக இனவாதப் போர் கூச்சலிடுவதே இன்று சிங்களத்தின் பிரதான அரசியலாக உள்ளது. ஒரு போர் வெற்றி பற்றிய கற்பனையிலேயே சிங்கள ஊடகங்கள் மிதந்தபடி உள்ளன.
வடபுலப் பெரும் போருக்கு முன்னோடியாக அங்கே வான் தாக்குதல்களை சிங்களப் படைத் தலைமை தீவிரப்படுத்தியுள்ளது. வடக்கிலுள்ள சிங்கள படையணிகளின் தலைமைப் பொறுப்புக்களிலும் தீவிர மாற்றங்கள் செய்யப்பட்டு படைகள் போருக்கு தயார்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ் மக்களை கொலை செய்து வெறியாட்டம் ஆடிப் புகழ்பெற்ற சிங்களத்தின் இடைநிலைத் தளபதிகளை படையணிகளின் தளபதிகளாக சரத் பொன்சேகா நியமித்து வருகின்றார். 57 ஆவது படையணியென்ற பெயரில் புதிய தாக்குதல் படையணியையும் உருவாக்கியுள்ளார். இது வவுனியாவில் நிலைகொள்ள வைக்கப்பட்டுள்ளது.
மகிந்தரின் சீன விஐயமும் ஆயுதக்கொள்வனவுடன் இணைத்துப் பேசப்படுகின்றது. சிங்கள அரசிற்கு ஆயுதங்களை இப்போது வழங்கி வரும் நாடுகளில் சீனா முக்கியமானதாகும். பாகிஸ்தான், ஈரான் நாடுகளில் இருந்தும் அரசு ஆயுத தளபாடங்களை குவித்து வருகின்றது.
கொழும்பில் மகிந்த அரசின் உறுதித்தன்மையும் இப்போது அதிகரித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலத்தின் மகிந்த அரசு அரசியல் உறுதி பெற்றுள்ளது.
சிங்கள ஆட்சியாளர்களின் அரசியல் உறுதித்தன்மை தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பை போரை தீவிரப்படுத்தப்படுவதற்கு தான் பயன்படுத்துவது சிங்களத்தின் ஒரு வரலாற்று வழமை.
ஜே.ஆர். அரசும், சந்திரிக்கா அரசும் இவ்விதமாக தாம் பெற்ற அரசியல் உறுதித்தன்மையைப் போரில் தீவிரப்படுத்தவே பயன்படுத்தியிருந்தனர். இப்போது மகிந்தரும் அந்த வரலாற்றுத் தடத்திலே பயணிக்கின்றார்.
தமிழின அழிப்பு விடயத்தில் உலகின் கண்டனங்களையும், அரசியல் அழுத்தங்களையும் மகிந்த அரசு ஒரு பொருட்டாக மதிப்பதாக தெரியவில்லை. வன்னி மீதான ஒரு பெரும் போருக்காக சிங்கள அரசு அனைத்து வகை தயார்படுத்தல்களையும் செய்து வருகின்றது என்பது தான் உண்மையாகும்.
சிங்கள அரசின் இந்த பெரும் போரை துணிவுடன் எதிர்கொள்வதை தவிர தமிழ் மக்களுக்கு மாற்று வழிகள் ஏதுமில்லை.
தமிழரின் படைப் பல அதிகரிப்பும் கடந்த போர்காலங்களைப் போல் தமிழ் மக்களின் வீரச் செயற்பாடுகளும் சிங்களத்தின் போரை முறியடிக்க போதுமானவையாகும். அண்மைய மாதங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் புலிகள் அணியுடன் இணைந்துள்ளனர். ஆட்பலத்தில் புலிகள் இயக்கம் பெரிய வளர்ச்சியை கண்டு வருகின்றது.
'வீட்டுக்கு ஒருவர் நாட்டிற்காக' என்ற போராட்ட கோசம் இன்று தமிழர் படை பலத்திற்கு நம்பிக்கையான அடித்தளமிட்டு வருகின்றது. இந்த போராட்ட கோசம் முழுமை அடையும் வகையில் ஓவ்வொரு வீடும் ஒரு வீரனை அல்லது வீராங்கனையை களம் அனுப்பி இந்த ஆட்பல அதிகரிப்பு திட்டத்தை முழுமையை அடைய செய்விப்பது தமிழரின் வரலாற்று கடமையாகிவிட்டது.
எதிரியின் 'ஜெயசிக்குறு' ஆக்கிரமிப்புத் திட்டத்தை புலிகள் இயக்கம் முறியடித்து வெற்றி வாகை சூட உறுதுணையாக இருந்த வன்னி மக்களே இனிவரப் போகும் பெரும் போரையும் முறியடிக்க புலிகள் இயக்கத்திற்கு ஒத்துழைப்புக்கள் வழங்க வேண்டும்.
தமிழீழ தனியரசை அமைக்கும் நில மீட்புக்கான போர் வன்னிப் பெருநிலப்பரப்பை உந்துதளமாகக் கொண்டே இயங்கப் போகின்றது.
வரப்போகும் போர் காலத்தையும் அதன் நெருக்கடிகளையும் சவாலாக எதிர்கொண்டு போரை வென்று புதிய வரலாறு படைக்க தயாராகுவோம்" என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதினம்.கொம்.
Thursday, March 01, 2007
'வன்னி மக்களே- இனிவரப் போகும் பெரும் போரையும் முறியடிப்பர்': விடுதலைப் புலிகள் ஏடு.
Thursday, March 01, 2007





