Monday, March 05, 2007

நாடு பயங்கரமான சூழலை நோக்கி செல்கின்றது: ஐ.தே.க, த.தே.கூ

[திங்கட்கிழமை, 5 மார்ச் 2007] சிறிலங்கா ஒரு தோல்வியடைந்த நாடு என்ற நிலையை நோக்கியும் பயங்கரமான காலத்தை நோக்கியும் நகர்ந்து கொண்டிருப்பதாக கந்தானையில் உள்ள முத்துராஜவெலவில் ஆறு சடலங்கள் மீட்கப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன தெரிவித்திருக்கின்றன. மீட்கப்பட்ட சடலங்கள் தொடர்பான மர்மங்கள் தொடர்வதுடன், அவை வேறு ஒர் இடத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டு பின்னர் அந்த சதுப்பு நிலத்தில் போடப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளதாவது: தமது மக்களுக்கான பாதுகாப்பை வழங்குவதற்கு அரசு தவறிவிட்டது. சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு விட்டதுடன் அது நாடு முழுவதும் பரவியுள்ளது. மனித உரிமைகள் மீறப்படுவதால், ஜனநாயகம் சீர்கெட்டுள்ளது. இந்த பயங்கரங்களுக்கு காரணமானவர்களை அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும். தற்போது இங்கு வாழ்வது பிரச்சினையானது, மக்களின் வாழ்க்கை நிச்சயமற்றதாக உள்ளது. படுகொலைகளும், கடத்தல்களும் அதிகரித்துள்ளன. தோல்வியடைந்த நாடு என்ற நிலையை நாடு அடைவதற்கு அரசு வழியை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் பாதுகாப்பிற்கு அரசே பொறுப்பானது என்பதை அரசு நினைவில் கொள்ளவேண்டும் என்றார் அவர். இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்ததாவது: கொழும்பில் மீட்கப்பட்ட ஆறு சடலங்களும் நாட்டில் நீதிக்கு புறம்பான படுகொலைகள், கடத்தல்கள் அதிகரித்து செல்வதையே காட்டுகின்றன. இந்த பயங்கரமான சூழல் தொடர்பாக பல வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டு வரப்படும் நிலையிலும் படுகொலைகள் தொடர்கின்றன என்றார். இது தொடர்பாக பொதுமக்கள் கண்காணிப்புக் குழு உறுப்பினரும் மேலக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியதாவது: நூறு பேர் வரையில் காணாமல் போயுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்திருக்கின்றன. மக்கள் அச்சத்துடனும் நிச்சயமற்ற தன்மையுடனும் வாழ்கின்றனர். இன்று எமக்கு கடத்தல்கள் தொடர்பாக 80 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. தங்களின் முக்கிய உறுப்பினர்களை இழந்து குடும்ப உறுப்பினர்கள் தவிக்கின்றனர். அவர்களின் மனக்குமுறல்களை எமக்கு தெரிவிப்பதை தவிர அவர்களுக்கு வேறு வழிகள் இல்லை என்றார் அவர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.