Friday, March 09, 2007

அரசைக் கண்டிப்பதில் மட்டும் அனைத்துலகம் பின்னடிப்பது ஏன்?

[வெள்ளிக்கிழமை, 9 மார்ச் 2007]

இலங்கையில் செயல் இழந்துவரும் யுத்தநிறுத்த ஒப்பந்தம், முற்றாக முறிந்து பெரும் போர் வெடிப்பதற்கான ஏதுநிலைகள் தென்படுகின்றன.
ஒப்பந்தத்தின் ஒரு தரப்பாகிய தமிழீழ விடுதலைப் புலிகள் இது குறித்து முற்கூட்டியே எச்சரிக்கை செய்திருக்கின்றார்கள்.

தமிழர் தாயகத்தின் இருதயம் போன்ற மணலாறு (வெலிஓயா) பகுதியைக் கைப்பற்றி ஆக்கிரமிப்பதற்கு அரசுப் படைகள் பெரும் எடுப்பில் ஆயத்தமாகி வருகின்றன எனக் குற்றம் சுமத்தியிருக்கும் விடுதலைப் புலிகள், அதனை முறியடிக்கத் தங்களது படைகளும் தயாராகிக் கொண்டிருக்கின்றன என்றும் தெரிவித்திருக்கின்றனர்.

அரசுப்படைகள் மணலாறை ஆக்கிரமிக்க முயன் றால் பெரும் போர் மூளும் என எச்சரிக்கும் செய்தியை அனுசரணைத் தரப்பான நோர்வேக்கு நேரடியாகவே விடுதலைப் புலிகள் தெரிவித்துவிட்டனர்.

அதேசமயம் மறுபுறத்தில், யுத்த நிறுத்த ஒப்பந் தத்தை மீறும் தாக்குதல் நடவடிக்கைகளை விடுதலைப்புலிகளே முன்னெடுத்து வருகின்றார்கள் என்று அரசுத் தரப்பும் குற்றம் சுமத்துகின்றது.

இதேவேளை, இந்த இரண்டு தரப்புகளில் ஒன் றான விடுதலைப்புலிகள் மூன்றாவது தரப்பான சர்வதேச சமூகத்தின் மீதும் முக்கியமான ஒரு விடயத்தில் குற்றம் சுமத்துவதும் கவனிக்கத்தக்கது.

புலிகள் மாத்திரமல்லர், தமிழர்கள் அனைவருமே இந்தக் குற்றச்சாட்டை சர்வதேச சமூகத்தை நோக்கிச் சுமத்துகின்றார்கள் என்பதும் முக்கியமானது.

போர் முனைப்போடும் யுத்தத் தீவிரத்தோடும் நகர்வுகளை முன்னெடுக்கின்ற மஹிந்தவின் அரசின் போக்கைக் கண்டிப்பதிலும், தடுத்து நிறுத்துவதிலும் சர்வதேச சமூகம் மென்போக்கைக் கடைப்பிடிக்கின்றது. இத்தகைய பொறுப்பற்ற செயற்பாடு, மஹிந்த அரசை யுத்தத்தின் வழியில் மேலும் அதிக தீவிரத்தோடு ஈடுபடத் தூண்டுகின்றது. இலங்கை விவகாரத்தில் விடுதலைப் புலிகளை மட்டும் ஒரு தலைப்பட்சமாகக் கண்டித்துக் குற்றம் சுமத்தும் தனது போக்கை சர்வதேசம் தவிர்க்க வேண்டும். இதற்கு மாறாக, பக்கச் சார்பாக இலங்கை அரசின் யுத்த முனைப்புச் செயற்பாடுகளைக் கண்டும் காணா ததும் போல சர்வதேச சமூகம் நடந்து கொள்வது விபரீதங்களுக்கு வழி வகுக்கக்கூடியது என்று புலிகள் குற்றம் சுமத்தியிருக்கின்றனர்.

இலங்கை அரசுத் தரப்பின் மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் யுத்த நிறுத்த மீறல் செயற்பாடுகள் தீவிரம் அடையும் சமயத்தில் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு வாளாவிருந்துவிட்டு பதிலுக்குப் புலிகள் நடவடிக்கை எடுத்து, அவை தீவிரம் அடையும் சமயத்தில் புலிகளைக் கண்டிக்கும் போக்கில் சர்வதேச சமூகம் செயற்படுவது அர்த்தமற் றது என்றும் புலிகள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.

புலிகள் சுமத்தும் குற்றச்சாட்டு நியாயமானது என்றோ அல்லது அரசுத் தரப்பு மட்டுமே குற்றமிழைக்கின்றது என்றோ இங்கு வாதிடுவது அல்ல எமது நோக்கம். நடுநிலை வகிக்கவேண்டிய சர்வதேச சமூகத்தை நோக்கிக் குற்றச்சாட்டு விரல் நீளு வதைச் சுட்டிக்காட்டுவதும் இவ்விடயத்தில் சர்வதேச சமூகம் நீதியாகச் செயற்படுவது மட்டுமல்லாமல், தான் நீதியாகச்செயற்படுவதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளவும் வேண்டும் என்பதை வற்புறுத்துவதுமே எமது நோக்கம்.

சர்வதேச சமூகம் நீதியாகச் செயற்படாததன் மூலம் விபரீதத்துக்கு வித்திடுகின்றது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தன்னை நியாயப்படுத்தி, உண்மையை வெளிப்படுத்த வேண்டியது சர்வதேச சமூகத்தின் கடப்பாடாகுகின்றது.

தென்னிலங்கையில் குண்டு வெடித்தால் அல்லது தாக்குதல் நடத்தப்பட்டால், அவற்றுக்குப் புலிகள் உரிமைகோர முன்னரே அல்லது புலிகள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத நிலையிலேயே புலிகள் மீது பொறுப்பைச் சுமத்தி, அவர்களைக் கண்டிப்பதில் தாக்கி அறிக்கை விடு வதில் சர்வதேச சமூகம் தாமதம் காட்டுவதில்லை.

ஆனால் தமிழர் தாயகத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இடம்பெறும் வான் வழித் தாக்குதல் உட்பட பல்வேறு படை நடவடிக்கைகளில் அப்பாவித் தமிழ் மக்கள் உயிரிழப்பதும், அவர்களின் உடைமைகள் நாசமாக்கப்படுவதும், அவர்களின் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுவதும் சர்வதேச சமூகத்தின் கண்களில் படுவதில்லை.
இப்போதும் கூட, மணலாறைப் பிடிக்க அரசுப் படைகள் தயாராகின்றன எனப் புலிகள் குற்றம் சுமத்துகின்றனர். இல்லை, புலிகளே தாக்குதல்களுக் குத் தயாராகின்றனர் என அரசுத் தரப்புக் கூறுகின்றது.

இரண்டு தரப்புகளும் ஒன்றின் மீது மற்றது மாறி மாறிக் குற்றம் சுமத்துகின்றன என்ற அளவோடு சர்வ தேச சமூகம் வெறுமனே பார்த்துக்கொண்டு இருக்கின்றது.

யுத்த நிறுத்த உடன்பாட்டை மீறி சம்பூரை அரசுப் படைகள் கைப்பற்றி ஆக்கிரமித்திருக்கின்றன; வாகரையை ஆக்கிரமித்திருக்கின்றன. தொப்பிகலக் காட்டுப் பிரதேசத்தைக் கைப்பற்றவும், மணலாறைப் பிடிக்கவும் திட்டங்கள் தீட்டப்பட்டு நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.