Friday, March 09, 2007

யாழ். குடாநாட்டில் ஆறு லட்சம் மக்கள் தனிமையில்: யூனிசெஃப்

[வெள்ளிக்கிழமை, 9 மார்ச் 2007

யாழ்ப்பாண குடாநாட்டில் உள்ள ஆறு லட்சம் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மோசமான பாதுகாப்பு நிலைமைகளால் புனரமைப்பு பணிகள் மந்தமடைந்துள்ளன. ஏ-9 பாதையினூடாக குடாநாட்டிற்கு செல்வது கடந்த ஓகஸ்ட்டில் இருந்து தடைப்பட்டுள்ளது என்று யூனிசெஃப் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் சிறார் நலன்பேண் பிரிவான யுனிசெஃப்பின் பாதுகாப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"சிறிலங்கா அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள தீர்க்கப்பட முடியாத மோதல்கள், ஆபத்தான கட்டத்தில் உள்ள போர் நிறுத்த உடன்பாடு ஆகியன சிறார்களினதும், பெண்களினதும் உயிர்களுக்கு பெரும் ஆபத்தாக உள்ளதுடன், பொருளாதார அபிவிருத்தியையும் அதிகளவில் பாதித்துள்ளது.

2002 ஆம் ஆண்டிற்குப் பின்னர் தற்போது வன்முறைகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக வடக்கு - கிழக்கின் பாதுகாப்பு நிலைமைகள் மோசமாக உள்ளன. அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கொல்லப்படுகின்றனர், இராணுவ, காவல்துறை காவல் நிலைகள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. மதசார்பு மற்றும் இனப்பாகுபாட்டு வன்முறைகள் வழமையான ஒன்றாகிவிட்டது. பொது வாழ்க்கை சீர்கெட்டுவிட்டது.

முழுநாடும் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட போதும், வடக்கு - கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களான யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, திருமலை, அம்பாறை போன்றனவே அதிகளவில் பாதிப்படைந்துள்ளன.

கடந்த 2006 ஆம் ஆண்டு ஓகஸ்டில் இருந்து 200,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர், அதில் 2007 இல் பல தடவைகள் திருகோணமலையில் இருந்து வாகரைக்கும் பின்னர் மட்டக்களப்பிற்கும் மக்கள் இடம்பெயர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண குடாநாட்டில் உள்ள ஆறு லட்சம் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மோசமான பாதுகாப்பு நிலைமைகளால் புனரமைப்பு பணிகள் மந்தமடைந்துள்ளன. ஏ-9 பாதையினூடாக குடநாட்டிற்குச் செல்வது கடந்த ஓகஸ்ட்டில் இருந்து தடைப்பட்டுள்ளது. இது உதவிப்பணிகளை கடுமையாக பாதித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையினால் அமர்த்தப்பட்ட விமானத்தின் மூலம் மட்டுமே மனிதாபிமான உதவிகளை வழங்குவது சாத்தியமாக உள்ளது. உணவுக்கும் ஏனைய பொருட்களுக்கும் பலத்த பற்றாக்குறை நிலவுகின்றது.

வடக்கு - கிழக்கின் மோசமான பாதுகாப்பு நிலைமைகள் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களையும் பாதித்துள்ளது. சிறிலங்கா அரசின் கடுமையான பாதுகாப்பு நடைமுறைகள் அரச சார்பற்ற நிறுவனங்கள், ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான அமைப்புக்களின் அதிகாரிகளின் பயணங்களை மட்டுப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கான வழங்கலையும் மட்டுப்படுத்தியுள்ளது."

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.