[புதன்கிழமை, 28 மார்ச் 2007]
தமிழ் மக்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்திய போதும் பொறுமை காத்து வட்டியும் முதலுமாக வான் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் மாலைமலர் நாளேடு புகழாரம் சூட்டியுள்ளது.
மாலைமலர் நாளேட்டில் வெளியாகி உள்ள செய்தி விவரம்:
அன்று சைக்கிள் குண்டு- இன்று விமான குண்டு: விடுதலைப் புலிகளை கண்டு கதி கலங்கும் சிங்களப் படைகள்
இலங்கையில் ஈழத் தமிழர்களின் ஆதிக்கத்தையும் அறிவாற்றலையும் விரும்பாத சிங்களவர்கள், அவர்களை 1970-களில் புறக்கணிக்கத் தொடங்கினார்கள். அரசியல் அடிப்படை உரிமைகளை பறித்து நாலாந்தர குடிமக்கள் போல தமிழர்களை ஒதுக்கினார்கள்.
சொந்த மண்ணில் எந்த சுகத்தையும் அனுபவிக்க இயலாத நிலை உருவானதால் ஈழத் தமிழர்கள் கொதித்து எழுந்தனர். மகாத்மா காந்தி போல சிலர் அறவழிப் போராட்டத்தை கைக்கொண்டனர். சிலர் சுபாஷ் சந்திரபோஸ் மாதிரி ஆயுதப் போராட்டத்துக்கு மாறினார்கள்.
தொடக்க காலத்தில் நிறைய ஆயுதக் குழுக்கள் தோன்றின. ஆனால் தெளிவான நோக்கம் இல்லாததால் அவை வந்த வேகத்தில் மறைந்தன.
1983 ஆம் ஆண்டு "தமிழர்களின் தாகம் தனித் தமிழ் ஈழம்'' என்ற லட்சிய வாசகத்துடன் விடுதலைப் புலிகள் இயக்கத்தை பிரபாகரன் தோற்றுவித்தார். அப்போது பிரபாகரனுடன் 40 இளைஞர்கள் மட்டுமே இருந்தனர்.
இந்த 40 பேருடன் போராட்டத்தை தொடங்குவது என்றும், அதே சமயத்தில் புலிகள் இயக்கத்துக்கு நிறைய பேரை சேர்த்து ஒருங்கிணைப்பது என்றும் பிரபாகரன் முடிவு செய்தார். இதற்காக பிரபாகரன் பட்ட கஷ்டங்கள் ஏராளம். ஆள், அம்பு, ஆயுதம் எதுவும் இல்லாத நிலையில் பிரபாகரனே போர்க்களத்தில் முதல் வீரனாக குதித்தார்.
அப்போது பிரபாகரனிடம் இருந்த வாகனம் சைக்கிள். அதில் சென்று சிங்கள வீரர்கள் மீது தாக்குதல் நடத்த தீர்மானித்தார். அதன் அடிப்படையில் 1983 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் அருகில் சிங்கள இராணுவ வீரர்கள் மீது குண்டு வீசி பிரபாகரன் தாக்குதல் நடத்தினார். அதன் பிறகு புலிகள் சைக்கிளில் வந்து குண்டுவீசி தாக்குதல் நடத்துவதும், துப்பாக்கியால் சுடுவதும் தொடர்ந் தது. இதன் காரணமாக விடுதலைப் புலிகள் பற்றி ஈழத் தமிழர்களிடம் பரவியது. தமிழ் இளைஞர்கள் கூட்டம், கூட்டமாக புலிகள் இயக்கத்தில் சேர்ந்தனர்.
இதே காலக்கட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் சேகரிப்பதும் அதிகரித்தது. 1990 வரை விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் மற்றும் தளவாடங்கள் சேகரிக்க தமிழகம் தளமாக இருந்தது. அதன் பிறகு வெளிநாடுகளில் இருந்து விடுதலைப் புலிகள் கப்பல், கப்பலாக ஆயுதங்களை இறக்குமதி செய்து தங்களை மிக, மிக வலிமை ஆக்கிக் கொண்டனர்.
இதற்கிடையே இலங்கையின் வடக்கு, கிழக்கில் ஒரு சுயராஜ்ஜியத்தை பிரபாகரன் உருவாக்கினார். வரி வசூல், காவல்துறை, கோர்ட்டு என்று தனி அரசே நடக்கத் தொடங்கியது. இதற்கென தனி குழு இயங்கியது.
அதே சமயத்தில் சிங்களவர்களை எதிர்த்து போராட புலிகள் இயக்கத்தில் அனைத்துத்துறையிலும் பிரபாகரன் நவீனத்தை புகுத்தினார். உளவுப் பிரிவு தொடங்கப்பட்டது. அந்த பிரிவு கொடுத்த ஒற்றர் தகவல்களால் புலிகளுக்கு வெற்றி மீது வெற்றி கிடைத்தது.
இதைத் தொடர்ந்து புலிகள் இயக்கத்தில் தரைப்படை, கடற்படை உருவாக்கப்பட்டது. தரைப்படையினர் வைத்திருக்கும் பீரங்கிகள் அதி நவீனமானவை. அது போல கடல் புலிகள் அமைப்பு புலிகள் இயக்கத்தின் முதுகெலும்பு போல பிரபாகரனால் மாற்றப்பட்டது.
கடல் புலிகளிடம் மின்னல் வேக படகுகள், தற்கொலை படகுகள், சரக்கு படகுகள், ஆயுதம் கடத்தும் படகுகள் என்று பல வகை படகுகள் உள்ளன. சமீபத்தில் 2 பெரிய போர் கப்பல்களை புலிகள் வாங்கியது தெரியவந்துள்ளது. இவை தவிர விடுதலைப் புலிகளிடம் நீர்மூழ்கி கப்பல் கூட இருப்பதாக உறுதி செய்யப்படாத தகவல் சொல்கிறது.
இத்தகைய வலுவான கடல் புலிகளுக்கு இணையாக விடுதலைப் புலிகள் அமைப்பில் தற்கொலைப் படை உள்ளது. இவர்கள் "கரும்புலிகள்'' என்றழைக்கப்படுகிறார்கள். சுதந்திர தமிழ் ஈழத்துக்காக இவர்கள் தங்கள் உயிரை துச்சம் என நினைத்து மனித வெடிகுண்டாக மாறி தங்களையே மாய்த்துக் கொள்கிறார்கள். உலகில் சொந்த நாடு பெறுவதற்காக தற்கொலை படையில் அதிகம் பேரை வைத்திருப்பது விடுதலைப் புலிகள்தான்.
தற்கொலைப்படை வீரர்கள் மரணம் அடையும் போது, "அவர்கள் சாகவில்லை விதைக்கப்படுகிறார்கள்'' என்று சொல்வதுண்டு. சைக்கிளில் சென்று தற்கொலை தாக்குதல் நடத்த தொடங்கிய இவர்கள் பிறகு மோட்டார் சைக்கிள், 3 சக்கர சைக்கிள், ஜீப், கார், டிராக்டர், படகு என்று தங்கள் வளர்ச்சியை அதிகப்படுத்தி விட்டனர்.
1983 இல் சைக்கிள் தற்கொலை தாக்குதல் நடத்தும் யாழ்ப்பாணத்தில் யாரும் சைக்கிள் ஓட்டக்கூடாது என்று சிங்கள அரசு உத்தரவிட்டது. ஆனால் புலிகளிடம் மாற்றம் ஏற்பட தொடங்கியதும் அரசால் எதையும் கட்டுப்படுத்த இயலவில்லை.
புலிகளிடம் தரைப்படை, கடல் படை மட்டும்தானே உள்ளது. அவர்களை எளிதில் நசுக்கி விடலாம் என்று சிங்கள அரசு நினைத்தது. ஆனால் 1998 இல் விடுதலைப் புலிகள் தங்களுக்கு என தனி விமானப் படையை (வான் புலிகள்) உருவாக்கினார்கள். அந்த ஆண்டு மாவீரர் தினத்தன்று புலிகளின் கல்லறைகள் மீது வான்புலிகள் குட்டி விமானங்களில் வந்து மலர் தூவினார்கள்.
இந்த தகவல் மெல்ல கசிந்து விடுதலைப் புலிகளிடம் விமானம் இருக்கிறது என்று பரவ தொடங்கியது. ஆனால் அதை உறுதிப்படுத்த சிங்கள உளவுப் படையால் இயலவில்லை.
கடந்த 3 மாதமாக சிங்கள இராணுவம் தனது மிக், கிபிர் ரக விமானங்களால் தாக்குதல் நடத்திய போது விடுதலைப் புலிகள் அமைதியாக இருந்தனர். கடந்த திங்கட்கிழமை வட்டியும் முதலுமாக சேர்த்து "வான்புலிகள்'' பதிலடி கொடுத்தனர்.
கொழும்புக்குள் ஊடுருவி, குறி தவறாமல் மிக, மிக நேர்த்தியாக 4 குண்டுகளை வீசி சிங்கள வான் படை தளத்தை தகர்த்தனர். இது சிங்களவர்களை அதிர்ச்சியில் மூழ்கடித்தது. இன்னமும் அவர்கள் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. விமான தாக்குதல் தொடரும் என்று விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளதால் சிங்களவர்கள் கதி கலங்கி போய் கிடக்கிறார்கள்.
வான்புலிகள் நிகழ்த்திய சாகசம் உலக நாடுகளின் ஒருமித்த பார்வையை விடுதலைப் புலிகள் மீது திருப்பி உள்ளது. "எப்படி இவர்களால் குட்டி இராணுவத்தை நள்ளிரவில் கையாள முடிந்தது'' என்று நிபுணர்களே ஆச்சரியப்படுகிறார்கள். வான் புலிகளின் தொழில் நுட்ப திறன் உலக தரத்துக்கு நிகராக இருக்கிறது.
25 ஆண்டுக்கு முன்பு சாதாரண ஓட்டை சைக்கிளில் வந்து தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகள் இன்று வானத்தில் குட்டி விமானத்தில் பறந்து வந்து குண்டு போடுகிறார்களே என்று சிங்கள இராணுவம் தொடை நடுங்கிய படி உள்ளது. சுதந்திர ஈழத்தை அடைய வேண்டும் என்ற லட்சிய வேட்கையில் விடுதலைப் புலிகள் மிக, மிக உறுதியாக இருப்பதையே இது காட்டுகிறது.
விடுதலைப் புலிகளை குறைத்து மதிப்பிடக் கூடாது. அவர்கள் வலிமையானவர்கள் என்று அமெரிக்காவே சான்றிதழ் அளித்துள்ளது.
விடுதலைப் புலிகள் எங்கும் ஊடுருவ கூடிய ஆற்றல் படைத்தவர்கள் என்பது அவர்களது ஒவ்வொரு செயலிலும் உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. வன்னி காட்டுப் பகுதியில் அவர்கள் 4 விமான ஓடுதளம் அமைத்து இருக்கிறார்களாம்.
வான் புலிகளிடம் 6 அல்லது 7 குட்டி விமானங்கள் இருக்கலாம் என்று உலக உளவுத்துறை நிறுவனங்கள் கணித்துள்ளன. விடுதலைப் புலிகள் பற்றி இன்னும் என்னென்ன ஆச்சரியங்கள் வரப்போகிறதோ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Wednesday, March 28, 2007
வட்டியும் முதலுமாக சேர்த்து தாக்குதல் நடத்திய வான் புலிகள்: மாலைமலர் நாளேடு புகழாரம்
Wednesday, March 28, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.