[புதன்கிழமை, 28 மார்ச் 2007]
"கடந்த வாரம் வரை இருதரப்பினருக்கும் இடையிலான போர் தரையிலும் கடலிலுமே கூர்மையடைந்திருந்தது. தற்போது இந்தப் போரில் புதிய சக்தி ஒன்று உட்புகுந்துள்ளது. இந்த சவாலுக்கு முகம் கொடுத்தேயாக வேண்டிய கட்டாயத்துக்கு சிறிலங்கா அரச படையினர் தள்ளப்பட்டுள்ளனர்."
நேற்று செவ்வாய்க்கிழமை 'தமிழ்நாதம்' இணையத்தளத்திற்கு பிரபல படைத்துறை ஆய்வாளரும், சண்டே ரைம்சின் பத்தி எழுத்தாளருமான இக்பால் அத்தாஸ் வழங்கிய சிறப்பு செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
செவ்வியின் முழு விபரம் வருமாறு:
கேள்வி: விடுதலைப் புலிகள் தமது வான் படையின் பலத்தை தற்போது நிரூபித்திருக்கிறார்கள். அவர்களின் தாக்குதலுக்கு இலக்கான கட்டுநாயக்க வான்படைத் தளம் எவ்வளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதனை சற்று விவரிப்பீர்களா?
பதில்: ஆம். சிறிலங்கா வான்படையின் பிரதான தளம் கட்டுநாயக்க ஆகும். தற்போது இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல், இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போருக்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேள்வி: விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலால் சிறிலங்கா வான் படையினருக்கு ஏற்பட்ட இழப்புக்கள் தொடர்பாக பல்வேறு முரண்பட்ட தகவல்கள் வெளிவந்த வண்ணமுள்ளன. தாக்குதலால் பாரிய இழப்புக்குளு் எதுவும் ஏற்படவில்லை என்று சிறிலங்கா அரசாங்கம் கூறுகிறது. ஆனால் சிறிலங்கா வான் படையின் இரண்டு உலங்குவானூர்திகள் தாக்குதலில் சேதமடைந்ததாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. உண்மையில் சேத விவரம் என்ன என்பது பற்றி கூறுவீர்களா?
பதில்: ஆம். தாக்குதலால் ஏற்பட்ட இழப்புக்கள் மிகச் சொற்பம் என்பதனை என்னால் உறுதிசெய்ய முடியும். இலக்கு வைக்கப்பட்ட இடத்தில் அல்லாமல், அதாவது மிக் மற்றும் கிபிர் ரக தாக்குதல் வானூர்திகள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இடத்தில் அல்லாமல், வானூர்திப் பொறியியல் தளம் மற்றும் அதற்கு அண்டிய பகுதியில் குண்டுகள் வீழ்ந்து வெடித்ததால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உலங்குவானூர்திகளின் கண்ணாடிகள் நொருங்கியுள்ளன. அவை சீர்செய்யக்கூடிய சிதைவுகள் என வான்படை அதிகாரி தெரிவித்தார்.
கேள்வி: 2001 இல் கட்டுநாயக்க வான்படைத்தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போது, தாக்குதலை அடுத்து தாக்குதல் செய்திகளை சேகரிக்க அங்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இம்முறை அவ்வாறு எந்த ஊடகவியலாளர்களும் அனுமதிக்கப்படவில்லை. தாக்குதல் தொடர்பாக விசாரணைகனை மேற்கொள்ள போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினரையே தாக்குதல் இடம்பெற்ற இடத்துக்குச் செல்ல அனுமதிக்கவில்லை.
பதில்: ஆம். அது உண்மை. தாக்குதல் தொடர்பான விசாரணைகள் முற்றாக முடியும் வரை அந்த பிரதேசத்தை அவ்வாறாக பேணுவதற்காகவே எவரையும் அங்கு அனுமதிக்கவில்லை என்று உத்தியோகபூர்வ விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கேள்வி: அனுராதபுரம் மற்றும் வவுனியா காவல்துறையினர் வானில் அடையாளம் தெரியாத இரண்டு வானூர்திகளை கண்டதாகவும், படையினரின் ராடரில் இரண்டு வானூர்திகள் அவதானிக்கப்பட்டதாவும் இன்று செய்திகள் வெளிவந்துள்ளன. அவை உண்மையா?
பதில்: ஆம். கட்டுநாயக்க வான் படைத்தளத்தின் மீதான தாக்குதலுக்கு இரண்டொரு மணி நேரத்துக்கு முன்னதாக இவ்வாறு இரண்டு வானூர்திகள் அவதானிக்கப்பட்டுள்ளன. வவுனியா, கணேசபுரம் பகுதியில் முதலில் இந்த வானூர்திகள் அவதானிக்கப்பட்டுள்ளன. சற்று நேரத்தின் பின்னர், இந்த இரண்டும் அடையாளம் தெரியாத வானூர்திகள் என உறுதிப்படுத்தப்பட்டன.
கேள்வி: அப்படியானால் அதற்கேற்றவாறு படையினர் ஏன் விழிப்பு நிலையை அடையவில்லை? உரிய கட்டளைகள் பிறப்பிக்கப்படவில்லையா அல்லது பின்பற்றப்படவில்லையா?
பதில்: அந்த அடையாளம் தெரியாத வானூர்திகள் கொழும்பு நோக்கித்தான் செல்கின்றன என்பதனை அவர்களால் உறுதி செய்துகொள்ள முடியாமல் போனமையே இதற்கு காரணமாக இருக்கலாம் என நான் கருதுகிறேன்.
ஏனெனில் வன்னி வான்பரப்பில் இவ்வாறான அடையாளம் தெரியாத வானூர்திகள் பறப்பில் ஈடுபட்டமை இது ஒன்றும் முதல் தடவை அல்ல. முன்னரும் பல தடவைகள் இவ்வாறான பறப்புக்கள் அவதானிக்கப்பட்டிருகின்றன. ஆனால், இம்முறை அவதானிக்கப்பட்ட இந்த வானூர்திகள் கொழும்பை இலக்கு வைத்துத்தான் செல்கின்றன என்பதனை படைத்தரப்பால் ஊகிக்கமுடியாமல் போய் இருக்கலாம்.
கேள்வி: ஆனால், அதிமுக்கியத்துவம் வாய்ந்த கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் வானூர்தி எதிர்ப்பு ஏவுகணை சாதனங்கள் பொருத்தப்பட்டிருக்குமே. அவை ஒன்றும் இந்த வானூர்திகளை கண்டவுடனோ அல்லது ஒலியை கேட்டவுடனோ செயற்படவில்லையா?
பதில்: இது தொடர்பாகத்தான் வான் படையினர் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஏன் இந்த வானூர்திகள், ராடர் கருவியில் காண்பிக்கப்படவில்லை என்பது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. அவை முடிவடைந்த பின்னர்தான் விடயம் வெளிச்சத்துக்கு வரும். உண்மை நிலை தொடர்பாக இப்போதைக்கு எதுவும் தெரியவில்லை.
ஆனால் வானூர்தி நிலையத்தை அண்டிய பகுதி மக்கள் இந்த வானூர்திகளின் ஒலியை கேட்டுள்ளனர். அதேவேளை வானூர்தி நிலையத்திற்குள் குண்டுச் சத்தங்கள் மற்றும் வேட்டுக்கள் தீர்க்கப்பட்ட சத்தங்களையும் தம்மால் கேட்க முடிந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.
கேள்வி: விடுதலைப் புலிகள் முதன் முதலாக சிறிலங்காப் படையினருக்கு எதிராக தமது வான்படைப் பலத்தை பிரயோகித்துள்ளனர். இது எவ்வளவு தூரத்துக்கு ஈழப்போரில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதுகிறீர்கள்?
பதில்: இது விடுதலைப் புலிகளின் போராட்டத்துக்கு புதிய பரிமாணத்தை கொண்டு வந்துள்ளது. கடந்த இரு தசாப்தங்களாக அதாவது கடந்த வாரம் வரை இரு தரப்பினருக்கும் இடையிலான போர் தரையிலும் கடலிலுமே கூர்மையடைந்திருந்தது. தற்போது இந்த போரில் புதிய சக்தி ஒன்று உட்புகுந்துள்ளது. இந்த சவாலுக்கு முகம் கொடுத்தேயாக வேண்டிய கட்டாயத்துக்கு சிறிலங்கா அரச படையினர் தள்ளப்பட்டுள்ளனர். இது பிரச்சினைக்குள் இயல்பாகவே இன்னொரு பரிமாணத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கேள்வி: விடுதலைப் புலிகளின் ஊடகங்கள் தமது வானூர்திகள் மற்றும் வான் படையினர் குறித்த படங்களை வெளியிட்டுள்ளன. இதன் அடிப்படையில் விடுதலைப் புலிகள் எவ்வகையான தாக்குதல் வானூர்திகளை பயன்படுத்தியிருப்பார்கள் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
பதில்: ஆம். சில காலங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகள் வானூர்திகளை வாங்கியிருந்தனர் என்பதனையும், பின்னர் அவை எவ்வகையானவை என்பதனையும் நாம் தெரிந்து கொண்டோம். அதன்படி தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டது செக் ரக இசற் - 143 ரக வானூர்தியே விடுதலைப் புலிகளால் வாங்கப்பட்டிருந்தது. இதே வானூர்தியே தாக்குதலுக்கு பயன்டுத்தப்பட்டது என நான் நம்புகிறேன்.
கேள்வி: வான் புலிகள் படையணி அமைக்கப்பட்டு விட்டது என்றும் விடுதலைப் புலிகள் வானூர்தி ஓடுபாதை அமைத்துள்ளனர் என்றும் எத்தனையோ தடவைகள் நீங்கள் உங்களது பத்தியில் குறிப்பிட்டிருந்தீர்கள். அப்படி இருக்கையில் சிறிலங்கா அரசாங்கம் விடுதலைப் புலிகளின் வான் பலத்தால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தலை பொருட்படுத்தாது ஏன் அசாத்திய தைரியத்துடன் இருந்தது?
பதில்: இந்த விடயம் கடந்த திங்கட்கிழமை தாக்குதலுடன் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய தருணத்துக்கு வந்துள்ளது. பல தடவைகள் சண்டே ரைம்சில் இது பற்றி முன்னரே நான் எழுதி வந்திருந்தேன்.
ஓன்று: இரணைமடுக்குளத்துக்கு அண்மையாக விடுதலைப் புலிகள் வானூர்தி ஓடுபாதை அமைக்கப்பட்டமை.
இரண்டு: விடுதலைப் புலிகள் வானூர்திகளை வாங்கியமை.
இவை தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் அல்லது ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் என எதிர்பார்க்கப்பட்டதற்கு உரிய பாதுகாப்பு நடடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் இந்த ஆபத்தை முன்னரேமே தடுத்திருக்கலாம்.
கேள்வி: இந்த தாக்குதல் சிறிலங்காவின் அரசியல், இராணுவ, பொருளாதார துறைகளில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும்?
பதில்: நான் முதலில் கூறியதனைப் போல போர் ஒரு புதிய பரிமாணத்தை எடுத்தியுள்ளது. இராணுவத்தை பொறுத்தவரை இனிமேல் வான் வழியான அச்சுறுத்தல் எப்போதும் எங்கும் ஏற்படலாம். இராணுவ மற்றும் கடற்படைத் தளங்கள் பிரமுகர்களின் வதிவிடங்கள் என சகலதும் ஆபத்து வலயத்துக்குள் வந்துள்ளன. பொருளாதாரத்தை பொறுத்த வரை ஏற்பட்டுள்ள தாக்கத்தில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம், சீர்செய் நடவடிக்கைகளில் இறங்கவேண்டும்.
கேள்வி: நீங்கள் கொழும்பில் உயர்மட்டத்தினர் மற்றும் பலருடனும் தொடர்பு கொண்டிருப்பீர்கள். இந்த தாக்குதல் தொடர்பாக அவர்களிடம் இருந்து என்ன வகையான தாக்கத்தை நீங்கள் உணர்ந்தீர்கள்?
பதில்: எல்லோரிடமும் ஆச்சரியம் மேலோங்கியுள்ளதை காணக்கூடியதாக இருந்தது. எவருமே இந்த தாக்குதலை எதிர்பார்த்திருந்ததாக தெரியவில்லை.
கேள்வி: இந்த தாக்குதல் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் அரசியல் பலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதுகிறீர்களா?
பதில்: இந்த தாக்குதல் மட்டும் அவரது நிலைப்பாட்டில் பாரிய மாற்றம் எதனையும் ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை. தொடரப்போகும் போரின் அடிப்படையிலேயே அது தங்கியுள்ளது. விடுதலைப் புலிகளின் பலமிழந்து விட்டார்கள் என சிறிலங்கா அரசாங்கம் கூறிவருகின்ற வேளை கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற தாக்குதல் மேற்படி கேள்வியை எழுப்பியுள்ளது.
கேள்வி: விடுதலைப் புலிகள் கிழக்கில் இருந்து விரட்டப்பட்டு விட்டனர் என்றும் அவர்களது இதய பூமியான வன்னியில் தற்போது தாக்குதல் நடக்கின்றது என்றும் தென்னிலங்கை மக்களுக்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அறிவித்து வருகின்ற வேளையில், விடுதலைப் புலிகள் நடத்தியுள்ள இந்த அதிரடித்தாக்குதல், இன்றைய தினம் மட்டக்களப்பு செங்கலடி இராணுவ முகாம் மீதான தற்கொலைக்குண்டு தாக்குதல் உட்பட மகிந்தவின் அரசியல் பலத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா? இனிமேலும் அவரது அறிக்கைகளை தென்னிலங்கை சமூகம் ஏற்றுக்கொள்ள முன்வருமா?
பதில்: அவ்வாறான தாக்கம் எதுவும் ஏற்பட்டுள்ளதாக உடனடியாக, உறுதியாக, முடிவாக என்னால் எதுவும் கூறமுடியாது. ஆனால் இது ஒரு முக்கியமான கேள்வி. ஏனெனில் விடுதலைப் புலிகள் பலமிழந்து விட்டார்கள் என்று அரசாங்கம் ஒரு புறத்தில் மக்கள் மத்தியில் கூறிவருகின்ற வேளை, விடுதலைப் புலிகளோ அடுத்தடுத்து அதிரடித் தாக்குதல்களை நடத்தி, அண்மையில் தொப்பிக்கல காட்டுபகுதியில் இடம்பெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து கட்டுநாயக்க தாக்குதல், அதனை மக்களுக்கு அறிவிக்கையில் அரசாங்கத்தின் கருத்து குறித்து மக்கள் மத்தியில் முரண்பாடு தோன்றுகிறது. இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போரின் உண்மையான நிலை தொடர்பாக மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
கேள்வி: விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்கனவே அல்லது ஏறத்தாழ செத்துவிட்டது என்று கூறலாம். இந்த நிலையில் பரவலைடந்து வரும் வன்முறைகளுக்கு தற்போதைய நிலை போர் ஆரம்பப் புள்ளியாக அமையுமா அல்லது அது ஏற்கனவே ஆரம்பித்து விட்டதா?
பதில்: கடந்த இரண்டு மாதங்களாக இடம்பெற்று வரும் வன்முறைகளை, கடந்த திங்கட்கிழமை சம்பவம் உட்பட நோக்கினால் புரிந்துணர்வு ஒப்பந்தமானது எழுத்தில் மட்டுமே உள்ளதனை புலப்படுத்துகின்றது.
புதினம்.கொம்.
Wednesday, March 28, 2007
'வான் தாக்குதல் போராட்டத்திற்கு புதிய பரிமாணத்தை கொண்டு வந்துள்ளது': படைத்துறை ஆய்வாளர் இக்பால் அத்தாஸ்
Wednesday, March 28, 2007
No comments
Subscribe to:
Post Comments (Atom)






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.