Wednesday, March 21, 2007

இடம்பெயர்ந்த மக்களுக்கான உணவுத் தேவைகளுக்கு உதவுங்கள்: ஐ.நா

[புதன்கிழமை, 21 மார்ச் 2007]

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்று வரும் மோதல்களினால் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான உணவுத் தேவைகளுக்கும் ஏனைய அத்தியாவசியத் தேவைகளுக்கும் உதவுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்ட அமைப்பானது வேண்டுகோள் விடுத்துள்ளது.

மட்டக்களப்பில் இடம்பெயர்ந்துள்ள 155,000 மக்களுக்கும் உடனடியான அத்தியாவசியப் பொருட்கள் தேவைப்படுவதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

எங்களுக்கு மேலதிக நிதியுதவி கிடைக்காது போனால் எமது கையிருப்பில் உள்ள உணவுப் பொருட்கள் எதிர்வரும் ஏப்ரல் மாத முடிவில் தீர்ந்து போகும் என்று உலக உணவுத் திட்டத்தின் ஆசியப் பிராந்திய தலைவர் ரொனி பான்பெறி தாய்லாந்தின் தலைநகரான பாங்ஹொக்கில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

தற்போது எமக்கு மேலதிக உதவிகள் தேவைப்படுகின்றன, அவை முக்கியமானவை மற்றும் அவசரமானவை. இலங்கையில் போரினால் ஏற்பட்ட துன்பங்கள் தொடர்கின்றன. அனைத்துலக சமூகத்தின் உதவிகளும், ஆதரவுகளும் குறைவடையின் அது இடம்பெயர்ந்த மக்களை மேலும் காயப்படுத்தும்.

இலங்கைக்கான பொதுவான நடவடிக்கை திட்டத்தில் உணவு உதவிக்கு தேவைப்படும் நிதியில் 33 விகிதம் தான் கிடைத்துள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு மக்களுக்கும் குறிப்பாக சிறார்களுக்கும் பெண்களுக்கும் அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்கு எங்களால் முடிந்தவற்றை நாம் செய்யவேண்டும்.

கடந்த பல மாதங்களாக சிறிலங்காவின் கட்டடத்துறை மற்றும் அபிவிருத்தி அமைச்சின் ஊடாக மட்டக்களப்பில் உள்ள இடம்பெயர்ந்த 60,000 மக்களுக்கு உலக உணவுத் திட்டம் உணவு உதவிகளை வழங்கி வந்துள்ளது. ஆனால் தற்போது மட்டக்களப்பு மேற்கில் அதிகரித்திருக்கும் எறிகணைத் தாக்குதல்களால் மேலும் 95,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவும் பொருட்டு பணியாற்றும் உலக உணவுத் திட்ட அமைப்பு மற்றும் ஏனைய மனிதாபிமான நிறுவனங்களை மக்கள் தங்கியிருக்கும் இடங்களுக்கு தடையின்றி செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என சிறிலங்கா அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகளைக் கேட்டுக்கொள்கிறோம்.

சிறிலங்கா அரசாங்கத்துடன் நாம் உடன்பாட்டை மேற்கொண்டுள்ள ஒரு அமைப்பாக தொடர்ந்தும் பணியாற்றுவோம். முன்னணி இடங்களிலும் செயலாற்றுவோம், புதிய தேவைகளை நிறைவு செய்வதற்காக நாம் எமது சொந்த போக்குவரத்து வசதிகளை பயன்படுத்துவதுடன், ஏனைய அரச சார்பற்ற நிறுவனங்களுடனும் சேர்ந்து பணியாற்றுவதன் மூலம் எல்லா இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளையும் நிறைவு செய்வோம்.

புதிதாக இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவும் பொருட்டு நாம் சில மாவட்டங்களில் தாய்-சேய் ஊட்டச்சத்து திட்டம், பாடசாலை உணவுத்திட்டம் போன்றவற்றை நிறுத்தி வைத்துள்ளோம். 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்ட பகுதிகளில் நடைபெற்று வந்த வேலைக்கான உணவு என்னும் திட்டமும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் மோதல்கள் உக்கிரமடைந்ததை தொடர்ந்து உலக உணவுத் திட்டம் அதன் பணிகளை விரிவுபடுத்தி இருந்தது. மட்டக்களப்பில் மேற்கொண்டு வரும் உணவு உதவிகளை விட, 300,000 மக்களுக்கு மூன்று மாதங்களுக்கு போதுமான 13,400 தொன் உணவுகளை யாழ்ப்பாணம் உட்பட பல மாவட்டங்களுக்கு உலக உணவு அமைப்பு விநியோகம் செய்துள்ளது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.