Friday, March 23, 2007

எமது சொந்தப் பிரச்சினையை பார்க்க எமக்குத் தெரியும்: ஜே.வி.பி.

[வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2007]

எமது பிரச்சினைகளை பார்க்க எமக்குத் தெரியும் என்று ஐக்கிய நாடுகள் சபைக்கு ஜே.வி.பி. கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக நேற்று வியாழக்கிழமை ஜே.வி.பி. நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்திடம் கையளிக்க என கொடுக்கப்பட்ட கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அக்கடிதத்தில் ஜே.வி.பி கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்திருப்பதாவது:

நியூயோர்க்கில் இருந்து ஐக்கிய நாடுகள் சபையின் குழுவினர் இங்கு வருவதனை விடுத்து மிகவும் குறைந்த செலவில் அமெரிக்காவின் தடுப்புக்காவலில் உள்ள 25 விகிதமான அமெரிக்க, ஆபிரிக்கர்களின் நிலைமைகளை பார்வையிடுமாறு நாம் கோருகின்றோம்.

மேலும் அவர்கள் குவந்தானமோ தடுப்புக்காவல் முகாமிற்கும், அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத்துறையினால் இரகசியமாக நடத்தப்படும் தடுப்பு முகாம்களுக்கும் சென்று அங்கு அடிப்படை உரிமைகள் கூட இன்றி வாடும் ஆயிரக்கணக்கான மக்களை பார்வையிட வேண்டும்

சிறிலங்கா மிகவும் அபிவிருத்தியடைந்த ஒரு பொதுமக்கள் சமூகத்தை கொண்ட நாடு. இங்கு வர்த்தக சங்கங்கள், உயர்நிலை அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் என்பன உண்டு.

நாசிகளின் கொடுமையான இரண்டாம் உலகப்போருக்கு பின்னரே ஐக்கிய நாடுகள் சபை உதயமாகியது. சிறிலங்காவின் அரசியலிலும் இரண்டாம் உலகப்போரில் தோற்கடிக்கப்பட்டது போன்ற ஒரு குழுவாக விடுதலைப் புலிகள் உள்ளனர். அவர்கள் பயங்கரவாதிகள், தனி இனத்திற்கான ஒரு நாட்டுக்காக போராடி வருகின்றார்கள்.

இரண்டாம் உலகப்போர் முடிவடைந்து 60 வருடங்கள் கடந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் முதன்மைக் குரலாக தனி வல்லரசான அமெரிக்காவே உள்ளது. சிறிலங்காவில் உள்ள மூன்றாவது பெரும் அரசியல் கட்சியான நாங்கள் மனித உரிமை மீறல்களை எதிர்க்கிறோம்.

உலகில் எங்கு போர் இடம்பெறும் போதும் மனித உரிமைகள் மீறப்படுவது வழமை. போர்கள் இடம்பெறும் போது சில சட்ட விதிமுறைகளை கடைப்பிடிக்கப்பட வேண்டி இருந்தாலும் சில பெரும் வலுவுள்ள நாடுகளே அதனை மீறுவதுண்டு.

போர் விதிகளை நேரடியாக மீறியுள்ள அமெரிக்கா, ஈராக்கில் 700,000 மக்களை கொண்டு குவித்துள்ளது. சர்வாதிகாரியிடம் இருந்து நாட்டை மீட்பதாக அமெரிக்கா அதற்கு காரணம் கூறியுள்ளது. தமது உரிமைகளுக்காக போராடிய மக்களில் 2.5 விகிதமானவர்கள் ஈராக்கில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் கேட், சுனி, சியா என ஈராக் மக்கள் பிரிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய கிழக்கில் உள்ள பல சர்வாதிகார நாடுகளுக்கு எமது கட்சி கண்ணை மூடிக்கொண்டு ஆதரவுகளை வழங்கவில்லை. ஆனால் அவர்கள் அமெரிக்காவிற்கு ஆதரவு அளிக்கின்றனர். அதன் காரணம் எண்ணெய்க்காக அமெரிக்கா சர்வாதிகாரிகளை தெரிவு செய்கின்றது.

இந்த நாடகங்களில் ஐக்கிய நாடுகள் சபை மௌனம் சாதித்து வருகின்றது. சில சமயங்களில் அது அமெரிக்காவினதும் ஏனைய மேற்குலகத்தினதும் கருவியாகவும் தொழிற்படுகின்றது.

சிறிலங்காவின் அதிகாரியான ராதிகா குமாரசுவாமியினால் தான் அலன் றொக் இங்கு அனுப்பப்பட்டிருந்தார். சிறிலங்கா குடிமகனான இவர் தன்னை மனித உரிமை வாதியாக காட்டிக் கொள்கின்றார்.

அவர் கடந்த சில வருடங்களில் யாழ்ப்பாணத்தில் இருந்திருப்பார் என நாம் நினைக்கவில்லை. இங்கு சம்பவங்கள் இடம்பெறும் போது அவர் அமைதியாகவே இருந்துள்ளார். அன்று அரச ஆதரவு பெற்ற குழுக்கள் 1980 களின் இறுதியில் ஒரு லட்சம் மக்களை தென்னிலங்கையில் கொன்று குவித்திருந்தனர்.

விடுதலைப் புலிகளுக்கு நேரடியற்ற முறையில் ஆதரவளிக்கக் கூடிய அலன் றொக்கின் தவறான அறிக்கைக்கு அவர் ஆதரவு கொடுத்தது வெளிவந்துள்ளது என்றார் அவர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.