Tuesday, March 27, 2007

அமைதி முயற்சிகளை நிறுத்துங்கள்- விடுதலைப் புலிகளை சிதறடியுங்கள்: ஜே.வி.பி

[செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2007]

போர் நிறுத்த உடன்பாடே விடுதலைப் புலிகள் வானூர்திகளை கொள்வனவு செய்வதற்கும், வான்படைத் தளம் மீது தாக்குதல் நடத்துவதற்கும் காரணமாக அமைந்தது. அரசாங்கம் தவறான அதிகாரப்பகிர்வு என்ற கொள்ளையை விடுத்து விடுதலைப் புலிகளை நசுக்க வேண்டிய தருணம் இதுவே என்று ஜே.வி.பியின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பொரளையில் நேற்று நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டாவறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

அரசாங்கம், ஒரு காலை அமைதி முயற்சிகளிலும் மறுகாலை விடுதலைப் புலிகளை ஒழிக்கும் நடவடிக்கையிலும் வைத்துள்ளது. ஆனால் விடுதலைப் புலிகளை ஓடுக்கும் முயற்சியில் திடமான நடவடிக்கை தேவை.

விடுதலைப் புலிகளின் நேற்றைய தாக்குதல் சரணடையப் போகின்றீர்களா அல்லது சண்டையிடப் போகின்றீர்களா என அரசாங்கத்துக்கு விடுக்கப்பட்ட செய்தியாகும். அரசாங்கம் அதில் சண்டையை தான் தேர்ந்தெடுக்க வேண்டும். இனப்பிரச்சனைக்கு போர் தீர்வாகாது என்ற அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்களுக்கு தற்போது அரசாங்கம் பணியக்கூடாது. ஏனெனில் தற்போது சமர் உக்கிரமடைந்துள்ளது.

போர் நிறுத்த உடன்பாடே விடுதலைப் புலிகள் வானூர்திகனள கொள்வனவு செய்வதற்கு காரணமாக அமைந்தது. மேலும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உலங்குவானூர்தி மற்றும் போக்குவரத்து வசதிகள் மூலம் அவர்கள் வானூர்தியின் உதிரிப்பாகங்களை வடபகுதிக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இதனை கருணாவும் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியிருந்தார் என தெரிவித்தார்.

இதனிடையே போர் எதிர்ப்பு அமைப்புக்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் எல்லாவற்றையும் விடுதலைப் புலிகளின் நண்பர்களாகவே அரசாங்கம் கருத வேண்டும் என தேசிய பாதுகாப்புச் சபையின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக படையினருக்கு முழு ஆதரவுகளும் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.