Wednesday, March 28, 2007

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய பதவி விலக வேண்டும்: ஐ.தே.க

[புதன்கிழமை, 28 மார்ச் 2007] தமிழீழ விடுதலைப் புலிகளினால் நடத்தப்பட்ட வான்தாக்குதலானது அரசாங்கத்தின் தவறான தகவல்களையும், உண்மையான கள நிலைமையையும் எடுத்துக்கூறியுள்ளது. எனவே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச பதவிவிலக வேண்டும் சிறிலங்காவின் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளதாவது: கட்டுநாயக்கா வான்படைத் தளத்தின் பாதுகாப்பிற்கு தான் முழுமையான பொறுப்பை ஏற்பதாக கோத்தபாய ராஜபக்ச கடந்த வாரம் தெரிவித்திருந்தார். மேலும் போரில் 95 விகிதங்களை வென்றாகி விட்டது எனவும் கூறியிருந்தார். எனவே அவருக்கு சுயமரியாதை ஏதும் இருப்பின் அவர் உடனடியாக பதவிவிலக வேண்டும். தாக்குதல் நடத்தப்படுவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்னர் விடுதலைப் புலிகளின் வானூர்திகள் அவதானிக்கப்பட்டிருந்தன. தாக்குதலின் பின்னரும் அது தளத்திற்கு திரும்பிச் செல்ல ஒரு மணிநேரம் எடுத்துள்ளது எனவே வானூர்தியை ரடாரில் அவதானிக்கவில்லை என முட்டாள்த்தனமான காரணங்களை கோத்தபாய ராஜபக்ச கூறமுடியாது. விடுதலைப் புலிகளின் வான்படை 1998 ஆம் ஆண்டு உருவாக்கம் பெற்றிருந்தது. அதனால் தான் முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா நாடாளுமன்ற கட்டடத்திலும், அரச தலைவர் மாளிகையிலும் விமான எதிர்ப்புப் பீரங்கிகளை நிறுவியிருந்தார். எதிர்கால நிலைமைகளை கருத்தில் எடுக்காது அரசாங்கம், நாட்டை யாருமே விரும்பாத போருக்குள் தள்ளியள்ளது. எனவே மேலும் தாமதிக்காது அரசாங்கம், உடனடியாக பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும் என்றார் அவர்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.