Monday, March 26, 2007

உன்னிச்சைப் பகுதியில் கடும் மோதல் வெடித்தது

[திங்கட்கிழமை, 26 மார்ச் 2007] மட்டக்களப்பு படுவான்கரையில் உன்னிச்சைப் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே கடும் சமர் வெடித்துள்ளது. படுவான்கரையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில், மட்டுநகருக்கு மேற்கே உன்னிச்சை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நேற்று மாலை 3.45 மணியளவில் கடும் மோதல் வெடித்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. உன்னிச்சை மற்றும் அதனை அண்டிய பகுதிகளை நோக்கி படை முகாம்களிலிருந்து கடும் ஷெல் தாக்குதலும் பல்குழல் ரொக்கட் தாக்குதல்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கையில், படையினருக்கும் புலிகளுக்குமிடையே கடும் நேரடிச் சமர் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அம்பாறை புளுக்குணாவ விசேட அதிரடிப்படை முகாமிலிருந்தும் அதனை அண்டிய காட்டுப் பகுதிகளினூடாகவும் பவள் கவச வாகனங்கள் சகிதம் முன்னேறிய படையினருடன் புலிகள் நேரடி மோதலில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உன்னிச்சைப் பகுதிவரை பாரிய எதிர்ப்பெதுவுமின்றி வந்த படையினர் அங்கிருந்து காட்டுப்பகுதிகளூடாக மேலும் முன்னேற முயன்றபோதே கடும் சமர் வெடித்துள்ளது. இருதரப்பும் நேரடி மோதலில் ஈடுபடும் சத்தம் மட்டுநகர் வரை கேட்கக்கூடியதாயிருந்ததாகவும் நகர்ப்புற மக்கள் தெரிவிக்கின்றனர். முன்னேற முயலும் படையினருக்கு ஆதரவாக புளுக்குணாவ, மகா ஓயா படை முகாம்களிலிருந்தும் அம்பாறை எல்லைப்புற முகாம்களிலிருந்தும் கடும் ஷெல் தாக்குதல்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. இதேநேரம், மட்டுநகரிலும் படை முகாம்களிலிருந்தும் மோதல்கள் நடைபெறும் இடங்களை அண்டிய பகுதிகளை நோக்கி ஷெல் மற்றும் பல்குழல் ரொக்கட் தாக்குதல்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. நேற்று மாலை மட்டக்களப்பு புதூர் பகுதியிலுள்ள விமான நிலையம் மீது புலிகள் ஷெல் தாக்குதலை நடத்தியுள்ளனர். உன்னிச்சைப் பகுதியில் இருதரப்புக்குமிடையிலான மோதல் இரவும் தொடர்ந்தது. இரு தரப்பும் மிக உக்கிரமாக மோதின. எனினும், இந்த மோதல்களால் ஏற்பட்ட இழப்புகள் குறித்த விபரமெதுவும் உடனடியாகத் தெரியவரவில்லை.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.