Sunday, March 25, 2007

(3 ஆம் இணைப்பு) கட்டுநாயக்கா வான்படைத் தளம் மீது விடுதலைப் புலிகள் வான் தாக்குதல்.


[திங்கட்கிழமை, 26 மார்ச் 2007]

சிறிலங்கா கட்டுநாயக்க வான்படைத் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் இரு வானூர்திகள் இன்று திங்கட்கிழமை அதிகாலை 12.45 மணியளவில் தாக்குதல்களை நடத்திவிட்டு பாதுகாப்பாக வன்னித் தளத்திற்கு திரும்பிவிட்டதாக விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.



வான்படையினரின் கிபீர் மற்றும் மிக் ரக வானூர்திகளின் தரிப்பிடங்களே தாக்குதல் இலக்குகளாக இருந்ததாகவும், எதிர்காலத்தில் படையினரின் கேந்திர நிலையங்களின் மீதும் தாக்குதல் நடத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

சிறிலங்கா வான்படையைச் சேர்ந்த 12 பேர் காயமடைந்த நிலையில் நீர்கொழும்பு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 17 பேர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்கா வான்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வான் படைத்தளம் பகுதி ஒரே புகைமண்டலமாக காட்சியளிப்பதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலைத் தொடர்ந்து அனைத்து வான் சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டு, யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்பதுடன், அங்கிருந்தும் யாரும் வெளியேறவும் அனுமதிக்கப்படவில்லை.

வான் நிலையத்துக்கான அனைத்து பாதைகளும் பாதுகாப்புக் காரணங்களுக்காக மூடப்பட்டு அப்பகுதிக்கு மேலதிக படையினர் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்படுவதாகவும், விடுதலைப் புலிகளின் வானூர்திகளை தமது வான்படை தேடி வருவதாகவும் சிறிலங்கா வான்படையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் ஆரம்பித்தவுட்ன தமது வான் எதிர்ப்பு சாதனங்கள் இயங்கியதாகவும் வான் படையின் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

சிறிலங்காவை நோக்கி வரும் விமானங்கள் அனைத்தும் இந்தியாவின் தமிழ்நாட்டின் சென்னை வான் நிலையத்துக்கு திருப்பி விடப்படுவதாகவும், இன்று காலை 8.30 மணிவரை வான் சேவைகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தாக்குதல் தொடங்கிய பின்னர் வான் நிலையத்தில் உள்ள பயணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டதாகவும், இத் தாக்குதலில் 2 உலங்கு வானூர்திகளும் வானூர்திகள் தரித்து வைக்கப்படும் இடம் ஒன்றும் சேதமடைந்துள்ளதாக அனைத்துலக ஊடக நிறுவனம் தெரிவிக்கின்றது.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.