[வியாழக்கிழமை, 29 மார்ச் 2007]
சிறிலங்காப் படையினரின் கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது கடந்த திங்கட்கிழமை தமிழீழ வான்படை நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து நாட்டின் தற்போதைய நெருக்கடியான நிலமை தொடர்பாக விவாதிப்பதற்கு நாடாளுமன்றத்தை கூட்டவேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி விடுத்த வேண்டுகோளை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
நாட்டில் குண்டுகள் வெடிக்கும் ஒவ்வொரு சமயமும் நாடாளுமன்றத்தைக் கூட்டமுடியாது என்று சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றத் தலைவரும் அமைச்சருமான நிமால் சிறிபால டீ சில்வா நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயற்சி செய்கின்றது, இது முழுக்க அரசியல் நோக்கம் கொண்டது. ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்டபடி நாடாளுமன்றம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூடவுள்ளது. கட்டுநாயக்க வான்படைத் தளம் மீதான தாக்குதலுக்கு தேசிய அளவில் அவசரமாக நாடாளுமன்றத்தை கூட்டவேண்டிய அவசியம் இல்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தாக்குதல் இடம்பெற்ற சிறிது நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்கவிற்கு எழுதிய கடிதத்தில் நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்ளும் படியும், சபாநாயகர் டபிள்யூ. ஜே.எம்.லொக்கு பண்டாரவை இது தொடர்பாக கேட்கும் படியும் எழுதியிருந்தார். ஆனால் லொக்கு பண்டாரா தற்போது நாட்டில் இல்லை.
சபாநாயகருக்கு பதிலாக பிரதி சபாநாயகர் நாடாளுமன்றத்தை கூட்டலாம் என நாடாளுமன்ற பொதுச் செயலாளர் நாயகம் பிரியானி விஜயசேகர தெரிவித்திருந்தார்.
ஆனால் நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டிய தேவையில்லை என ஜே.வி.பியும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஜே.வி.பியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்ததாவது:
விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை பயன்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சி அரசியல் லாபங்களை அடைய முற்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு அனுகூலங்களை ஏற்படுத்தும் முகமாக இந்த கட்சியால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை யாரும் கவனத்தில் கொள்ளத் தேவையில்லை.
அவசரமாக நாடாளுமன்றத்தை கூட்டுவதன் மூலம் எமக்குள்ள பிரச்சனைகளை தீர்க்க முடியாது. நாடாளுமன்றம் ஏப்பிரல் 3 ஆம் நாள் கூட உள்ளதால் அதற்கு முன்னதான கூட்டம் தேவையில்லை என்று தெரிவித்தார்.
ஜனநாயக நாடுகளில் அவசரமான நிலைமைகளில் நாடாளுமன்றத்தை கூட்டி நிலைமைகளை ஆராய்வது வழக்கமானது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
எந்தக் காரணங்களை கொண்டும் இந்தப் பிரச்சனையில் இருந்து விலகிச் செல்லுதல் ஏற்றுக்கொள்ள முடியாதது. வரலாற்றில் இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் எல்லா கட்சிகளும் கலந்து ஆலோசிப்பது வழமை. நாடாளுமன்றம் மக்களின் ஜனநாயக முறைமைகளுக்கு பொறுப்பானது.
எனவே நாட்டின் நலனுக்காக நாம் இந்த பிரச்சனையை விவாதிக்க வேண்டும். இந்த ஆபத்தான நிலைமைகளை சமாளிக்க முடியாததால் அரசு தனது தலையை மறைக்க முற்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.






0 kommentarer:
Post a Comment
உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!
நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.