Saturday, March 03, 2007

அரசின் இரகசிய உடன்பாடு தொடர்பாக விசாரணை தேவை: ஐ.தே.க.

[சனிக்கிழமை, 3 மார்ச் 2007] "சிறிலங்கா அரச தலைவர் தேர்தலின் போது விடுதலைப் புலிகளுடன் அரசு செய்து கொண்ட ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற விசாரணைக்குழுவை அமைக்க வேண்டும்." முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர மற்றும் சிறீபதி சூரியாராச்சி ஆகியோர் நாடாளுமன்ற சபாநாயகரான லொக்கு பண்டாரவிடம் மேற்கண்ட வேண்டுகோளை விடுத்திருக்கின்றனர். மேலும் இவர்களின் இக்கோரிக்கைக்கு ஆதரவாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளதாவது: "இக்குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது. இது அரசிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரனையை கொண்டுவர போதுமானது. எனவே நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாகிய நாம் இதற்கு எதிராக மக்களுடன் இணைந்து நிற்போம்." என்றார். கடந்த வியாழக்கிழமை இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது தொடர்பான விசாரணைகளுக்கு நாடாளுமன்ற விசாரணைக் குழுவை அமைக்கக் கோரும் கடிதத்தை நாடாளுமன்ற பொதுச் செயலாளரிடம் கையளித்துள்ளனர். இதனிடையே "நாடாளுமன்ற விசாரணைக் குழுவை அமைப்பதற்கு தாம் எதிர்ப்பு தெரிவிக்கப்போவதில்லை" என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருக்கின்றது. "இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அது விடுதலைப் புலிகளை விட அரசின் நம்பகத்தன்மையை தான் அதிகளவில் பாதிக்கும்" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். எனினும் "விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பெண்கள், மது, பணம், பதவி போன்றவற்றிற்கு ஆசைப்படும் தலைவரல்ல. இந்திய - சிறிலங்கா ஒப்பந்தம் கைச்சாத்தான பின்னர் காலம் சென்ற முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் இவ் வழிகளில் அவரை கொண்டுவர முனைந்து தோல்வியையே தழுவியிருந்தார்" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மா.க.ஈழவேந்தன் தெரிவித்தார். புதினம்.கொம்.