Saturday, March 03, 2007

சிறிலங்காப் படையினரே அதிகளவான படுகொலைகளில் ஈடுபடுகின்றனர்: நீதியாளர்கள் சபை.

[சனிக்கிழமை, 3 மார்ச் 2007] சிறிலங்காவில் பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டங்கள் மிகவும் பரந்த முறையிலும் திட்டமிட்ட வகையிலும் மனித உரிமை மீறல்களை மேற்கொள்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன. மேலும் சிறிலங்கா அரசின் படையினர் பெருமளவான படுகொலைகளையும், சித்திரைவதைகளையும் மேற்கொண்டு வருகின்றனர் என அனைத்துலக நீதியாளர்கள் சங்கம் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்திருக்கின்றது. ஜெனீவாவை தளமாகக் கொண்டு இயங்கிவரும் அனைத்துலக நீதியாளர்கள் சங்கம் பயங்கரவாதம், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் என்பவை நாடுகளின் சட்ட ஒழுங்குகள் மற்றும் மனித உரிமைகள் போன்றவற்றில் ஏற்படுத்தும் விளைவுகளை ஆராயும் நோக்குடன் ஒரு சபையை 2005 ஆம் ஆண்டு நிறுவியிருந்தது. இந்த சபையானது கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவிற்கான தனது பயணத்தை நிறைவு செய்திருந்தது. இவர்களின் இந்தியப் பயணத்தின் போது நேபாளம், சிறிலங்கா, பங்களாதேஸ், மாலைதீவு போன்ற நாடுகளில் பாதிக்கப்பட்ட மக்கள், பொது அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள், பிரதிநிதிகள் போன்றவர்களை சந்தித்திருந்தனர். எனினும் இந்த நாடுகளில் சிறிலங்காவில் மட்டும் தான் முழு அளவிலான ஆயுத மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இது தான் அங்கு நிகழும் கடுமையான வன்முறைகளுக்கு காரணம் என இக் குழுவின் தலைவர் ஆதர் சஸ்கல்சன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது: இரு தசாப்தங்களாக இடம்பெற்று வந்த இனப்போரானது போர்நிறுத்த ஒப்பந்தம் முறிவடையும் நிலையில் உள்ளதால் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. கடந்த 15 மாதங்கள் இடம்பெற்ற மோதல்களில் 4,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். படுகொலைகள், சித்திரைவதைகள், காணாமல் போகச் செய்தல், சந்தேகத்தின் பேரில் கைது செய்தல் என்பன சிறிலங்காப் படையினரால் தான் மேற்கொள்ளப்படுகின்றன. மீண்டும் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடுப்புச்சட்டம், அவசரகாலச்சட்டம் என்பனவே மிகவும் அதிகளவான குற்றங்களை புரிவதற்கு காரணமாக அமைந்துள்ளதுடன் மனித உரிமைகள் பெருமளவில் மீறப்படுவதற்கும் உந்துசக்தியாக உள்ளன. எமது சபைக்கு சிறிலங்கா அரசின் பிரதிநிதிகளை சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார். புதினம்.கொம்.