Friday, March 23, 2007

கிருலப்பனையில் ஆயுதங்களுடன் கருணா குழுவினர்.

[வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2007] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு கிருலப்பனைப் பகுதியில் உள்ள தமது அரசியல் அலுவலகங்களுக்கு வெளியில் கருணா குழுவினர் ஆயுதங்களுடன் நடமாடுவதாக பொல்கென்கொட பகுதியில் உள்ள அந்தரவத்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இத்தகவலை கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில ஊடகம் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டிருக்கின்றது. அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டினை கருணா குழுவினரும் கிருலப்பனை காவல்துறையினரும் மறுத்திருக்கின்றனர். கடந்த சில நாட்களாக பிந்திய மாலை வேளைகளில் தமது அலுவலகத்திற்கு வெளியே ஆயுதங்களுடன் வரும் கருணா குழுவினர், அப்பகுதி மக்களுடன் உரையாடிவிட்டு மீண்டும் அலுவலகத்துக்குள் செல்வதாக அப்பகுதி வாசி ஒருவர் தெரிவித்துள்ளார். கருணா குழுவினரின் காரியாலயத்திற்கு காவல் கடமையில் உள்ள படையினரை தவறாக கருணா குழுவினர் என எண்ணியதுண்டா என தகவல் தந்தவரை கேட்ட போது அவர் தாம் ஆயுதங்களுடன் கண்டது கருணா குழு உறுப்பினரையே என்று தெரிவித்தார். கருணா குழுவினர் கொள்ளுப்பிட்டியில் இருந்த தமது அலுவலகத்தை அண்மையில் பொல்கென்கொடவுக்கு மாற்றியிருந்தனர். இது அப்பகுதி மக்களை சினம் கொள்ள வைத்துள்ளது. எனினும் கருணா குழுவினரிடம் ஆயுதங்கள் இல்லை எனவும், அவர்கள் அரசியல் பணிகளிலேயே ஈடுபட்டு வருகின்றனர் என்று கிருலப்பனை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொழும்பில் ஆயுதங்களுடன் காணப்படுபவர்கள் படையினரே என்றும் அவர்கள் தான் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு பாதுகாப்பை வழங்கி வருபவர்கள் என்றும் கருணா குழுவினர் தெரிவித்தனர். கருணா குழுவினர் இங்கு இருப்பது தமக்கு கவலையை தருவதாகவும், விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் இப் பகுதிகளில் இடம்பெறலாம் என்ற அச்சமும் தங்களிடம் நிலவுவதாகவும் அந்தரவத்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பு புறக்கோட்டைப்பகுதி வர்த்தகர்களை கருணா குழு பணப்பறிப்புக்காக கடத்தி வருவதாக அரசாங்கத்திடம் அவர்கள் முறையிட்டதைத் தொடர்ந்து. தாம் கருணா குழுவின் சட்டரீதியற்ற செயற்பாடுகள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் அண்மையில் தெரிவித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. புதினம்.கொம்.

0 kommentarer:

Post a Comment

உங்களுடைய கருத்தை தெருவிக்கவும்!

நீங்கள் உங்கள் கருத்தை எழுதும் பொழுது தயவுசெய்து முடிந்தவரை தமிழில் எழுதவும்.